ஊட்டி: உதகை – குன்னூர் புறவழிச்சாலை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியதால் சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் சுற்றுலா என்றாலே நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை தான் பெரும்பாலான மக்களுக்கு முதல் விருப்பமாக இருக்கும். ஆனால் உதகையில் போக்குவரத்து நெரிசல் வாகன நிறுத்துமிடம் தான் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த சூழலில் சுற்றுலா பயணிகளுக்கு நற்செய்தியாக குன்னூர் முதல் உதகை வரையில் புறவழிச்சாலை திட்டத்தை மாநில நெடுஞ்சாலைத்துறை அமைத்து வருகிறது.
இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 23 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் புறவழிச்சாலையின் பணிகள் சுமார் 80% முடிந்துள்ளது. மேலும் பணிகள் வேகமாக நடைபெறுவதால் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் உதகைக்கு இனி போக்குவரத்து நெரிசல் இருக்காது என்ற நற்செய்தி சுற்றுலா பயணிகளுக்கு மேலும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.