சென்னை: சென்னையில் செஞ்சுரி என்ற பெயரில் காலணிதயாரிக்கும் நிறுவனத்திற்கு சொந்தமாக 5.5 ஏக்கர் நிலம் திருப்போரூரில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது. இதன் மதிப்பு ரூ.300 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. இதனால் இந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ய பல கும்பல்கள் தொடர்ந்து முயன்று வந்துள்ளன. இதுகுறித்து அந்த நிறுவனத்துக்கு தெரிந்ததும், திருப்போரூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தடை மனு கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் திருப்போரூர் சார்பதிவாளராக இருந்த நவீனிடம் ஒரு கும்பல், பல கோடி ரூபாய் தருவதாக ஆசைவார்த்தைகளை கூறி போலியான ஆவணங்களை வைத்து பதிவு செய்து தரும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர் மறுத்துள்ளார். அதை தொடர்ந்து ஓரிரு நாளில் அவர் மாற்றப்பட்டார். திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சார்பதிவாளர் நியமிக்கப்படாமல் இருந்தது. மதுராந்தகத்தில் சார்பதிவாளராக உள்ள கணேசனை பொறுப்பு சார்பதிவாளராக செங்கல்பட்டு மாவட்ட பதிவாளர் அறிவழகன் நியமித்து உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து, அறிவழகனின் அலுவலகத்தில் ஜூனியர் உதவியாளராக இருந்த சதீஷ்குமாரையும் திருப்போரூர் அலுவலகத்துக்கு அவர் மாற்றினார். இந்நிலையில் போலி ஆவணங்களைக் கொண்டு ஒரு கும்பல் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் செஞ்சுரி நிறுவனம், வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்பனை செய்ததுபோல விற்பனை செய்துள்ளனர். அதில் சார்பதிவாளராக இருந்த கணேசன், அந்த நிலத்தை பதிவு செய்துள்ளார்.
பின்னர் அவர் அந்த நிலத்துக்கான ஆவணத்தை வழங்காமல் பதிவை நிறுத்தி வைத்து விட்டு விடுமுறையில் சென்று விட்டார். இந்த பதிவை ரத்து செய்யும்படி சென்னை மண்டல டிஐஜி உத்தரவிட்டுள்ளார். வழக்கமாக சார்பதிவாளர் இல்லாவிட்டால் உதவியாளர் பதிவு பணியில் ஈடுபடலாம். ஆனால் உதவியாளராக இருந்த சக்தி பிரகாஷ், திடீரென விடுமுறையில் சென்றார். இதனால் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று பணிக்கு வந்த சார் பதிவாளர் கணேசன், ஜூனியர் உதவியாளராக உள்ள சதீஷ்குமாரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
அவரோ, அதிகாலை 6 மணிக்கு நிறுத்தி வைத்திருந்த ஆவணங்களை விடுவித்து உத்தரவிட்டார். இதன்மூலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திட்டமிட்டு அதிகாரிகள் கணேசன், சதீஷ்குமார், சக்திபிரகாஷ் ஆகியோர் கூட்டு சேர்ந்து செயல்பட்டுள்ளனர். இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அமைச்சர் மூர்த்தி உத்தரவின்பேரில், பதிவுத்துறை ஐஜி ஆலிவர் பொன்ராஜ் விசாரணை நடத்தினார்.
விசாரணையில், சார்பதிவாளர் கணேசன், உதவியாளர்கள் சதீஷ்குமார், சக்திபிரகாஷ் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை ஐஜி ஆலிவர் பொன்ராஜ் நேற்று உத்தரவிட்டார். அதேபோல, வேலூர் மண்டலம் குடியாத்தம் பதிவுத்துறையில் பணியாற்றிய உதவியாளர் சிவக்குமார் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்ததால், அவரையும் சஸ்பெண்ட் செய்து பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார்.