Thursday, September 21, 2023
Home » ஆரூரில் அரிய திருமேனிகள்

ஆரூரில் அரிய திருமேனிகள்

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருவாரூர் பூங்கோயிலில் பதிகம் பாடிய திருநாவுக்கரசு பெருமானார் ‘‘ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ’’ எனத் தொடங்கும் தேவாரப் பனுவலைப் பாடும் போது, ஆரூர் பெருமான் அங்கு கோயில் கொண்ட தொன்மையினைப் பலவாறு எடுத்துரைத்துள்ளார். ‘‘கோலம் நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ விழவு ஆரூர் கோயிலாகக் கொண்ட நாளே’’ – என்றும், ‘‘வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ விழவு ஆரூர் கோயிலாகக் கொண்ட நாளே’’ – என்றும் கூறுவதை ஆழ்ந்து நோக்கும்போது ஆரூர் திருக்கோயிலின் பழைமை எத்தகையது என்பதறியலாம். சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தின் தொடக்கத்தில், திருவாரூர் நகரின் பெருமையினை எடுத்துக்கூறி அதன் நடுநாயகமாகத் திகழும் பூங்கோயிலினை,

இணைய வகை அரநெறியில் எண்ணிறந்தோர்க்கருள் புரிந்து
முனைவரவர் மகிழ்ந்தருளப் பெற்றுடைய மூதூர்மேல்
புனையும் உரை நம்மளவில் புகலலாந் தகைமையதோ?
அனையதனுக்கு ககமலராம் அறவனார் பூங்கோயில்

என்றும் கூறும் தகைமையால் ஆரூர் கமலாலயமாம் திருக்கோயிலின் பெருமையை எடுத்துரைத்தல் எளிதாமோ? நம்மில் பெரும்பாலானோர் ‘‘கமலாலயம்’’ என்றால் அது ஆரூர் திருக்குளத்தின் பெயரெனக் கருதி வருகின்றனர். அக்குளத்திற்கு கமலாலயத் தீர்த்தக் குளம் என்பதுதான் பெயர். புற்றிடங்கொண்ட பெருமான் கோயில் கொண்டுள்ள திருமூலட்டானம் தான் கமலாலயம் என்பதாகும். அதனைப் பூங்கோயில் எனச் சிறப்பித்துக் கூறுவர். தேவாரப் பாடல்கள் பெற்ற திருஅரநெறி எனும் அசலேசம், பூங்கோயில் எனும் மூலட்டானம் ஆகியவையும், வீதிவிடங்கப் பெருமான் உறையும் தியாகேசர் திருக்கோயிலும் ஆரூர் பெருங்கோயில் வளாகத்தினுள் அமைந்தவையாகும். சுந்தரரால் பாடப்பெற்ற பரவையுண் மண்டளி ஆரூர் திருவீதியில் அமைந்த தேவாரத் தலமாகும்.

தியாகேசர் திருக்கோயில் என ஆரூர் பெருங்கோயில் முழுவதையும் ஒரே பெயரால் அழைக்கும் மரபு பின்னாளில் தோன்றியது. இவ்வாலயத்தின் சிறப்புகளைப் பட்டியலிடுதல் என்பது கடினமான செயலாகும். இருப்பினும் சில அரிய சிற்பப் படைப்புகள் அங்கு இடம் பெற்றிருப்பதைப் பலர் அறிந்திரார். அவற்றை இனிக் காண்போம்.மகேந்திர பல்லவனின் சமகாலத்தில் வாழ்ந்தவரான திருநாவுக்கரசு பெருமானார், திருவாரூர் தேவாரப் பதிகத்தில், அத்திருக்கோயில் எவ்வளவு பழமையான கோயில் என்று கூறுவதைக் கண்டோம்.

அவ்வாறாயின் அந்த பழைய ஆலயத்தில் இடம் பெற்றிருந்த பரிவாராலய தெய்வங்கள் போன்றவை எங்கே இடம் பெற்றுள்ளன என்பதை நாம் காண முற்படும்போது, அவை காலந்தோறும் அக்கோயில் பெற்ற விரிவாக்கத்தால் இடம்பெயர்ந்து ஆலய வளாகத்துள்ளேயே பல்வேறு இடங்களில் இருப் பதைக் காண முடிகிறது.

இரண்டாம் பிராகாரத்தின் தென்புறம் அசலேசத்திற்கு மேற்காக சப்தமாதர் எனப்பெறும் தாய்மார் எழுவருக்கென பின்னாளில் எடுக்கப்பெற்ற சிறிய கோயில் ஒன்றுள்ளது. அதனுள் நீண்ட கற்பலகையில் புடைப்புச் சிற்பங்களாகப் பிராமி, வைஷ்ணவி, மாகேஸ்வரி, வாராகி, கெளமாரி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தாய்மார் எழுவரும் காட்சி நல்குகின்றனர்.

இவைதாம் இவ்வாலயத்தின் மிகப் பழமையான சிற்பப் படைப்புகளாகும். இவைபோன்றே வெளிமதிலில் வடகிழக்கு திசையில் இடம்பெற்றுள்ள கிழக்கு சிறிய கோபுர உட்புற வாயிற்பகுதியின் அனிந்தம் எனும் திண்ணையில் மிகப் பழமையான சண்டீசர் திருமேனி உள்ளது. முற்காலப் பல்லவரின் படைப்பான இக்கற்சிற்பம்தான் நாவுக் கரசர் காலத்தில் இவ்வாலயத்தில் திகழ்ந்த சண்டீசராவார். தற்போது யமசண்டீசர் என்ற பெயரில் முதல் பிராகாரத்தில் உள்ள திருமேனி சண்டீசர் அன்று. அது பல்லவர் கால லகுளீசர் வடிவமாகும்.

திருச்சுற்று மாளிகையில் தென்புறம் நோக்கியவாறு ஒரு அரிய மகிஷாசுர மர்த்தினியின் கற்சிற்பம் வழிபாட்டில் உள்ளது. இங்கு தேவி எட்டுக் கரம் உடையவளாய் மகிஷாசுரனை தன் சூலாயுதத்தால் வதம் செய்கின்றாள். அம்மையின் வலப்பாதம் எருமைத் தலையைத் தரையில் அழுத்துகின்றது. இடப்பாதமோ எருமை உடலிலிருந்து வெளிவரும் மகிஷாசுரனை உதைத்து நிற்கின்றது.

அவனோ மனித உருவுடன் வாளும் கேடயமும் ஏந்தியுள்ளான். கிரீட மகுடமணிந்த தேவி தன் வலப் பின்கரத்தை மேலுயர்த்தி அம்பரா தூளியிலிருந்து அம்பொன்றினை எடுக்கின்றாள். அடுத்த வலப் பின்கரம் சக்கரத்தை ஏந்தியுள்ளது. அதற்கு முன் உள்ள வலக்கரம் வாள் ஒன்றினைத் தாங்கிப் பிடித்தவாறு அமைந்துள்ளது. வல முன்கரத்தால் நீண்ட சூலத்தை ஏந்திய இத்தேவி அதனை மகிடனின் முதுகினில் பாய்ச்சுகிறாள். இடப்பின்கரம் அம்பொன்றினை ஏந்தியுள்ளது. அதற்கு முன் உள்ள கரம் சங்கினை ஏந்துகின்றது. அதற்கு முன் உள்ள கரம் கேடயத்தைத் தாங்கி நிற்கின்றது. இடமுன்கரம் மகிடனின் சிகையைப் பிடித்துத் தூக்கி நிற்கின்றது.

எழிலுடைய ஆடை அணிகலன்கள் அழகு செய்ய கோப ஆவேசத்துடனும் இரு கோரைப் பற்கள் தெரியும் வண்ணமும் அன்னையின் திருவுருவம் காணப் பெறுகின்றது. அத்தேவிக்கு பின்புறமிருந்து பாயும் சிங்கமொன்று எருமையின் பின் உடலினைக் கடித்துக் குதறுகின்றது.எருமையின் முழு உடல் இங்கு காணப்பெறினும், அன்னையின் வாளால் வெட்டுண்ட தலை எருமை உடலிலிருந்து நீங்கி கீழே விழும் நிலையில் அதனைத் தன் வலக்காலால் அழுத்துகின்றாள்.

அதே நேரத்தில் வெட்டுப்பட்ட கழுத்திலிருந்து மனிதவடிவில் மகிஷாசுரன் வாளும் கேடயமும் ஏந்தி வெளிவருகிறான். அவனைத்தான் கொற்றவை தன் கூரிய சூலாயுதத்தால் குத்தி சாய்க்க முற்படுகின்றாள். இச்சிற்பத்தில்தான் அன்னையின் கோப ஆவேசமும், கடும் சமர் புரியும் கோலமும் வெளிப்படுகின்றன. இங்கே பொதுவாக பல்லவர், சோழர்கால சிற்பங்களில் காணப்பெறும் கொற்றவையின் அருள் காட்டும் அபயக்கரம் இல்லை. சாந்த முகம் இல்லை. இவள்தான் ‘‘எரிசின கொற்றவை’’ ஆவாள். இங்கு மகிடனை வதம் செய்யும் கோலக்காட்சிதான் வெளிப் படுகின்றது. இச்சிற்பம் தமிழ்நாட்டுச் சிற்பிகளால் வடிக்கப் பெற்றதன்று.

கர்நாடக மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியினை ஆட்சி செய்த நுளம்ப மன்னர்களின் சிற்பிகளால் வடிக்கப்பெற்றது. சோழப் பெருவேந்தர்கள் நுளம்பபாடி நாட்டை வெற்றி கண்டபோது அங்கிருந்து போரின் அதிதெய்வமாகிய இந்த கொற்றவை வடிவத்தினை தங்கள் வெற்றியின் அடையாளமாகக்கொண்டு வந்து இவ்வாலயத்தில் பிரதிட்டை செய்துள்ளனர். ஆரூர் வாழ் மக்களில் பெரும்பாலானோர் இச்சிற்பத்தைக் கண்டிருக்க வாய்ப்பில்லை. இனியாவது இந்த எரிசின கொற்றவையைக் கண்டு தரிசனம் செய்யுங்கள்.

ஆரூர் ஆலயத்து இரண்டாம் பிராகாரத்தின் தென்பகுதியில் அரநெறிக்கு சற்று மேற்காக வடக்குநோக்கி துர்க்கா தேவிக்கு என்று ஒரு சிற்றாலயம் உள்ளது. அங்கு ஒரு கற்பலகையில் புடைப்புச் சிற்பமாக எட்டுக் கரங்களுடன் கருணையின் மொத்த வடிவமாக துர்க்காதேவி காணப் பெறுகின்றாள். பின் வலக்கரம் எரிதழலுடன் திகழும் பிரயோக சக்கரத்தையும், அதற்கு முன் திகழும் கரம் வாளை உயர்த்திப் பிடித்தும், அதற்கு முன் உள்ள வலக்கரம் அரவணைக்கும் கோலத்தைக் காட்ட, வல முன்கரம் சின் முத்திரையோடு அபயம் காட்டுகின்றது.

இடப் பின்கரங்கள் சங்கு, வில், கேடயம் ஆகியவற்றை ஏந்தி நிற்க முன்கரம் தொடைமீது இருத்திய நிலையில் காணப்பெறுகின்றன. அம்மையோ தான் முன்னர் போரின்போது வீழ்த்திய மகிடத்தலை (எருமைத் தலை) மீது திரிபங்க நிலையில் நின்றவாறு, மகிடன் உட்பட அனைவர்க்கும் அருள் பாலிக்கின்றான். நீண்ட சூலம் பின்புறம் உள்ளது. அருகே ஒரு வேலைப்பாடுடைய சட்டத்தின்மீது கிளியொன்று உள்ளது.

அம்பிகையின் இத்திருவடிவம் கருணையின் உச்ச வெளிப்பாட்டை நமக்குக் காட்டுவதாகும். திருமுகப் பொலிவு நம் அனைவரையும் கவர்ந்து ஈர்க்கும் தகைமையது என்பதை இத்தேவியைக் கண்டு தரிசிப்போர் பெறும் அநுபூதியாகும். ஆரூர் கோயிலில் இந்த திருவடிவத்தினை ‘‘எரிசின கொற்றவை’’ ரெளத்திர துர்க்கை எனப் பெயரிட்டு அழைக்கின்றனர். எரிசின கொற்றவையோ முதல் பிராகாரத்தில் நுளம்ப நாட்டுக் கொற்றவையாகத் திகழ இத்தேவியை அவ்வாறு அழைப்பது பொருந்தாத ஒன்றாம்.

இரண்டாம் பிராகாரத்தில் உள்ள ஆனந்தேசம் எனும் சிறிய சிவாலயத்தில் இடம் பெற்றுள்ள ஜேஷ்டாதேவி பண்டைய ஆரூர் ஆலயத்து பரிவார தேவதையாவாள். நடுவே தேவி அமர்ந்திருக்க ஒருபுறம் அவள் மகன் இடப முகத்துடன் தடி ஏந்தி அமர்ந்துள்ளான். அவன் திருநாமம் விருஷபன் என்பதாகும். மறுபுறம் கையில் மலர் ஏந்தியவாறு தேவியின் திருமகளாகிய நமனை என்பாள் வீற்றிருக்கின்றாள். இத்தேவி நீர்நிலைகளை க் காப்பவளாகவும், ஊரில் உள்ள குழந்தைகளை இரட்சிப்பவளாகவும் தொற்றுநோய்களிலிருந்து ஊர் மக்களைக் காப்பாற்றுபவளாகவும் போற்றப்பெறுபவள் ஆவாள். சிவனுக்குரிய அஷ்ட (எட்டு) முக்கிய பரிவார தெய்வங்களில் இவள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவள் என்பது தொன்மையான நூல்களின் கூற்றாகும்.

தொகுப்பு: முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?