டெல்லி: பீகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பங்கு வகிக்க இருப்பதாக பீகார் அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த நிதிஷ் குமார், 2 ஆண்டுகளுக்கு முன் கூட்டணியை முறித்து கொண்டார். பாஜக கூட்டணியை உதறிவிட்டு ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்தார்.
எதிர்க்கட்சிகள் உருவாக்கிய இந்தியா கூட்டணியில் முக்கிய பங்காற்றிய நிதிஷ் குமார் தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன் கூட்டணியில் இருந்து வெளியேறினார். இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ் குமார் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். பாஜக ஆதரவில் மீண்டும் முதல்வராக பதவியேற்ற நிலையில், தற்போது முதல்வர் பதவியை பாஜகவுக்கு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் நிதிஷ் குமார் டெல்லி சென்றுள்ளார்.
பிரதமர் மோடியை சந்தித்த நிதிஷ் குமார், இன்று மாலை மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 1999ம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில், நிதிஷ் குமார் ஒன்றிய அமைச்சராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.