புதுடெல்லி: டெல்லி மக்களிடம் மோடி எதை சொல்லி ஓட்டு கேட்கிறார்? என்று முதல்வர் கெஜ்ரிவால் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் நேற்று மேற்கு டெல்லியின் விகாஸ்புரியில் பிரசாரம் மேற்கொண்ட போது, தனது காரின் மேல் நின்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘தேர்தல் நெருங்குவதால் எனக்கு எதிராக தினமும் அவதூறுகளை பரப்புவார்கள். ஆம்ஆத்மி அமைச்சர்களையும், தொண்டர்களையும் குற்றவாளிகளாக அறிவித்து, அவர்களை சிறையில் தள்ளுவார்கள்.
அதற்காக அவர்கள் எந்த மட்டத்திற்கும் செல்வார்கள். நம்மீது சேற்றை வாரி இறைப்பார்கள். டெல்லியில் பள்ளிகள், மருத்துவமனைகளை கட்டினேன். இலவச மின்சாரம் கொடுத்தேன். ஆனால் மோடி எதை சொல்லி ஓட்டு கேட்கிறார்? அவர் பெண்கள் அணியும் தாலியை பற்றி மோடி பேசுகிறார்; சரத் பவாரின் ஆன்மா அலைவதாக கூறுகிறார்; உத்தவ் தாக்கரேயை போலி என்கிறார்.
பிரதமராக இருந்து கொண்டு இப்படியா பேசுவது? என்னை சிறையில் அடைத்த போது எனக்கு மருந்து, மாத்திரைகள் கூட கொடுக்கவில்லை. நான் ஒரு சர்க்கரை நோயாளி; எனக்கு இன்சுலின் கொடுக்கவில்லை. அவர்கள் (பாஜக) 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்கின்றனர். ஆனால் அவர்களுக்கு 200 இடங்கள் கூட கிடைக்காது’ என்றார்.