Sunday, May 19, 2024
Home » சிற்பமும் சிறப்பும்-இரணிய வதம்

சிற்பமும் சிறப்பும்-இரணிய வதம்

by kannappan

ஆலயம்: சென்ன கேசவர் ஆலயம், பேளூர், ஹாசன் மாவட்டம், கர்நாடக மாநிலம்.காலம்: ஹொய்சாள மன்னர் விஷ்ணுவர்த்தனன் – கிபி.1117. உலகில் எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அதைப் போக்கி,  தர்மத்தை நிலைநாட்ட அவதாரம் எடுக்கும் திருமாலின் அவதாரங்கள் அனைத்துமே ஒரு நோக்கம், பிறப்புடன் இணைந்திருக்கும்.அவரது அவதாரங்களில் முக்கியமான நரசிம்மர் அவதாரமும் ஒரு நோக்கத்துடன் எடுக்கப்பட்டது தான். ஆனால் பிறப்பு, வளர்ப்பு எதுவு மின்றி, பக்தனைக்காக்க நொடிப்பொழுதில் வெளிப்பட்டது இந்த அவதாரத்தில் தான்.திருமாலின் அவதாரங்களில் ராமர், கிருஷ்ணருக்கு பிறகு மிகவும் புகழ்பெற்றது நரசிம்ம அவதாரம்.தன் மீது அதீத பக்தி கொண்ட பக்தனான பிரகலாதனை, அவனது தந்தையும் பெரும் வரங்கள் பெற்றவனுமாகிய இரணியனிடமிருந்து காக்கவும், இரணியனை அழிப்பதற்காகவும், எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவுமே தூணிலிருந்து வெளிப்படும் நரசிம்ம அவதாரம் எடுத்தார்.இரணியன் தவமிருந்து பெற்ற வரத்தை ஒட்டியே அவனது வதம் நிகழ்ந்தேறியது.‘‘அங்கற் கிடரின்றி அந்திப்பொழுதத்து,மங்க இரணியன தாகத்தை, பொங்கிஅரியுருவ மாய்ப்பிளந்த அம்மா னவனே,கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து.’’- பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதிகாலையும் மாலையும் இல்லாத அந்தி சாயும் வேளையில், அரண்மனையின் உள்ளேயும் வெளியேயும் இல்லாமல் வாயிற்படியில், வானிலும் மண்ணிலும் இல்லாமல் – தன் மடியில் இரணியனைக் கிடத்தி, மனித உருவும், விலங்கு உருவும் இணைந்த நரசிம்ஹ உருவத்தில், ஆயுதங்கள் இல்லாமல்,  தன் கூரிய நகங்களால் அவனை வதம் செய்தார்  பெருமாள்.பல இந்து மத புராண நூல்களில் நரசிம்ம அவதாரத்தைப் பற்றிய குறிப்புகள்  காணப் படுகின்றன. மகாபாரதத்திலும் (3.272.56-60) நரசிம்மரைப் பற்றிய குறிப்பு உள்ளது.திருத்தக்கதேவர் தனது நூலான ‘சீவக சிந்தாமணி’யில், ‘‘இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்’’ என நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.நரசிம்மரின் பெருமையையும், இரணியன்-பிரகலாதன் வரலாற்றையும் புலவர் கடுவன் இளவெயின்னார் சங்கத் தமிழ் இலக்கியங்களுள் ஒன்றான ‘பரிபாடல்’ 4-வது பாடலில் கூறுகிறார்.இதன் மூலம் சங்க இலக்கிய காலத்திலேயே நரசிம்மர் வழிபாடு இருந்தது தெளிவாகின்றது.பாரத நாட்டின் நுண் கலைகளான சிற்பம், ஓவியம் போன்றவற்றில் பெரும்பாலானோர் ஆர்வத்துடன் தேர்ந்தெடுக்கும் கருப்பொருளாக இருப்பது நரசிம்மர் அவதாரமாகும். நரசிம்மரின் இரணிய வத காட்சி ஏராளமான பழங்கால ஆலயங்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.அவற்றுள் மிக நுண்ணிய கலையம்சம் கொண்டது என குறிப்பிடத்தக்க சிற்பம், ஹொய்சாள வம்சத்தினரின் (கிபி 10-13ஆம் நூற்றாண்டு) கலைக்கூடமான பேளூர் சென்ன கேசவர் ஆலயத்தின் கருவறை புறச்சுவரில் உள்ளது.இடது காலால் இரணியனின் தலையைத் தூக்கியும், வலது காலால் அவன் உடலை தாங்கிய வண்ணம் நரசிம்மர் நிற்கும் தோற்றம், இரணியனின் வயிற்றையும், தொடையையும் நகங்களினால் குத்திக்கிழிக்கும் போது நரசிம்மரின் முகத்தில் வெளிப்படும் ஆக்ரோஷம், கேடயம் தாங்கிய இரணியனின் விழிகளில் காணப்படும் அச்சம், வயிற்றிலிருந்து குடலை உருவி மாலையாக்கி, பின்கைகளால் தூக்கிப்பிடித்திருக்கும் பாங்கு, நரசிம்மர் கைகளில் ஏந்திய பல்வேறு ஆயுதங்கள், கீழே வலப்புறம் கருடனும், பிரகலாதனும் பக்தியுடன் வணங்கி நிற்றல் என அனைவரின் உணர்ச்சிகளையும் உள்ளடக்கிய இந்த சிற்பம், ஹொய்சாள சிற்பக்கலைப்பாணிக்கே உரித்தான மாக்கல்லில் மிகுந்த நுணுக்கத்துடன் செதுக்கப்பட்டுள்ளது.மகர தோரணம்இவ்வாலய முகமண்டப நுழைவாயிலின் மேல் மகர தோரணத்தில் உள்ள அதி அற்புத வேலைப்பாடுகளுடன் கூடிய மற்றுமொரு நரசிம்மர் சிற்பம், காண்போரை பிரமிக்க வைத்து, சிற்பிகளின் திறமைக்கு கட்டியங்கூறும் வண்ணம் அமைந்துள்ளது. நரசிம்மரை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தோரணத்தின் வலப்புறம் ஐந்து, இடப் புறம் ஐந்து என விஷ்ணுவின் பத்து  அவதாரங்கள், மகரத்தின் வாயிலிருந்து வெளிப்படும் போர் வீரர்கள்,கந்தர்வர்கள், வணங்கிய தோற்றத்தில் கருடன் என ஒவ்வொரு அம்சமும் மிகுந்த கலை நுணுக்கத்துடன் செதுக்கப்பட்டுள்ளது.இக்கோவிலின் எழிலார்ந்த சிற்பங்களை வடித்த சிற்பிகளின் பெயர்கள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் உள்ளன.முக்கிய சிற்பிகளான மல்லித்தம்மா, சாவனா, நாகோஜா, மல்லோஜா ஆகியவர்களின் பெயர்கள் அவரவர் வடித்த பேரழகு சிற்பங்களுக்கு கீழே பொறிக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பு.மது ஜெகதீஷ்…

You may also like

Leave a Comment

1 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi