Wednesday, June 19, 2024
Home » ஒருவழிப்பாதையில் சென்றால் அபராதம் உறுதி: பேரிகார்டில் பொருத்தப்பட்ட 10 ஏஎன்பிஆர் கேமரா அறிமுகம்

ஒருவழிப்பாதையில் சென்றால் அபராதம் உறுதி: பேரிகார்டில் பொருத்தப்பட்ட 10 ஏஎன்பிஆர் கேமரா அறிமுகம்

by Arun Kumar

சென்னை: சென்னையில் ஒரு வழிப் பாதையில் செல்லும் வாகன ஓட்டிகளை அடையாளம் கண்டு அபராதம் விதிக்கும் வகையில் பேரிகார்டில் பொருத்தப்பட்ட 10 ஏஎன்பிஆர் கேமராக்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீற வேண்டாம் என்று போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துக்களை தடுக்கவும் போக்குவரத்து காவல்துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை பெருநகரில் அண்ணாநகர் ஆர்ச், அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் சிக்னல், பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை, ஓஎம்ஆர் சாலை, தரமணி நெடுஞ்சாலை என 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிக்னல்களில் ஏற்கனவே அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஏஎன்பிஆர் கேமரா அமைக்கப்பட்டு விதிமுறைகள் மீறும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதோடு இல்லாமல் சென்னை போக்குவரத்து காவல்துறையில் வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்திற்கு ஏஎன்பிஆர் கேமரா பொருத்தப்பட்ட 2 வாகனங்கள் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறையால் வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து போலீசாருக்கும் இடையே ஏற்படும் தகராறுகள் குறைந்துள்ளதாக ஆய்வு மூலம் தகவல் தெரியவந்துள்ளது. மேலும் ஒரு புதிய முயற்சியாக விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிக்கும் வகையில் சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் பேரிகார்டில் சோலார் மூலம் இயங்கும் ஏஎன்பிஆர் கேமராவை பொருத்தி அபராதம் விதிக்கும் முறையை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருகின்றனர்.

முதற்கட்டமாக 10 பேரிகார்டில் பொருத்தப்பட்ட ஏஎன்பிஆர் கேமராக்களை போக்குவரத்து போலீசார் கொள்முதல் செய்துள்ளனர். பேரிகார்டில் இந்த கேமரா பொருத்தப்படுவதால், விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் பதிவு எண்களை ஸ்கேன் செய்து விதிமீறல் குறித்து வாகன உரிமையாளருக்கு அபராதம் தொகைக்கான சலான் அனுப்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கேமரா குறிப்பாக ஒரு வழி பாதையில் செல்வோரை தண்டிக்கும் வகையில் வைக்கப்படுகிறது. இந்த நடைமுறையால் சென்னையில் சாலை விபத்துகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் குறையும் என்ற போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

You may also like

Leave a Comment

4 − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi