சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி பாசன மாவட்டங்களின் வேளாண்மைக்கு தண்ணீர் வழங்கும் காவிரி ஆறு விவசாயிகளின் தாய் என்றால், காவிரியில் வெள்ளம் போல வரும் தண்ணீரை தேக்கி வைத்து தேவைக்கு ஏற்ப வழங்கும் மேட்டூர் அணை தான் விவசாயிகளின் தந்தை. அந்த விவசாயிகளின் தந்தைக்கு இன்று 90வது பிறந்த நாள். காவிரியையும், காவிரிப்பாசன மாவட்டங்களையும் கர்நாடகம் இப்போது எப்படி வஞ்சிக்கிறதோ, அதேபோன்று தான், முந்தைய நூற்றாண்டிலும் மைசூர் சமஸ்தானம் வஞ்சித்துக் கொண்டிருந்தது.
காவிரியின் குறுக்கே மேட்டூர் அணையை கட்ட 10 ஆண்டுகளாக மைசூர் சமஸ்தானம் அனுமதி அளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் கர்நாடகத்தின் எதிர்ப்புகளையெல்லாம் மீறி கட்டப்பட்டது தான் மேட்டூர் அணை. மேட்டூர் அணைக்கு முன்பாக மேகதாதுவில் புதிய அணையை கட்டுவதன் மூலம் மேட்டூர் அணையை பயனற்றதாகவும், பாலைவனமாகவும் மாற்ற கர்நாடக அரசு சதி செய்கிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வராது. கர்நாடகத்தின் இந்த சதித் திட்டத்தை முறியடிக்க ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.