ஊட்டி: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் உதகை ரோஜா கண்காட்சி 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 19-வது ரோஜா கண்காட்சி இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இன்று வரை 70,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ரோஜா கண்காட்சியை கண்டு ரசித்துள்ளனர்.
உதகையில் தற்போது கோடை சீசன் நடைபெற்று வருவதால் தினந்தோரும் 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக உதகையில் இருக்க கூடிய அரசு ரோஜா பூங்காவில் கடந்த மே 10-ம் தேதி 19-வது ரோஜா கண்காட்சி தொடங்கியது.
இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக சுமார் 1 லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. அவற்றை ஏராளமான சுற்றுளா பயணிகள் தினந்தோறும் கண்டு ரசித்து வருகின்றனர். நாளுக்கு நாள் ரோஜா கண்காட்சியை காண்பதற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
10 நாட்களுக்கு மட்டுமே ரோஜா கண்காட்சி திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துகொண்டே செல்வதால் ரோஜா கண்காட்சியை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.