பாட்னா: மத்தியில் ஆளும் பாஜவை விட பெரிய வாரிசு அரசியல் கட்சி இல்லை என்று ஐக்கிய ஜனதா தளம் கடுமையாக சாடியுள்ளது. எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியல் நடத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வரும் ஆளும் பாஜ அரசுக்கு எதிராக, ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பெயர்களை ஐக்கிய ஜனதா தளம் பட்டியலிட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் ரஜிப் ரஞ்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயர் பதவிகளை வகிக்கும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் பாஜ.வின் வாரிசு அரசியலுக்கு கீழ் வருவதில்லையா?
பீகாரில் பாஜ தலைவர் வாரிசு அரசியலின் கீழ் வரவில்லையா? சாம்ராட் சவுத்ரியின் தந்தை சகுனி சவுத்ரி ஒரு மூத்த அரசியல்வாதி மட்டுமின்றி மாநில சட்டப் பேரவைக்கு பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.ஒன்றிய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அனுராக் சிங் தாக்கூர் மற்றும் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் பல எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள் வாரிசு அரசியலுக்கு கீழ் வருகின்றனர். பாஜவில் இது போன்ற அரசியல்வாதிகள் 100க்கும் அதிகமாக உள்ளனர். இது பாஜவை விட பெரிய வாரிசு அரசியல் கட்சி இல்லை என்பதைக் காட்டுகிறது,” என்று குற்றம் சாட்டினார்.