Saturday, July 27, 2024
Home » திருமணத்திற்கு பிறகே அரங்கேற்றம் : நட்டுவாங்க கலைமணி சுதா சுவாமிநாதன்!

திருமணத்திற்கு பிறகே அரங்கேற்றம் : நட்டுவாங்க கலைமணி சுதா சுவாமிநாதன்!

by Porselvi

உங்கள் நடனப் பயணம் குறித்து..

நான் ஏழு வயது முதல் பரதநாட்டியம் கற்கத் துவங்கினேன். எனது அம்மாவும், அவர்களின் சகோதரர்களும் இசைக் கலைஞர்கள். கலைக்குடும்பத்தில் இருந்து வந்த நான் பாடலை விட நாட்டியத்தின் மீதே அதீத ஆர்வம் கொண்டிருந்தேன் என்பார்கள். மூன்று வயது முதல் எங்கே பாடல்களை கேட்டாலுமே உடனே ஆடத் தொடங்கி விடுவேன் என அம்மா சொல்லுவார்கள். எனது நடன ஆர்வத்தை கண்ட எனது அம்மா என்னை நாட்டிய வகுப்பிற்கு அனுப்பி வைத்தார். எனது முதல் குரு தாட்சாயணி அவர்கள். பிரபல பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் அவர்களின் உறவினர். அவரிடம் தான் நான் நாட்டியக் கலையை கற்றுவந்தேன். அவருடைய மாணவியாக நிறைய மேடைகளில் ஆடியுள்ளேன். அக்காலத்தில் தூர்தர்ஷனின் பிரபல நிகழ்ச்சியான கண்மணிப் பூங்காவில் ஆடியது மறக்கமுடியாத விஷயம். அதே போன்று நிறைய நாட்டியாஞ்சலி நிகழ்வுகளில், பிரபல கோவில்களில் நாட்டியமாடிய அனுபவங்கள் உண்டு.

திருமணத்திற்குப் பிறகுதான் அரங்கேற்றமா?

ஆமாம். திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகே அரங்கேற்றம் நடைபெற்றது ஒரு சுவாரஸ்யமான விஷயம் தான். திருமணத்திற்கு பிறகு கொஞ்ச காலம் நடனம் ஆடுவதை நிறுத்தி வைத்திருந்தேன். ஆனால் எனக்குள் இருந்த நடன ஆர்வம் என்னை பெரிதும் தூண்டியது. எனது மகளுடன் சென்று மீண்டும் எனது குரு தாட்சாயணி அவர்களை சந்தித்தேன். அவர்களிடம் மீண்டும் நடனம் கற்றுக்கொள்ளத் துவங்கினேன். பிறகு இடமாற்றம் காரணமாக குரு உமா சுப்பிரமணியம் அவர்களிடம் நடனத்தை தொடர்ந்து கற்றுக்கொண்டேன். பின்னர் எனது அரங்கேற்றம் மிக எளிமையாக திருவீழிமிழலை கோவிலில் நடைபெற்றது. இரு குழந்தைகளுக்கு தாயான பிறகு அரங்கேற்றம் நடைபெற்றது. ஆர்வமும் முழு முயற்சியும் இருந்தால் எந்த வயதிலும் நாட்டியம் கற்றுக்கொண்டு சாதிக்க முடியும்.

சாய் நாட்டியாலயா குறித்து…

நடனம் முழுமையாக கற்றுக் கொண்ட பின் 2011 ஆம் ஆண்டுதான் முதன் முதலாக நடனப்பள்ளியை துவங்கினேன். எங்கள் நடன பள்ளியான சாய் நாட்டியாலயா (ECR) ஈஞ்சம்பாக்கம் மற்றும் நீலாங்கரை பகுதியில் உள்ளது. எனது இரண்டு ப்ரான்ஜ்களிலும் நடன பின்னணியை சாராத நிறைய பிள்ளைகள் நடனம் கற்க ஆர்வமுடன் வருவதை கண்டேன். பொதுவாகவே இங்குள்ள பகுதி மக்கள் அதிகம் கலைத்துறையை சாராதவர்கள். என்னிடம் படிக்கும் பிள்ளைகள் அனைவருமே கலைத்துறைக்கு புதியவர்கள் தான். எனினும் நாட்டியம் ஆடவேண்டும் என்கிற ஆர்வத்துடன் வருபவர்களுக்கு என்னால் இயன்றளவு உத்வேகத்துடன் அவர்களுக்கு கற்பிக்கிறேன். தற்போது என்னிடம் நூறு மாணவர்களுக்கு மேல் நடனம் கற்றுக் கொள்கிறார்கள். எனது மாணவ மாணவிகள் என்னிடம் மிகுந்த சிரத்தையுடன் கற்றுக் கொண்டு தற்போது சிறப்பாக பல இடங்களிலும் ஆடி வருகிறார்கள். எங்கள் பிள்ளைகள் தமிழகமெங்கும் நிறைய கோவில்களில், சிவராத்திரி விழாக்களில், நாட்டியாஞ்சலி நிகழ்வுகளில் நடனமாடி வந்திருக்கிறார்கள். ஏறக்குறைய 13 வருடங்களாக எங்கள் நடனப் பள்ளி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கின்னஸ் உலக சாதனை நடத்துபவர்களின் நிகழ்ச்சியில் எங்களது பிள்ளைகள் கலந்து கொண்டு ஆடியிருந்தது அவர்களுக்கு நல்ல அனுபவம். புது டெல்லியில் IIMC அரங்கில் நடைபெற்ற நிருத்தியஞ்சலி இன்டர்நேஷனல் நடனப் போட்டிகளில் எங்கள் மாணவர்கள் 1,2 மற்றும் 3 வது பரிசுகளை நிறைய கேட்டகிரியில் வென்றுள்ளது மகிழ்ச்சியாக இருந்தது.

ஆன்லைன் வகுப்புகளுக்கு ஆதரவு இருக்கிறதா?

ஆமாம்.. கொரோனா காலத்திற்கு பிறகு ஆன்லைன் வகுப்புகளில் கற்றுக் கொள்ள நிறைய பேர் ஆர்வமுடன் முன் வருகிறார்கள். வெகு தூரத்தில் இருப்பவர்கள் கூட ஆன்லைன் மூலம் நடனம் கற்றுக் கொள்வது எளிது. அதேபோன்று வெளிநாட்டில் உள்ளவர்களும் எங்களிடம் ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்து படித்து வருகிறார். குறிப்பாக துபாய் ,கனடா, சிங்கப்பூர், மலேசியா, லங்காவை சேர்ந்த பல மாணவிகள் எங்களிடம் நடனக் கலையை கற்றுக் கொள்கிறார்கள்.

டாக்டர் பட்டம் குறித்து…

எனது கலைப் பயணத்தை பாராட்டி நிறைய விருதுகளும், பட்டங்களும் கிடைத்துள்ளது. அதேபோன்று எனது நாட்டிய சேவையை பாராட்டி, நாட்டிய கலா சூடாமணி, பரத, நாட்டிய சதிர்மணி, கலா படா, நாட்டிய சிருஷ்டி போன்ற பட்டங்கள் கிடைத்துள்ளது. தேசிய நாட்டிய ரத்னா, ISFA விருது, யுவ கலா பாரதி, அத்தி வரத நாட்டிய கலா பூஷணம், வாரி விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளேன். யுஜிசி பல்கலைக்கழகம் எனது கலைச் சேவையை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

பரதத்தில் என்ன படிப்பை முடித்துள்ளீர்கள்?

நான் சிறுவயதிலிருந்தே நடனக் கலையை முறைப்படி குருவிடம் கற்றுக் கொண்டாலும், பரதம் குறித்த முறையான சான்றிதழ் படிப்புகள் தேவை என்பதை உணர்ந்து இருந்தேன். நான் பல்கலைக்கழக த்தில் நட்டுவாங்கத்தில் டிப்ளமோவும், நட்டுவாங்க கலைமணி யில் டிப்ளமோ படித்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பரதத்தில் இளங்கலை பரதநாட்டியம் படித்துள்ளேன். தற்போது பரதத்தில் முதுகலையும் படித்து வருகிறேன். எனது மாணவ செல்வங்களையும் இது போன்ற தேர்வுகளுக்கென தயார் செய்து வருகிறேன்.

குடும்பம் மற்றும் எதிர்கால லட்சியங்கள் குறித்து?

நான் நடனக் கலையில் இந்த நிலையை எட்டிப் பிடிக்க எனது அம்மாவும் மகளும் தான் முக்கிய காரணமாக சொல்வேன். எனது அம்மா இசைக் கலைஞர். தற்போது எனது மகள் இசை மற்றும் நடனக் கலைஞராக தனது கலைப் பயணத்தை தொடர்கிறார். எனது லட்சியம் என்றால் பரதத்தில் புதிய பல நல்முயற்சிகளை செய்து பார்க்க வேண்டும் என்கிற எண்ணங்கள் ஆசைகள் நிறைய உண்டு. நான் மிகவும் தாமதமாக அதாவது எனது 32வது வயதில் தான் எனது கலைப் பணியை துவங்கினேன். தற்போது எனது நாட்டிய சேவைகள் குறித்து பலரும் பாராட்டும்போது எதையோ சாதித்து இருக்கிறேன் என்றுதான் தோன்றுகிறது. என்னால் முடிந்தது அனைவராலும் முடியும்.

பாடல்கள் இயற்றுவீர்களா?

ஆமாம். எனக்கு பாடல்கள் எழுதுவதில் அதிக ஆர்வமுண்டு. பொதுவாக விநாயகர், முருகர் ஆகியோர் மீது பாடல்களை எழுதிப் பாடுவேன். அப்படியாக தமிழ் உயிரெழுத்துக்களின் வரிசைப்படி அமைக்க பெற்ற இந்த முருகப்பெருமான் பாடலை இயற்றி பாடிவருகிறேன். அதற்கு அம்மா அழகாக இசைமெட்டமைத்து தந்தார்.

அழகா..!
ஆறுமுக வேலவா..!
இறைவா….!
ஈசனின் நாயகா…!
உருவாய்…!
ஊக்கமது தமிழாய்..!
எழுவாய்..!
ஆறிரு கரங்களாய்..!
ஐயம் நீக்கிட
ஒளியன வருவாய்
ஓம் எனும் வடிவாய்
ஔவைக்கு அருள்வாய்
ஃ எனும் ஆயுதம் போல்
கூர் வேல் கொண்ட குமரா
தமிழுக்கு உயிரெழுத்தை
போல்
தரணி வாழ் மக்களுக்கு
உயிராய், உணர்வாய்
கலந்த வடிவேலவா!

என தானே இயற்றிய பாடலை தாளத்துடன் கம்பீரமாக பாடி காண்பிக்கிறார் நடனக் கலைஞர் சுதா சுவாமிநாதன். அம்மா மற்றும் மகளுடன் மூன்று தலைமுறையாக மேடைகளில் தங்களது கலைப்பயணத்தை தொடர்ந்து வரும் டாக்டர் சுதா சுவாமிநாதன் அவர்களை வாழ்த்தி விடை பெற்றோம்.
– தனுஜா ஜெயராமன்.

 

You may also like

Leave a Comment

3 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi