மதுரை: மதுரை கட்ராபாளையத்தில் தீ விபத்து ஏற்பட்ட விசாகா பெண்கள் விடுதிக் கட்டடத்தை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. விடுதிக் கட்டடம் முறையான அனுமதி பெறாமலும் பாதுகாப்பு வசதிகள் இல்லாமலும் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மகளிர் தங்கும் விடுதியில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த நிலையில் 3 பேர் காயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த விடுதிக் கட்டடத்தை அகற்ற கடந்த 2023-ம் ஆண்டு மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Nithya
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த தோழர் சீதாராம் யெச்சூரிக்கு செவ்வணக்கம். சீதாராம் யெச்சூரியின் மறைவு வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த 3 லட்சம் பேரில் 1.30 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை தயார் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் அமுதம் நியாய விலைக் கடை கட்டடங்களை திறந்து வைத்த பின் அமைச்சர் சக்கரபாணி பேட்டியளித்தார். அப்போது, விரைவில் கொளத்தூர், காஞ்சிபுரத்தில் அமுதம் அங்காடியை திறக்க உள்ளோம் என அவர் கூறினார்.
ஆந்திரா: திருப்பதி அருகே பாக்ராபேட்டை மலைப்பாதையில் கார் மீது லாரி கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு தக்காளி ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பைக், கார் மீது மோதி கவிழ்ந்தது. லாரி கவிழ்ந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் சம்ப இடத்திலேயே உயிரிழந்தனர்.
டெல்லி: கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கத்திற்காக, மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். சுவாசப் பிரச்சனை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சீதாராம் யெச்சூரி இன்று காலமானார்.
சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வுகால பணிக்கொடையை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான இறப்பு, ஓய்வுகால பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்த்தியுள்ளது. ஓய்வுகால பணிக்கொடை உயர்வு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1593 புள்ளிகள் உயர்ந்து 83,116 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டது. வர்த்தக நேரம் முடிவில் சென்செக்ஸ் 1440 புள்ளிகள் உயர்வுடன் 82,903 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 515 புள்ளிகள் உயர்ந்து 25,433 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டது. வர்த்தக நேரம் முடிவில் நிஃப்டி 470 புள்ளிகள் உயர்வுடன் 25,389 புள்ளிகளில் நிறைவடைந்தது.
சென்னை: சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு பேசிய விவகாரத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது. மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசிய மகாவிஷ்ணு கடந்தவாரம் கைது செய்யப்பட்டார். சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்ட விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்ததை அடுத்து தலைமைச் செயலாளரிடம் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிக்கையை சமர்ப்பித்தார்.