கடந்த சில வாரங்களாக திருப்பூர் மாநகரம் முழுவதும் வெயில் கடுமையாக இருந்தது. கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழ்நிலை நிலவ தொடங்கியது. தமிழகம் முழுவதும் ஐந்து நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் திருப்பூர் மாநகரில் நேற்று காலை லேசான வெயில் இருந்தது. தொடர்ந்து மதியத்திற்கு மேல் வானம் கரு மேகத்துடன் காணப்பட்டது. மாலை திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. மாலை இடைவிடாது கன மழை பெய்தது. இதன் காரணமாக காங்கேயம் சாலை, தாராபுரம் சாலை, பெருமாநல்லூர் சாலை உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பெருமாநல்லூர் சாலை வடக்கு உழவர் சந்தை செல்லும் பகுதி, கந்தசாமி லே-அவுட் பகுதி, ஜெயலட்சுமி நகர், ஓம் சக்தி கோவில் வீதிகளில் மழை நீர் வழிந்து ஓடியது.