தண்டையார்பேட்டை: விடுமுறை தராத ஆத்திரத்தில் பணிமனை அதிகாரியை தாக்கிய அரசு பஸ் டிரைவர் மற்றும் அவரது நண்பர் ஆகிய 2 பேரை புது வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (52). இவர் தண்டையார்பேட்டை பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே பணிமனையில் கிளர்க்காக இருப்பவர் ஆறுமுகம் (47). கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆறுமுகத்திடம், கோபாலகிருஷ்ணன் விடுமுறை கேட்டுள்ளார். ஆனால், ஆறுமுகம் விடுமுறை தர மறுத்துள்ளார். இதனால் அவர் மீது கோபாலகிருஷ்ணன் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், தனது நண்பர் ராமு (47) என்பவருடன் போதையில் சென்று, நேற்று முன்தினம் தகாத வார்த்தையால் திட்டி, ஆறுமுகத்தை கோபாலகிருஷ்ணன் அடித்துள்ளார். இதுகுறித்து பணிமனை உதவி மேலாளர் ஜான்சன் எட்வர்ட் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கோபாலகிருஷ்ணன், ராமு ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், அத்துமீறி நுழைதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.