ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநில அமைச்சராக மோகன் மார்க்கம் நேற்று பதவியேற்றார். காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சட்டீஸ்கரில் இந்தாண்டு இறுதியில் சட்ட பேரவை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகி வரும் நிலையில் கடந்த 12ம் தேதி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த மோகன் மார்க்கம் மாற்றப்பட்டு தீபக் பைஜ் எம்பி நியமிக்கப்பட்டார். நேற்றுமுன்தினம் கல்வி அமைச்சர் பிரேம் சாய் சிங் டெக்கம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், மோகன் மார்க்கம் நேற்று அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பிஷ்வபூஷன் ஹரிசந்தன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 2 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட மோகன் மார்க்கம் பழங்குடி சமூகத்தினரின் முக்கிய தலைவர் ஆவார்.