டரோவ்பா: ஐசிசி டி20 உலக கோப்பையின் 26வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-நியூசிலாந்து அணிகள் மோதின. டிரினிடாட்டின் டரோவ்பா நகரில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் முதலில் பேட்டிங் செய்த வெ.இ வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். இடையில் பூரன் 17, ஹோசின் 15, ரஸ்ஸல் 14, ஷெபார்டு 13ரன் எடுத்து கொஞ்சம் ஸ்கோரை உயர்த்தினர்.
மற்றவர்கள் இன்னும் மோசமாக விளையாட, மறுமுனையில் பொறுப்பாக விளையாடிய ஷெர்ஃபன் ரூதர்போர்டு அரைசதம் விளாசினார். அதனால் வெ.இ 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 149ரன் என கவுரவமான ஸ்கோரை எட்டியது. ரூதர்போர்டு 68(39பந்து, 2பவுண்டரி, 6 சிக்சர்) ரன்னுடன் கடைசி வரை களத்தில் இருந்தனர். நியூசி தரப்பில் போல்ட் 3, சவுத்தீ, பெர்கூசன் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
தொடர்ந்து 150ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கியது நியூசி.
அந்த அணியிலும் கான்வே, கேப்டன் கேன் உட்பட பலரும் ஏமாற்றமளித்தனர். அதே நேரத்தில் பிலிப்ஸ் 40(33பந்து, 3பவுண்டரி, 2சிக்சர்), ஆலன் 26(23பந்து, 3பவுண்டரி, 1சிக்சர்) ரன் எடுத்து ஸ்கோர் உயர உதவினர். ஆனாலும் நியூசியால் 20ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் நியூசி 13 ரன் வித்தியாசத்தில் 2வது தோல்வியை சந்தித்தது.
நியூசி வீரர் சான்ட்னர் 21(12பந்து, 3சிக்சர்) ரனனுடன் களத்தில் நின்றார். வெஇ வீரர்கள் அல்ஜாரி 4, குடகேஷ் 3 விக்கெட் அள்ளினர். ஆட்டநாயகனாக ரூதர்போர்டு தேர்வானார். இந்த ஹாட்ரிக் வெற்றியின் மூலம் போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி சி பிரிவில் இருந்து முதல் அணியாக சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது.