போச்சம்பள்ளி: தமிழகத்தில் நடப்பாண்டு தேங்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதில் கிருஷ்ணகிரியின் தென்பெண்ணையாற்று படுகையில் விளைச்சல் உச்சம் தொட்டுள்ளது. ஆனால் உரியவிலை கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் விவசாயிகளிடம் எழுந்துள்ளது. தமிழகத்தில் சுமார் 5 கோடிக்கும் அதிகமான தென்னை மரங்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இளநீர், கொப்பரை, உடை தேங்காய் என்ற வகையில் காய்கள் தரம் பிரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் தேங்காய்களுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும் நல்லவரவேற்பு உள்ளது. அதேபோல் வெளிமாநில வியாபாரிகள், அந்தந்த மாவடங்களில் உள்ள தென்னந்தோப்புகளுக்கு நேரடியாக வந்து, விவசாயிகளிடம் தோட்டங்களிலேயே தேங்காய்களை மொத்தமாக கொள்முதல் செய்து லாரிகளில் விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர்.
இதன் மூலம் விவசாயிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்து வந்தது. தேங்காய் உற்பத்தியாளர்கள் குத்தகை அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து மரத்தை பெற்று, காய்களை பறிக்கின்றனர். ஆண்டுக்கு 6 முறை என்ற அடிப்படையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை தேங்காய் பறிக்கப்படுகிறது. மரங்களில் பறிக்கும் தேங்காய்களை கொண்டுவந்து, உரித்து ஒரு மாத இடைவெளியில் வைத்து விற்பனைக்கு அனுப்படுகிறது. அதுபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதியில் அதிகஅளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.
காவேரிப்பட்டணம், நெடுங்கல், கொட்டவூர், மடம், சந்தாபுரம், புதூர், மலையாண்டள்ளி, பேரூஅள்ளி, அகரம், பண்ணந்தூர், பாரூர், அரசம்பட்டி, மருதேரி, செல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 36 ஆயிரம் ஏக்கரில் 15 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தியை மையமாக கொண்டு, நூற்றுக்கணக்கான தேங்காய் மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேங்காய் ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
கடந்த மாதம் ஒரு தேங்காய் ₹10 முதல் ₹25 வரையில் விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்தது. இது ஒருபுறமிருக்க, நடப்பாண்டு தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளதால், சந்தைக்கு வரத்தும் உயர்ந்துள்ளது. இதனால் தேங்காய் விலை குறைந்துள்ளது. மாவட்டத்தில் 300 டன்னுக்கு மேலாக தேங்காய்கள் இருப்பில் உள்ளன. 2 மாதங்கள் வரை அவை தாக்கு பிடிக்கும் என்பதால், விவசாயிகள் தேங்காய் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து, தார்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர். இவை மட்டுமின்றி மரத்தில் இருந்து பறிக்கப்படும் காய்களும் உரிக்கப்படாமல், அதிக அளவில் தேக்கமடைந்துள்ளன. மண்டிகளில் தேங்காய்கள் மலைபோல் குவிந்து கிடக்கிறது.
இது குறித்து தேங்காய் வியாபாரிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டு தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. அத்துடன் வரத்தும் வரலாறு காணாத அளவிற்கு உள்ளது. இதனால் எதிர்பார்த்த அளவு தேங்காய்களுக்கு விலை கிடைக்க வில்லை. தென்னந்தோப்புகளுக்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்தி குத்தகை அடிப்படையில் மரங்களைஎடுக்கிறோம். தேங்காய் பறிப்பது லாரியில் எடுத்து வருவது, அவற்றை பராமரித்து மூட்டையாக கட்டி விற்பனைக்கு அனுப்புவது என, ஒரு தேங்காய்க்கு ₹13 வரை செலவாகிறது. சீசன் காலங்களில் ₹15 முதல் ₹25 வரை விலை போகும். தற்போது வியாபாரிகள் தேங்காய் ஒன்றை ₹10க்கு கேட்கிறார்கள். இதனால் எங்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.ஒரு தேங்காய் ₹20க்கு மேல் விற்பனை செய்ததால் மட்டுமே, எங்களுக்கு வருவாய் கிடைக்கும். இல்லை என்றால் பெருத்த நஷ்டமே மிஞ்சும். மேலும் தேங்காய் பறித்து உரித்து விட்டால் 2 மாதங்கள் வரை அழுகாமல் தாக்கு பிடிக்கும். அதனால் தான் எங்களால் ஓரளவு தேங்காய் தொழிலில் தாக்கு பிடிக்க முடிகிறது. வழக்கமான கோயில்கள் மற்றும் திருமண விழாக்கள் இதர பண்டிகைகள் நடைபெற்றால்தான், தேங்காய் விற்பனையில் மீண்டும் பழைய நிலையை அடைய முடியும். இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோடை காலத்தால் இளநீருக்கு கிராக்கி
போச்சம்பள்ளி பகுதியில் தேங்காய் உற்பத்தி அதிகரித்து வருவதால், விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையறிந்த சில வியாபாரிகள், தேங்காய் முற்றும் முன்பே இளநீராக பறித்து விற்பனை செய்வதற்கு ஊக்கப்படுத்தி வருகிறார்கள். இளநீரை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச்செல்கிறார்கள். கோடை வெயிலுக்கு முன்பு இளநீர் ₹15 முதல் ₹20 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ₹20 முதல் ₹35 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு வேண்டும்
தட்டக்கல் பகுதியை சேர்ந்த தென்னை விவசாயி சிவகுரு கூறுகையில், ‘‘தமிழகத்திலும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மா, தென்னையை நம்பி பல்லாயிரம் விவசாயிகள் வாழ்ந்து வருகிறோம். ஆனால் ஆண்டு தோறும் ஏற்படும் விலைகுறைவால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் பல விவசாயிகள் தென்னை மற்றும் மாமரங்களை வெட்டிவிட்டு, மாற்று பயிருக்கு மாறி வருகிறார்கள். இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் மா, தென்னை மரங்களை, கம்யூட்டரில் மட்டுமே பார்க்க முடியும் நிலை ஏற்படும். கேரளா மாநிலத்தில் இளநீரை பவுடராக்கி விற்பனை செய்கிறார்கள். அதுபோல் தேங்காய் மூலம் பல்வேறு உணவு பொருட்களை தயாரித்து வருகிறார்கள்.மேலும் தேங்காயை கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து வருகிறார்கள். அதேபோல் தமிழ்நாட்டிலும் அரசு, இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்
‘‘பொதுமக்கள் அனைவரும் சமையல் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த முன் வரவேண்டும். தமிழக அரசு அனைத்து ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தவேண்டும். மேலும் சத்துணவு திட்டத்தில் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். ஆவின் நிறுவனம் போன்று, தென்னை உற்பத்திக்கு பொது இடங்களில் விற்பனை நிலையம் அமைத்து இளநீர், நீரா, தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் தேங்காய்எண்ணெய் தொழிற்சாலை தொடங்கிட வேண்டும்,’’ என்பதும் விவசாயிகளின் எதிர்பார்ப்பு.