Sunday, May 19, 2024
Home » 3வது டி20 போட்டியில் இன்று இந்தியா – இங்கிலாந்து பலப்பரீட்சை: சாதிக்கும் முனைப்பில் ஹர்மன்பிரீத் மற்றும் கோ

3வது டி20 போட்டியில் இன்று இந்தியா – இங்கிலாந்து பலப்பரீட்சை: சாதிக்கும் முனைப்பில் ஹர்மன்பிரீத் மற்றும் கோ

by kannappan

பிரிஸ்டல்: இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளிடையே நடக்கும் டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி போட்டி பிரிஸ்டல் கவுன்டி மைதானத்தில் இன்று இரவு 11.00 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, முதலில் 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில், டெர்பியில் நடந்த 2வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன் குவித்தது. முன்னணி வீராங்கனைகள் சோபியா 5, வியாட் 6, ஆலிஸ் கேப்ஸி 4 ரன்னில் வெளியேற, கேப்டன் ஏமி ஜோன்ஸ் 17, பிரையோனி ஸ்மித் 16 ரன் எடுத்தனர். அதிகபட்சமாக  ஃபிரெயா கேம்ப்  51* ரன் (37 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), மய்யா பவுஷியர் 34 ரன் (26 பந்து, 4 பவுண்டரி) விளாசினர். இவர்கள் 6வது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்திய தரப்பில் ஸ்னேஹ் ராணா 3, ரேணுகா சிங், தீப்தி சர்மா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய இந்தியா 16.4 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்து வென்றது. ஷபாலி 20, ஹேமலதா 9 ரன்னில் ஆட்டமிழந்தனர். தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 79* ரன் (53பந்து, 13பவுண்டரி), கேப்டன் ஹர்மன்பிரீத் 29* ரன்னுடன் (22 பந்து, 4 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த இணை 79 ரன் விளாசி அசத்தியது. மந்தனா சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இங்கிலாந்து தரப்பில் ஃபிரெயா கேம்ப், ஷோபி எக்லெஸ்டோன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் இன்று நள்ளிரவு  பிரிஸ்டலில் நடக்கிறது. இதில் வென்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி….

You may also like

Leave a Comment

ten − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi