காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் மண்டல ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகத்தின் எதிரில் நேற்று நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத் தலைவர் கி.சத்திய நாராணயன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் லெனின், மருதன், ஓய்வூதியர் சங்கத்தினைச் சேர்ந்த ஆனந்தன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கியின் துணைப்பதிவாளர் உமாதேவி, அலுவலக பணியாளர்களை தரக்குறைவாக பேசி ஊழியர் விரோதப் போக்கை கையாண்டு, வஞ்சக போக்குடன் பணியாளர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தியும், துறை அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்தும், தனது உயர் அலுவலர்களை இழிவாக பேசியும், அவர்களது ஆணைகளை செயல்படுத்தாமல் நிர்வாக பணிகளை முடக்கி வருகிறார். கடந்த காலங்களில் மயிலாடுதுறை, செங்கல்பட்டு போன்ற பல்வேறு இடங்களில் பணிபுரியும் போது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளார்.
நிர்வாக சிக்கலை ஏற்படுத்தியதன் காரணமாக கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டார். மேலும், பணியில் சேர்ந்த 5 ஆண்டுகளுக்குள் இவரின் தவறான மற்றும் நிர்வாக அராஜக பணியிடத்திலிருந்து பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கியின் செயலாட்சியராக பணிமாற்றம் செய்யப்பட்டார். புதிய பணியிடத்தில் பணியில் சேர்ந்த நாள் முதல் அரசு ஊழியர்களிடம் விரோதப்போக்குடனும், பல்வேறு பொய்யான புகார்களை உயர் அலுவலர்களுக்கு தொடர்ந்து அனுப்பியும் மன உளைச்சலை ஏற்படுத்தி வரும் உமாதேவியை உடனடியாக காஞ்சிபுரம் மண்டலத்திலிருந்து பணிமாற்றம் செய்யகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்களுக்கு மாவட்ட செயலாளர் அருண்குமார் நன்றியுரை ஆற்றினார்.