மும்பை: வெற்றிக் கொண்டாட்டத்தின் போது டெல்லி, மும்பையில் பட்டாசு வெடிக்க தடை விதித்து இந்திய கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் காற்றின் மாசு அதிகரித்து வருவதால், காற்றுத் தரக் குறியீடு மோசமடைந்துள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட இரு நகரங்களிலும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடப்பதால், வெற்றி பெற்ற அணியின் ரசிகர்கள் அதிகளவு பட்டாசு வெடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு பட்டாசு வெடிக்கும் பட்சத்தில் இரு நகரங்களிலும் மேலும் காற்றின் மாசு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதனால் இரு நகரங்களிலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கவுன்சில் செயலாளர் ஜெய் ஷா அளித்த பேட்டியில், ‘மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் காற்றின் மாசு காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் உலக கோப்பை போட்டிகளின் போது இந்த நகரங்களில் பட்டாசு, வாணவேடிக்கை நடத்த தடை விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஐசிசியிடம் முறைப்படி தெரிவித்துள்ளோம். சுற்றுச்சூழல் பிரச்னைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.