Tuesday, May 28, 2024
Home » முதல்கட்டமாக 5 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் துவக்கினார்

முதல்கட்டமாக 5 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் துவக்கினார்

by kannappan

மதுரை: தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டு  திட்டத்தை மதுரையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கினார். இத்திட்டம் முதற்கட்டமாக மதுரை, சென்னை உள்ளிட்ட 5  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தில்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நேற்று முன்தினம் இரவு மதுரை வந்த அவர் சர்க்யூட் ஹவுசில் தங்கினார்.நேற்று காலை நகராட்சி நிர்வாகம்  மற்றும் கழிவுநீர் வழங்கல் துறை சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டு  திட்ட தொடக்க விழா மதுரை மாநகராட்சியில் நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை துவக்கி வைத்ததுடன், 53,301 தூய்மைப்  பணியாளர்களுக்கு தலைக்கவசம், கையுறை, கால் உறை, ஒளிரும் மேல்சட்டை  உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார். இத்திட்டம் சென்னை மாநகராட்சி மண்டலம்-6, மதுரை மாநகராட்சி மண்டலம்-3,  பொள்ளாச்சி நகராட்சி, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் சேரன்மகாதேவி  பேரூராட்சி ஆகியவற்றில் முதற்கட்டமாக துவக்கப்பட்டது.ஐந்து  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள  நிலையில், பிறகு அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இத்திட்டம்  விரிவுபடுத்தப்படுகிறது.  இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புற  உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் 18,859 நிரந்தர பணியாளர்கள் மற்றும்  34,442 தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள், என மொத்தம் 53,301  பணியாளர்கள்  மட்டுமல்லாமல், தனியார் துறைகள், நிறுவனங்கள் மற்றும் தூய்மைப் பணியில்  ஈடுபட்டுள்ள அனைத்து முறைசாரா பணியாளர்களும் பயனடைவர். இத்திட்டத்திற்கான இலட்சினை,  தூய்மைப் பணியாளர்களை கண்டறிந்து கணக்கெடுக்கும் பணியினை மேற்கொள்வதற்காக மொபைல் செயலியையும் முதல்வர்  வெளியிட்டார்.தொடர்ந்து காணொலி காட்சி வாயிலாக, தமிழகத்தின் மேலும் 4  இடங்களிலும் துவக்கி வைத்து அவர்கள் குறித்து  விபரங்களை சேகரிக்கும் களப்பணிக்குழுவினர்களின் பணிகளும், தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்ட குறும்படங்களும் ஒளிபரப்பப்பட்டன. ஆமதாபாத்தில் உள்ள நகர்ப்புற மேலாண்மை மைய உதவியுடன் இத்திட்டம் சிறப்பாக  செயல்படுத்திட  திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களது குழந்தைகளுக்கு முறையான கல்வி வசதி வழங்குதல் மற்றும்  மாற்றுத்தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடன் உதவி, ஓய்வூதியம், காப்பீடு  போன்ற அரசு திட்டங்களை இணைப்பதற்கான வழிமுறைகளும் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் மூலம் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து,  பொருளாதாரம் மேம்பாடு அடையும்.அம்பேத்கர் சிலை திறப்பு: தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டு  திட்டத்தை துவக்கி வைத்த பின், மதுரை  அவனியாபுரம் பெருங்குடியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பிலான விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பனிரெண்டே  முக்கால் அடி உயர டாக்டர் அம்பேத்கர் முழு உருவ வெண்கலச்சிலையை திறந்து  வைத்தார். நிகழ்ச்சிக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிறுவனத்தலைவரும்,  எம்.பி.யுமான தொல் திருமாவளவன் தலைமை வகித்தார். சிலை பீடத்தில் இருந்த  அம்பேத்கர் படத்திற்கு முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அம்பேத்கர் சிலையை  சுற்றிப்பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், சிலை அமைந்துள்ளதன் சிறப்பு  குறித்து தொல் திருமாவளவன் விளக்கினார். அமைச்சர்கள்  பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் முன்னிலை வகித்தனர். தமிழக  அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன்,  தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மனோதங்கராஜ், எம்பிக்கள்  சு.வெங்கடேசன், மாணிக்கம்தாகூர், எம்எல்ஏக்கள் கோ.தளபதி, வெங்கடேசன்,  புதூர் பூமிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர். தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.அறிவித்தார் அன்று… செயல்படுத்தினார் இன்று: 2022-23ம் ஆண்டிற்கான நகராட்சி  நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கையில், “நாள்தோறும் அயராது உழைத்து வரும் தூய்மைப்  பணியாளர்கள் மீது இந்த அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இவர்களின் வாழ்வை  மேம்படுத்தவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நகர்ப்புற உள்ளாட்சி  அமைப்புகள் மூலமாக தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத்திட்டம்  செயல்படுத்தப்படும். அவர்களுக்கான பல்வேறு அரசு நலத்திட்டங்களை  ஒருங்கிணைத்து, பயன்பெறச் செய்யவும், அவர்களின் குழந்தைகள் முறையான கல்வி  பெறுவதை உறுதி செய்யவும், இயந்திரமயமாக்கப்படும் தூய்மைப்பணியில் அவர்களுக்கு தேவையான திறன் பயிற்சினை வழங்கி அவர்களை அப்பணியில்  ஈடுபடுத்தவும் விருப்பத்தின் அடிப்படையில் அவர்களுக்கு மாற்றுத்தொழில்  தொடங்கவும், வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்”  என்று முதல்வர் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின்,  மதுரையில் நேற்று தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி  வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது….

You may also like

Leave a Comment

seventeen − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi