கடையம்: கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பைசூல் ராணி (45) பொறுப்பு சார்பதிவாளராக உள்ளார். லஞ்ச புகார் தொடர்பாக தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று முன்தினம் மாலை கடையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அங்கிருந்த கணக்கில் வராத ரூ.1.59 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றினர். இதுகுறித்து சார்பதிவாளர் (பொ) பைசூல் ராணி மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து நேற்று காலை அம்பாசமுத்திரம் அய்யனார் கோவில் தெருவில் உள்ள பைசூல்ராணியின் வீட்டில் தென்காசி லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். காலை 7.45 மணி முதல் மதியம் வரையில் நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.45 ஆயிரம் சிக்கியது. முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளன. இது குறித்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து உள்ளனர்.