டெல்லி: பணிக்கு மிகவும் தாமதமாக வருவோர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து துறைகளுக்கும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்களில் பலர் தங்கள் அலுவலகத்திற்கு பணிக்கு வரும் போது பயோமெட்ரிக் ஆதார் அடிப்படையிலான வருகை பதிவு முறையை கடைபிடிக்காமல் தாமதமாக வருவதாக ஒன்றிய பணியாளர் நலத்துறைக்கு புகார்கள் குவிந்து வருகின்றன. இதையடுத்து ரயில்வே உள்ளிட்ட அனைத்து அமைச்சகங்களுக்கும் ஒன்றிய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் அனைத்து ஒன்றிய அரசு ஊழியர்களுக்கும் தங்களுக்கான பயோமெட்ரிக் வருகை பதிவேட்டில் முறையாக பதிவு செய்கிறார்களா என்பதை அந்தந்த துறைகளின் பொறுப்பாளர்கள் கவனமாக கண்காணிக்க வேண்டும்.
ஊழியர்களின் பெயர் பயோமெட்ரிக் பதிவேட்டில் சேர்க்கப்படாமல் விடுபட்டு இருந்தால் தொடர்புடைய அதிகாரிகள் அல்லது அலுவலர்கள் உடனடியாக அதை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியர்கள் மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் அவர்கள் தினமும் வருகை பதிவேட்டில் பதிவு செய்வதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறைகளின் அதிகாரிகளும் தங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு வருகிறார்களா என்பதையும்,
அவர்கள் பணியாற்றும் நேரம் மற்றும் அலுவலகத்தில் இருந்து புறப்படும் நேரம் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ள ஒன்றிய அரசு, ஒழுங்கீனமாக உள்ள பணியாளர் மீது அரசு விதிமுறைகளின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதம் 2 நாட்களுக்கு மேல் தாமதமாக வந்தால் அரைநாள் விடுப்பு கழிக்கப்படும். தாமதமாக வருவதை வாடிக்கையாக வைத்திருப்போர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். முக அடையாளம் அடிப்படையில் வருகை பதிவு முறையை அமல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.