Sunday, May 19, 2024
Home » மனவெளிப் பயணம்

மனவெளிப் பயணம்

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி

பெண்மை எனும் தனித்துவம்! மரபும் விஞ்ஞானமும்!

ஆற்றல் மிக்க பெண் தெய்வம் மனித குலத்தின் வரலாற்றிலும், ஒவ்வொரு தனிப்பட்ட பெண்ணின் வரலாற்றிலும் வெளிப்படுகின்ற பெண் இனத்தின் அவதாரமேயாகும் – எரிக் நியூமேன் பெண் எதற்காக விசேஷமான நபராக மாறினாள்? என்ற கேள்விக்கு “உலக வரலாற்றில் பெண்கள்” என்ற புத்தகத்தில் உள்ள சில வரிகளை எடுத்து எழுதுகிறேன்.

‘‘சந்திரனின் பிறைகளோடு இணைந்த அவளுடைய மாதவிடாயும், அவளுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாத, அதே சமயத்தில் குணப்படுத்த முடியாதவாறு ரத்தத்தை வெளிப்படுத்தி வந்த புதிரும்தான் பெண்ணை விசேஷமான நபராக மாற்றியது’’ என்கிறார்கள்.இப்படி மாதவிடாய் பற்றி விதம்விதமாக புனிதத்தன்மையானது என்றும் தெய்வீகமானது என்றும் பல வரலாற்றுச் சார்ந்த தொகுப்புகள் நம்மிடம் தரவுகளாக இருக்கின்றன.

ஆனால், உண்மையில் யதார்த்த வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு விசேஷமான நாட்களில் மாதவிடாய் வந்தால், நிம்மதியாக இருக்க முடியுமா என்று கேட்டுப் பார்த்தால் புரியும். அத்தனை மூட நம்பிக்கைகளும் பெண்களின் வார்த்தைகளில் வெளிப்படும். எத்தனை வீடுகளில் விசேஷமான நாட்களில் அதுவும், விநாயகர் சதூர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் என்று வரும் இந்த நல்ல தினங்களில் அந்த வீட்டுப் பெண்கள் பீரியட்ஸ் ஆகக் கூடாது என்றும், அந்த வீட்டுக்குப் பெண்ணின் மாதவிடாய் தரித்திரம் என்றும் தொடர்ந்து அவளுடைய அம்மாவால், பாட்டியால், சித்தியால் பதிய வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

2023-ல் இப்படியா என்று ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடையாதீர்கள். உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தை எழுதுகிறேன். தனிக் குடித்தனம் என்றான பின் அந்த வீட்டில் கணவர் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர் மட்டுமே பெண்ணாக இருந்து விசேஷ நாட்களில் பூஜைகள் அனைத்தும் செய்வார். கணவரோ சாமிக்கு மாலை போடுவதிலிருந்து பூஜை புனஸ்காரம் செய்வது வரை அத்தனை சுத்தம் பத்தமாக மொத்த வீடே இருந்தே ஆக வேண்டும் என்று மிகக் கண்டிப்புடன் இருப்பார்.

ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பிப்ரவரி வரை பல கோவில் திருவிழா சார்ந்த நிகழ்வுகள் பெரும்பாலும் நம் தமிழ்நாட்டில் நடக்கிறது. இதில் ஒரே ஒரு பெண் மட்டும் வீட்டில் இருக்கும் குடும்பங்களில், சமைப்பதில் இருந்து பூஜை செய்வது வரை அவரே அனைத்தும் செய்ய வேண்டும். அதனால் பீரியட்ஸ் என்றாலே மூஞ்சியைச் சுழிக்கும் அந்த வீட்டு சொந்த பந்தங்களே அதிகமாக இருக்கிறார்கள்.

அதனால் அந்தம்மாவும் தொடர்ந்து பல வருடங்களாக டாக்டரிடம் கேட்காமல், மெடிக்கல் ஷாப்பில் போய் பீரியட்ஸ் தள்ளிப்போக மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். சில வருடங்களுக்கு முன் வயிறு வலிக்குது என்று, அதற்கும் பெயின் கில்லர் மாத்திரை வாங்கி அவராகவே வாங்கி சாப்பிட்டு இருக்கிறார். பெரும்பாலும் அவர் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரிடமும் பேசத் தயங்குபவராக இருந்திருக்கிறார்.

அதனால் தன் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை யாரிடமும் தெரிவிக்காமலேயே இருந்தார். அந்தப் பெண்ணின் மகனுக்கும், கணவருக்கும் எந்தவொரு வித்தியாசம் தெரியாமலும், கண்டுபிடிக்க முடியாமலும் அவரவர் உலகிற்குள் வாழ்ந்திருக்கின்றனர்.கடைசியில் அந்த அம்மாவுக்கு கர்ப்பப்பையில் பரவிய புற்றுநோய் மற்ற உடல் உறுப்புகளிலும், பகுதிகளிலும் பரவி இறந்தும்விட்டார்.

பெண்ணின் உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்டிரான் என்ற இரண்டு ஹார்மோன்கள்தான் மாதவிடாய் சுழற்சிக்கு அடிப்படையானவை. மேலே சொன்ன ஹார்மோன்களை ஒரு சில நாட்கள் செயல்படாமல் இருக்க வைக்கதான் இந்த மாத்திரை பயன்படுகிறது. அவை உடலின் சுழற்சியை மாற்றியமைக்கவில்லை. மாறாக பெண்ணின் உடலை முற்றிலும் பாதிப்படைய வைக்கிறது.

இதன் வீரியம் புரியாமல் பெண்களும் பூஜை, புனஸ்காரம் போன்ற நல்ல தினங்களில் நாம் ஏதோ நல்லது செய்யத்தான் இந்த உடல் இருக்கிறது என்று தத்துவம் பேசிக்கொண்டு மிட்டாய்கள் போல் விதம் விதமான மாத்திரைகளை தொடர்ந்து பல மாதங்களாக, பல வருடங்களாக வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.பெண்களின் வரலாறும், தெய்வீகத் தன்மையும் உண்மையில் அவளது உடலை அவளுக்கு பிடித்த மாதிரி பாதுகாக்க வேண்டும். ஆனால் முற்றிலும் மாறாக, அவள் உடலைப் பாதுகாக்காமல், சமூகம் கூறும் செயல்பாடுகளால், நடவடிக்கைகளால் மட்டுமே தன்னுடைய உடலை பேணிப் பாதுகாக்கிறாள். மாதவிடாய் நாட்களுக்கு ஏற்றவாறு பாதுகாப்பது என்பதை விட, சமூக அழுத்தங்களுக்கு சரணடைய வேண்டும் என்பதே பெண்ணின் உடலுக்கு தேவையான ஒழுக்கமாக நம் கலாச்சாரத்தில் கட்டாயப்படுத்தப்படுகிறது.

வாசல் தெளித்து கோலம் போடுவதாக இருக்கட்டும், சமையலறையை சுத்தம் செய்வதாக இருக்கட்டும், ஊறுகாய் போடுவதாக இருக்கட்டும், இப்படி வீட்டின் சின்ன சின்ன விஷயங்களிலிருந்து சுத்தமாக இருந்தே ஆக வேண்டுமென்று அனைத்திலும் பெண்ணின் உடல் சார்ந்து சுத்தத்தையும், தூய்மையையும் மற்ற பெண்களும், ஆண்களும் தொடர்ந்து அறிவுரையாக, ஒழுக்க நெறியாக சொல்லிக் கொடுக்கிறார்கள். தற்போது இவற்றில் பெரும்பாலும் பல விஷயங்கள் மாறியிருந்தாலும், விசேஷ நாட்களில் பீரியட்ஸ் தள்ளிப்போவதைத் தான் பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள்.

இதில் சில வீடுகளில் உள்ள மூடநம்பிக்கைகள் பற்றி தகவல்களை எல்லாம் கேட்டால், ரொம்ப அதிர்ச்சியளிக்க வைக்கிறது. வீட்டைக் கூட்டினால் குப்பைகளை வீட்டின் ஓரத்தில் தள்ளி வைக்க கூடாதாம். அப்படித் தள்ளி வைத்தால், விசேஷ நாளில் பெண்களுக்கு பீரியட்ஸ் வந்து, வீட்டின் ஓரத்தில் தள்ளி வைத்து விடுமாம். பெண்களின் கைகளில் வைக்கோல் கட்டினால் பீரியட்ஸ் தள்ளிப் போகுமாம். அதிகாலையில் பொட்டுக்கடலை சாப்பிட்டால் தள்ளிப் போகுமாம், பீரியட்ஸ் ஆகும் முன் கல்உப்பு டப்பாவில் காசு போட்டால் தள்ளிப் போகுமாம்.

இப்படி விதம் விதமாக தன் உடம்புக்குள் மாதந்தோறும் நடக்கும் நிகழ்வுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்து சாமி கும்பிட நினைக்கும் பெண்களின் நம்பிக்கையை தான் இங்கு எளிதாக மாற்ற முடியவில்லை என்பதே பயத்தைத் தருகிறது. சில பெண்களுக்கு செத்தாலும் சாவேனே ஒழிய, வாழும் போது சுத்தம் பத்தமாக வாழ வேண்டும் என்பதே லட்சியமாக வைத்திருக்கும் பெண்களின் வாழ்வியலை என்ன செய்து மாற்றுவது என்பதுதான் தற்போதைய சவாலாக இருக்கிறது.

பள்ளிப் பருவத்திலிருந்தே அரசும், தன்னார்வ நிறுவனங்களும், சினிமாவும், இலக்கியமும் விழிப்புணர்வு செய்ய ஆரம்பித்து, கட்டுரைகள் எழுதி, திரைப்படங்களாக எடுத்து, நாடகங்கள் போட்டு, பாடல்கள் பாடி என்று மனிதனுக்கு தெரிந்த அத்தனை கலைகள் மூலம் பெண்ணின் உடலைப் பற்றியும், மாதவிடாய் பற்றியும் பேசிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் சில நேரங்களில் அத்தனை அறிவியலையும், விழிப்புணர்வையும் மாற்றி வைத்து, முதலில் இருந்து விளையாடலாமா என்றே சில பெண்கள் நம் முன் நிற்கிறார்கள்.

மாதவிடாயை அறிவியலாக பார்க்கும் சமூகத்தை தான் உருவாக்க வேண்டுமே தவிர, ஆன்மீகத்தை தடுக்கும் செயலாக பார்க்க வேண்டாம் என்றே தொடர்ந்து கூற வேண்டிய அவசியம் இன்றும் இருக்கிறது.எரிக் நியூமேன் கூறியது போல், ஆற்றல் மிக்க பெண் தன்னுடைய தனித்துவத்தில் ஆரோக்கியத்தையும் அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தை தொடர்ந்து கூறுவோம்.

You may also like

Leave a Comment

16 − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi