கோவளம்: சென்னை தரமணி எழுமலை தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (60). இவர், உறவினர் இல்ல திருமணத்திற்காக புதுச்சேரிக்கு சென்றார். அங்கிருந்து, நேற்று முன்தினம், அரசு பேருந்து மூலம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அன்பழகன் பக்கத்தில் வாலிபர் ஒருவர் அமர்ந்து வந்துள்ளார். 3 மணி நேரம் பயணம் என்பதால் அன்பழகன், வாலிபரிடம் பேச்சு கொடுத்து வந்துள்ளார். அந்த பேருந்து உணவு இடைவேளைக்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் நிறுத்தப்பட்டது. அப்போது வாலிபர், அன்பழகனுக்கு டீ மற்றும் பிஸ்கட் வாங்கி கொடுத்துள்ளார்.
அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்துள்ளார். பிறகு பேருந்து மத்திய கைலாஷ் அருகே வரும் போது, கிண்டியில் இறங்க வேண்டிய அன்பழகனை, நடத்துனர் எழுப்பி, உங்களுக்கான இடம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். அப்போது, அன்பழகன் கண் விழித்து பார்த்தபோது, அருகில் அமர்ந்து இருந்த வாலிபர் மாயமாகி இருந்தார்.மேலும், அவரது கை கடிகாரம், மோதிரம், செயின் என 10 சவரன் மதிப்புள்ள நகைகள் மற்றும் சட்டை பையில் வைத்திருந்த ரூ.6 ஆயிரம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.