கோத்தகிரி: முத்திரை தாள்களில் தேதியை திருத்தி மோசடியில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொணவக்கரை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் திலிப். இவருக்கு சொந்தமான நிலத்தில் தனியார் டீ பேக்டரி உள்ளது. அந்த நிலம் முத்திரைத்தாளில் தேதி மாற்றி அபகரிக்கப்பட்டிருப்பது திலிப்புக்கு தெரியவந்தது.
அதனை உறுதி செய்ய தகவல் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்தார். இதையடுத்து ஊட்டியில் உள்ள மாவட்ட பதிவாளர் முன்னிலையில் ஆய்வு நடந்தது.அப்போது குன்னூர் அதிமுக மாஜி எம்எல்ஏ சாந்தி ராமு, அவரது சகோதரர் ராஜன் மற்றும் ராஜ்குமார், ராஜூ, லிங்கியம்மாள், துரை என்பவரின் வாரிசுகள் தீபு, திலீப், ரஞ்சித் ஆகியோர் ஊட்டியில் உள்ள முத்திரைத்தாள் விற்பனையாளரிடம் ரூ.50 மதிப்புள்ள முத்திரைத்தாள்களை 8.2.2012 மற்றும் 22.2.2012 அன்று வாங்கி அந்த முத்திரைத்தாள்களில் உள்ள தேதியை 31.5.2006 மற்றும் 22.2.2010 என முன் தேதியிட்டு திருத்தம் செய்து போலியான ஆவணங்களை தயாரித்து இருப்பது தெரியவந்தது.
இதன் அடிப்படையில் திலிப் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் அரசை ஏமாற்றி முத்திரைத்தாளில் தேதியை திருத்தம் செய்து போலியாக ஆவணங்கள் தயாரித்த மாஜி எம்எல்ஏ சாந்தி ராமு உள்பட 8 பேர் மீது கோத்தகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.