புதுடெல்லி: இந்தியா தலைமையில் நடக்கும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு தலைவர்களுக்கு இந்தியாவின் பாரம்பரிய மற்றும் சிறுதானிய உணவுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா கடந்தாண்டு சுழற்சி முறையிலான, ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை பெற்றது. அதைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் சுகாதாரம், பொருளாதாரம், நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான ஜி 20 மாநாடுகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், இதன் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு வரும் 9, 10 தேதிகளில் தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசின் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியா ஜி 20-க்கான சிறப்பு செயலாளர் முகேஷ் பர்தேஷி, “இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிநாட்டு தலைவர்களுக்கு இந்தியாவின் பாரம்பரிய மற்றும் சிறுதானிய உணவுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் தலைவர்களுக்கு புதிய முயற்சியாக இந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகளுடன் நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிறுதானிய உணவு வகைகள் மற்றும் சாந்தினி சவுக் போன்ற பகுதிகளில் உள்ள பிரபல தெருக்கடைகளின் உணவுகளில் சுவை மிகுந்தவற்றையும் விருந்து படைக்க திட்டமிட்டுள்ளோம்.நமது உணவு குழுவில் உள்ள செப்கள் இதற்காக சிறுதானிய உணவுகள் உள்பட பல்வேறு உணவு வகைகளை தயார் செய்தும், அவற்றை ருசி பார்த்தும் எந்தெந்த உணவுகள் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் குழுவினருக்கு, நமது நாட்டின் கைவினைத் திறன், பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் கைவினைப் பொருட்கள், ஜவுளிகள் மற்றும் வண்ணம் தீட்டிய பாரம்பரிய ஓவியங்கள் உள்ளிட்டவற்றை பரிசாக அளிக்க இருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.