பெங்களூரு: சிறுமி ஒருவருக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பெண்ணின் தாய் பெங்களூரு போலீசில் கடந்த மார்ச் மாதம் புகார் செய்தார். இது தொடர்பாக சிஐடி போலீஸ் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில், எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி எடியூரப்பாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மீண்டும் விசாரணைக்கு அழைத்தபோது, தான் டெல்லியில் இருப்பதாகவும் ஜூன் 17ம் தேதி நேரில் ஆஜராகுவதாக கூறி காலஅவகாசம் கேட்டு எடியூரப்பா கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் சிஐடி போலீசார், எடியூரப்பாவுக்கு கைது வாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என்று கோரி பெங்களூரு 1வது விரைவு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அம்மனு நேற்று மாலை விசாரணைக்கு வந்தது.
சிஐடி போலீசார் தாக்கல் செய்த மனுவை ஏற்று கொண்ட நீதிமன்றம், எடியூரப்பா ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதன் மூலம் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படும் வாய்ப்புள்ளதாக போலீஸ் வட்டாரம் மூலம் தெரியவருகிறது. இதற்கிடையே முன்ஜாமீன் வழங்ககோரி, தனது வழக்கறிஞர் மூலம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா நேற்று மனுதாக்கல் செய்துள்ளார். அம்மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
* தலைமறைவு
கடந்த ஒருவாரமாக டெல்லியில் இருக்கும் எடியூரப்பா, அங்குள்ள அவரது மகனும் எம்பியுமான ராகவேந்திரா வீட்டில் தங்கியுள்ளார். நேற்று காலை சிற்றுண்டி மற்றும் பகல் உணவு மகன் வீட்டில் சாப்பிட்டுள்ளார். மாலையில் அவருக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் துரிதமாகிய தகவல் கிடைத்ததும், யாருடைய தொடர்பிலும் இல்லாமல் ரகசியமான இடத்திற்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.