புதுடெல்லி: காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எதிராகவும், அதேப்போன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு எதிராகவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மூன்று நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்றும், மேலும் அதுகுறித்த விரிவான அறிக்கையை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு , கர்நாடகா, காவிரி ஆணையம் ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதேப்போன்று ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று வினாடிக்கு 5000 கன அடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி காலை முதல் வரும் 12ம் தேதி வரை 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுவை நாளை மறுநாள் உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
இந்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா அரசு தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கர்நாடகாவில் போதிய மழை இல்லாததால் நீர் பற்றாக்குறை உள்ளது. அதனால் தமிழ்நாட்டுக்கு வரும் 12ம் தேதி வரையில் வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவை ஆணையம் மறுஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.