Thursday, May 30, 2024
Home » திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு டீசல் லிட்டர் ரூ.65, பெட்ரோல் ரூ.75, சிலிண்டர் ரூ.500க்கு கிடைக்க நடவடிக்கை: ஜிஎஸ்டி மாற்றியமைக்கப்படும்; சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்; விவசாயிகள் வங்கி கடன், வட்டி தள்ளுபடி; முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு டீசல் லிட்டர் ரூ.65, பெட்ரோல் ரூ.75, சிலிண்டர் ரூ.500க்கு கிடைக்க நடவடிக்கை: ஜிஎஸ்டி மாற்றியமைக்கப்படும்; சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்; விவசாயிகள் வங்கி கடன், வட்டி தள்ளுபடி; முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

by Karthik Yash

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அதில், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும், காஸ் ரூ.500க்கும் வழங்கப்படும் என்றும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும், விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடன், வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, அண்ண அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் உள்ள மக்களின் பேராதரவுடன் ஒன்றியத்தில் ‘இந்தியா’ கூட்டணி அரசு நிறுவப்பட்டபின் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள்:
* இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கிகளில் பெற்றிருக்கும் கடனும், வட்டியும் ஒன்றிய அரசால் தள்ளுபடி செய்யப்படும்.
* அனைத்து மாநில மகளிருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும்.
* உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.
* புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்கப்படும்.
* ஒன்றிய அரசு பணிகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும்.
* ஒன்றிய அரசு அலுவகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.
* அனைத்து மாநில மொழிகளது வளர்ச்சிக்கும் சம அளவு நிதி வழங்கப்படும்.
* பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களால் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவதை, இனி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கமே மேற்கொள்ளும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்.
* திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
* மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்.
* இந்தியாவில் ராபர்ட் கால்டுவெல் மொழி ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும்.
* ஆளுநர் பதவி தேவையில்லை என்றாலும், அப்பதவி இருக்கும் வரையில் மாநில முதல்வர்களின் ஆலோசனை பெற்றே ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.
* தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்க்கு, இந்திய குடியுரிமை வழங்கப்படும்.
* கச்சத்தீவை மீட்க வழிவகை செய்யப்படும்.
* புதிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும்.
* நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.
* நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும்.
* தமிழ்நாட்டிற்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
* பாஜ அரசின் தொழிலாளர் நல விரோத சட்டங்கள் மறு சீரமைப்பு செய்யப்படும்.
* தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.
* வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.
* குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும்.
* ஒன்றிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
* ஜிஎஸ்டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.
* இரண்டாக பிரிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும். அந்த மாநில சட்டமன்றத்திற்கு உடனடியாக தேர்தல் நடத்தப்படும்.
* கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய பாஜ அரசு கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோத சட்டங்களும் இந்தியா கூட்டணி அரசு பொறுப்பேற்ற உடன் மறுபரிசீலனை செய்யப்படும்.
* மாணவர்களுக்கு வட்டி இல்லா கல்வி கடனாக ரூ.4 லட்சம் வரை வழங்கப்படும்.
* ஒன்றிய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு நிதி இரட்டிப்பாக்கப்படும்.
* பயிர் காப்பீட்டிற்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பங்குதொகையை அரசே செலுத்தும்.
* தமிழ்நாட்டு மீனவர்பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு காணப்படும்.
* ஜிஎஸ்டி வரி வசூல் முழுமையாக மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு மாநிலங்களுக்கான பங்களிப்பு போக மீதமுள்ள தொகை ஒன்றிய அரசுக்கு வழங்கப்படும்.
* பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும், காஸ் ரூ.500க்கும் வழங்கப்படும்.
* வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கான மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். இவை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* ஒன்றிய அரசு நிறுவனத்தில் தமிழர்களுக்கே முன்னுரிமை
இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை முற்றிலுமாக புறக்கணித்து, பிற மாநிலத்தை சேர்ந்தவர்களை திணிக்கிறது. தமிழ்நாட்டை வஞ்சிப்பதுடன், பிற மாநிலத்தவருடன் பகையுணர்வை வளர்க்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு சார்ந்த நிறுவனங்கள், அலுவலகங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த தகுதியான ஆண், பெண் விண்ணப்பதாரர்களுக்கே முன்னுரிமை அளிப்பது உறுதி செய்யப்படும்.

ரயிலில் முதியோருக்கு மீண்டும் சலுகை
* ரயில்வே துறைக்கு என தனி பட்ஜெட் மீண்டும் உருவாக்கப்படும்.
* ரயில்வே மண்டல வேலைவாய்ப்புகளில் அந்தந்த மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு 90% வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.
* மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 3ம் பாலினத்தோர், மாணவர்களுக்கு ரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
* திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய நகரங்களில் புறநகர் மின்சார ரயில் சேவைகள் அமைக்கப்படும்.
* விழுப்புரம் – தஞ்சை இடையிலான பிரதான பாதையில் 2வது ரயில் பாதை அமைக்கப்படும்.
* கள்ளக்குறிச்சி முதல் திருவண்ணாமலை வரை ரயில் பாதை அமைக்கப்படும்.
* பட்டுக்கோட்டை ரயில் வழித்தடத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் இயக்கப்படும்.
* பட்டுக்கோட்டை – மன்னார்குடி, பட்டுக்கோட்டை – தஞ்சாவூர் இடையில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்.
* திருவாரூரில் இருந்து மதுரை, திருச்செந்தூர், பழநி ஆகிய இடங்களுக்கு ரயில் சேவை ஏற்படுத்தப்படும். திருவாரூர்- சென்னை இடையே பகல் நேர ரயில் சேவை ஏற்படுத்தப்படும்.
* தமிழ்நாட்டில் திருச்சி, திருநெல்வேலி, சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவை ஏற்படுத்தப்படும்.
* காரைக்கால், நாகை, தஞ்சை ரயில் பாதை இரட்டை ரயில் பாதைகளாக மாற்றப்படும்.
* சென்னை – கோவை – தூத்துக்குடி ஆகிய நகரங்களை இணைத்து ஒரு விரைவு சரக்கு போக்குவரத்து தடம் புதிதாக செயல்படுத்தப்படும்.
* சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரையை ஒட்டி ஒரு புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.

You may also like

Leave a Comment

five × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi