Tuesday, June 18, 2024
Home » 10 கிலோவாட் திறன் வரையிலான சூரிய மின்சக்தி நிலையம் அமைக்க தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஒப்புதல் தேவை இல்லை: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தகவல்

10 கிலோவாட் திறன் வரையிலான சூரிய மின்சக்தி நிலையம் அமைக்க தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஒப்புதல் தேவை இல்லை: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தகவல்

by Arun Kumar

சென்னை: 10 கிலோவாட் திறன் வரையிலான சூரிய மின்சக்தி நிலையம் அமைக்க தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையின் ஒப்புதல் தேவை இல்லை என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. வீடுகள், பள்ளி மற்றும் கல்லூரிகள், சிறு நிறுவனங்கள் போன்றவற்றில் ரூப் டாப் எனப்படும் மேற்கூரை சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கப்படுகிறது. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, கட்டிட உரிமையாளர் பயன்படுத்தியது போக, உபரியை மின் வாரியத்திற்கு விற்கலாம். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சூரிய சக்தி போன்ற மரபு சார எரிசக்தியை ஒன்றிய, மாநில அரசுகளும் ஊக்குவித்து வருகின்றன. இதனால் பலரும் தங்கள் இடங்களில் சூரிய மின் சக்தி உற்பத்தி நிலையங்களை அமைத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட மேற்கூரை சூரிய மின் நிலைய இணைப்புகளின் கூடுதல் சுமைகளைத் தாங்கும் விதமாக மின்மாற்றிகளின் திறன் இருக்கிறதா என்பதை மதிப்பிட தொழில்நுட்பக் சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மின்மாற்றியும் அவற்றின் திறனில் 90 சதவீதம் வரை இணைப்புகளை கையாள முடியும். இந்த ஆய்வறிக்கை பதினைந்து நாட்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இருப்பினும் ஒரு சில இடங்களில் அறிக்கை சமர்ப்பிக்க நீண்ட காலம் ஆவதாகவும், இதனால் மின் நிலையம் அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து 10 கிலோ வாட் திறன் வரை மேற்கூரை சூரிய மின்சக்தி நிலையம் அமைக்க தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை ஒப்புதல் தேவை இல்லை என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சூரிய ஒளி மின்னழுத்த சக்தி அமைப்பு மற்றும் 10 கிலோவாட் திறன் கொண்ட மின் நிலையங்களுக்கு மீட்டர் மாற்றம், சேவை இணைப்பு வழங்குதல் ஆகிய விண்ணப்பங்களை உயரதிகாரிக்கு அனுப்பிவைக்காமல் கள அதிகாரிகளே நடவடிக்கை எடுத்து, காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதில் 10 கிலோவாட் வரையிலான சேவை இணைப்புக்கு பிரிவு அலுவலர்களே அனுமதி வழங்கலாம் என்றும், மீட்டர் மாற்ற தாமதமாகும் பட்சத்தில் 10 நாட்களுக்கு விண்ணப்பதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

three × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi