Friday, February 23, 2024
Home » ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முடியாதபடி வழக்கை கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும் : வைகோ வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முடியாதபடி வழக்கை கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும் : வைகோ வலியுறுத்தல்

by Porselvi

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கை தமிழ்நாடு அரசு கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை 1994 ஆம் ஆண்டு ஜனவரி 1 இல் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலை நாசப்படுத்தியும், தூத்துக்குடி மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்ததோடு வேளாண் நிலங்களையும் பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்று 1996 ஆம் ஆண்டில் இருந்து மறுமலர்ச்சி திமுக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவோடு நானும் இணைந்து மனு தாக்கல் செய்தேன். இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு 1998 நவம்பர் 23 இல் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஆணை பிறப்பித்தது . தலைமை நீதிபதி லிபரான் மற்றும் நீதி அரசர் பத்மநாபன் அமர்வில் 1998 டிசம்பர் 9 , 10 , 11 ஆகிய தேதிகளில் 7 மணி நேரம் நான் வாதங்களை எடுத்து வைத்தேன். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் எலிபி தர்மராவ், பால் வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு 28. 09. 2010 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடச் சொல்லி தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் அந்தத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால தடைப் பெற்றது. அதன் பிறகு ஸ்டெர்லைட் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து இருபது அமர்வுகள் நடந்த போது நானும் வழக்கு விசாரணையில் பங்கேற்றேன்.

2013 மார்ச் 23ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அதிகாலையில் நச்சு வாயு வெளியேறியதால் நடைபயிற்சி சென்றவர்களும், பொதுமக்களும் மயங்கி விழுந்தனர். இதனை அடுத்து மார்ச் 30ஆம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்திருந்த அனுமதியை ரத்து செய்து, மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பையும் தமிழ்நாடு அரசு துண்டித்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பட்நாயக் ,கோகலே அமர்வு 2013 ஏப்ரல் 2 ஆம் தேதி, ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்கலாம் என்றும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தும் தீர்ப்பளித்தது. ஆனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமானால் எதிர்காலத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பில் குறிப்பிட்டது.

மேலும் ஸ்டெர்லைட் நிர்வாகம் நிலம், நீர் பாதிப்புகளுக்காக ரூபாய் 100 கோடி வங்கியில் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு வந்த ஏழாம் நாள் 2013 ஏப்ரல் 9 ஆம் தேதி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து நான் வழக்கு தொடர்ந்தேன். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்தேன். ஆனால் அது உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

அதன் பின்னர் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதி சொக்கலிங்கம் அவர்கள் முன்னால் நடந்த விசாரணையில் ஸ்டெர்லைட் எதிர்த்து ஒன்றரை மணி நேரம் வாதங்களை முன் வைத்தேன். நீதியரசர் சொக்கலிங்கம் அவர்கள் வெளிப்படையாகவே எனக்கு பாராட்டு தெரிவித்தார். ஆனால் திடீரென்று இந்த வழக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்திலிருந்து இந்திய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வுக்கு மாற்றப்பட்டது. அங்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதந்திர குமார் அமர்வில் நடந்த விசாரணையில் தொடர்ந்து பங்கேற்று வாதாடினேன். ஸ்டெர்லைட் ஆலையின் நச்சு வாயுவினால் புற்றுநோய், நுரையீரல் தொற்று நோய், சரும நோய் இவற்றால், தூத்துக்குடி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை சாதகமாக பயன்படுத்தி ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை மேலும் இரண்டு மடங்கு விரிவாக்கம் செய்ய முனைந்தது.

இதனை எதிர்த்து குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம், மற்றும் தூத்துக்குடி மாநகர மக்கள் கொந்தளித்துப் போராடினர். போராட்டத்தின் நூறாவது நாளான 2018 மே 22 அன்று ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி பேரணி சென்ற போது, எடப்பாடி பழனிசாமி அரசு காவல்துறையை ஏவி, காக்கை குருவிகளை சுடுவது போல அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. காவல்துறையின் நரவேட்டைக்கு 13 அப்பாவி மக்கள் உயிர்கள் பறிபோயின. அதன் பிறகு ஏற்பட்ட மக்கள் கொந்தளிப்பால், அதிமுக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக 2018 மே 28ஆம் தேதி ஆணைப் பிறப்பித்தது. ஆனால் அந்த ஆணையில் தமிழ்நாடு அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் காற்று மாசுபடுதல், தண்ணீர் மாசுபடுதல் குறித்த சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு முன்பு கொடுக்கப்பட்ட அனுமதி காலாவதி ஆகிவிட்டது.

மீண்டும் புதிய அனுமதி கொடுக்கவில்லை என்பதால் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 48ஆவது பிரிவின் அடிப்படையில் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தீர்ப்பாயத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ மேல்முறையீடு செய்து அனுமதி பெற்றால் தமிழ்நாடு அரசு ஆணை செல்லுபடி ஆகாது. ஆலையை மீண்டும் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும். இதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தேன். வழக்கு 13.06.2018 அன்று நீதியரசர்கள் செல்வம், பஷீர் அகமது அமர்வில் விசாரணைக்கு வந்த போது, எனது மனுவை ஏற்றுக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்து ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதனிடையே டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில் ஸ்டெர்லைட் வழக்கு நடந்த போது, என்னையும் ஒரு தரப்பாக சேர்க்கக் கோரி மனு அளித்தேன். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோயல் அவர்கள் முன்பாக கடுமையாகப் போராடி எனது வாதங்களை எடுத்துரைத்தேன். ஸ்டெர்லைட் நச்சு ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 15.12.2018 இல் அனுமதி அளித்தது. உச்சநீதிமன்றத்தில், நீதி அரசர்கள் ரோகிங்டன் நாரிமன், நவீன் சின்கா அமர்வில் ஸ்டெர்லைட் வழக்கு இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது 2019 பிப்ரவரி 07 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 40 நிமிடங்கள் எனது வாதத்தை ஆணித்தரமாக எடுத்து வைத்தேன்.

2019 பிப்ரவரி 18 அன்று உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு தாக்கல் செய்தபோது, சென்னை உயர்நீதிமன்றம் செல்லுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் 2020 ஆகஸ்ட் 18ஆம் தேதி மாண்பமை நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு நாசக்கார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜனவரி 22 ஆம் தேதி வருவதாக பட்டியலிடப்பட்டு இருக்கிறது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இவ்வழக்கில் வழக்குரைஞர் ஆனந்த செல்வம் வாதாட இருக்கிறார். தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிரான இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை நியமித்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முடியாதபடி தக்க முறையில் வழக்கை கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

5 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi