Thursday, May 9, 2024
Home » குறள் காட்டும் குளங்கள்!

குறள் காட்டும் குளங்கள்!

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம் குறளின் குரல்மனம் குளிரும் வகையில் பல நீதிக் கருத்துகளைச் சொல்லும் வள்ளுவர், அவற்றைச் சொல்லப் பல இடங்களில் குளத்து நீரைப் பயன்படுத்தியிருக்கிறார். நம் மன மாசுகளை அகற்றுகிறது, வள்ளுவர் காட்டும் குளத்து நீர். கரையுள்ள குளம், கரையில்லாத குளம், மலர்கள் பூத்திருக்கும் குளம், கொக்குகள் மீன்களைப் பிடிப்பதற்காகக் காத்திருக்கும் குளம், மனிதர்கள் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் குளம் என்று இப்படிப் பலவிதமான குளக் காட்சிகள் வள்ளுவரின் வெளியீட்டுத் திறனைக் கூர்மைப் படுத்தியிருக்கின்றன. அவற்றையெல்லாம் உள்ளடக்கி, தாம் வலியுறுத்த விரும்பிய கருத்துகளை ஆணித்தரமாக நிறுவுகிறார் அவர்.அளவளாவு இல்லாதான் வாழ்க்கைகுளவளாக்கோடின்றி நீர்நிறைந் தற்று.(குறள் எண் 523)சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, கரையில்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பதைப் போன்றது.  புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும்.(குறள் எண் 298)உடலின் புறத்தூய்மை என்பது நீரால் ஏற்படும். அகத் தூய்மையோ வாய்மையால்தான் உண்டாகும்.வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று.(குறள் எண் 931)வெற்றியே கிடைக்குமானாலும் சூதை வெறுத்து ஒதுக்க வேண்டும். தூண்டிலில் உள்ள புழுவை இரையென மயங்கி மீன் விழுங்குவதைப் போலத்தான் சூதாட்டம்.வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனையது துயர்வு.(குறள் எண் 595)நீர்ப் பூக்களின் தாளின் நீளம், நீர்நிலையின் மேல்மட்டத்து அளவாகும். அதுபோல், மனிதர்களின் உயர்வு என்பது அவர்களின் உள்ளத்து உயர்வைப் பொறுத்ததே.ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு.(குறள் எண் 215)வள்ளலிடம் உள்ள செல்வம் ஊருணியில் உள்ள நீரைப் போன்றது. எப்படி அந்த நீர் தேவைப்படுவோர்க் கெல்லாம் பயன்படுகிறதோ, அதுபோல் பேரறிவாளனாகிய வள்ளல் தன்மையுடையவனின் செல்வமும் எல்லோருக்கும் பயன்படும்.மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர்.(குறள் எண் 278)உள்ளத்தில் மாசு மறைந்திருக்க உடலால் மட்டும் பல புனித நீர்நிலைகளில் நீராடி மனத்தின் மாசை மறைத்து வாழ்பவர்கள் பலர். அப்படி இருப்பதால் என்ன பயன் என வினவுகிறார் வள்ளுவர். மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் என்று சொன்னவர் அல்லவா அவர்? நம் இதிகாசங்களும், புராணங்களும், பழைய இலக்கியங்களும் குளங்களைப்பற்றி நிறையப் பேசுகின்றன. கம்ப ராமாயணம், குளம் சார்ந்த ஒரு மருத நிலக் காட்சியைச் சொல்லோவியமாகத் தீட்டுகிறது.தண்டலை மயில்களாடத்தாமரை விளக்கம் தாங்கக்கொண்டல்கள் முழவின் ஏங்கக்குவளை கண் விழித்து நோக்கத்தெண்டிரை எழினி காட்டத்தேம்பிழி மகர யாழின்வண்டுகள் இனிது பாடமருதம் வீற்றிருக்கு மாதோ.மலர்கள் பூத்த குளக்கரையில், மயில்கள் நடனமாடுகின்றன. அந்த நடன நிகழ்ச்சிக்கு வெளிச்சம் வேண்டாமா? விளக்கு வைத்ததுபோல் தாமரை மலர்கள் தென்படுகின்றன. குவளை மலர்கள் கண்விழித்து, மயில்களின் நடனத்தை ஆச்சரியமாகப் பார்க்கின்றன. வண்டுகளின் ரீங்காரம், நடனத்திற்காக இசைக்கப்படும் யாழின் ஓசைபோல் தோன்றுகிறது என்றெல்லாம் குளக்கரைக் காட்சியைக் கவிநயத்தோடு விவரிக்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர். விவேக சிந்தாமணி, குளக்கரைக் காட்சிகளை வைத்துப் பல நல்ல கருத்துகளைச் சொல்கிறது. அவற்றில் ஒன்று இதோ;தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்தேன் உணரா மண்டூகம்வண்டோ கானத் திடையிருந்தும் வந்தே கமல மதுவுண்ணும்  பண்டே பழகி யிருந்தாலும் அறியார்புல்லோர் நல்லோரைகண்டே களித்தங் குறவாடித் தம்மிற் கலப்பார் கற்றோரே!தாமரையோடு குளத்தில் வசித்தாலும் தவளை, தாமரையின் தேனைப் பற்றி அறிவதில்லை. ஆனால் எங்கோ காட்டில் வசிக்கும் வண்டு, குளத்தைத் தேடிவந்து தாமரையில் உள்ள தேனை அருந்துகிறது. அதுபோல், புல்லர்கள் பழகினாலும் நல்லவர்களை அறிந்து கொள்ள மாட்டார்கள். கற்றோர் எங்கிருந்தோ வந்து நல்லோரை அறிந்து நட்புக் கொண்டு மகிழ்வார்கள் என்கிறது இந்தப் பாடல். மகாபாரதத்தில், ஒரு நச்சுப் பொய்கை வருகிறது. பாண்டவர்களின் வனவாசம் முடியும் தருணம். கானகத்தில் அலையும் அவர்களுக்குத் தாகம் எடுக்கவே, தருமபுத்திரர் அருகே ஏதேனும் நீர்நிலை உள்ளதா என்றறிந்துவர முதலில் தன் தம்பியரில் ஒருவனான நகுலனை அனுப்புகிறார்.அவன் திரும்பி வராததால், அடுத்தடுத்து சகாதேவன், பீமன், அர்ச்சுனன் ஆகியோரையும் அனுப்புகிறார். நால்வரும் திரும்பாததால், தானே அவர்களைத் தேடிச் செல்கிறார்.நச்சுப்பொய்கையின் கரையில் நச்சுநீர் அருந்தி அவர்கள் மயங்கிக் கிடப்பதைப் பார்க்கிறார். கடும் துயரடைகிறார். அவர்முன் ஒரு யட்சன் தோன்றுகிறான். தான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால் தம்பியர் அனைவரையும் உயிர்ப்பிப்பதாகக் கூறுகிறான். சரியென உடன்படுகிறார் தர்மபுத்திரர். பல கேள்விகளைக் கேட்கிறான் யட்சன். வாழ்க்கையின் புதிர்களைத் தாங்கிய கேள்விகள் அவை. பொறுமையாக அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளித்துத் தன் சகோதரர்களின் உயிரை மீட்கிறார் தர்மபுத்திரர்.மகாபாரதத்தில் வரும் இந்தப் பகுதி ‘யட்சப் பிரசன்னம்’ என்றே அழைக்கப்படுகிறது. யட்சப் பிரசன்னம் கேள்வி பதில்கள், பயில்பவர்களுக்குப் பெரும் ஞானத்தைத் தரக் கூடியவை. முருகனின் வரலாற்றைப் பேசும் கந்த புராணத்திலும், பொய்கை வருகிறது. சிவபெருமான் நெற்றிக் கண்ணிலிருந்து பிறந்த கனலை அக்கினியும், வாயுவும் சரவணப் பொய்கையில்தான் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். அந்த நெற்றிக் கனலிலிருந்து ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகள் தோன்றுகிறார்கள். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் படும் அந்த ஆறு குழந்தைகளையும், பார்வதி தேவி ஒன்றாய் அணைத்துக் கொள்ள, அவர்கள் இணைந்து ஆறு முகமும் பன்னிரு கரமும் கொண்ட ஓர் உருவாய் மாறினார்கள் என்கிறது கந்தபுராணம்.மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள பொற்றாமரைக்குளம் இலக்கியப் புகழ்பெற்றது. பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் கிடையாது என்பது சங்கப் புலவர் நக்கீரர் கட்சி. பார்வதிதேவி கூந்தலுக்கும் இயற்கை மணம் இல்லையென்று சொல்வாயா எனக் கேட்டு நெற்றிக் கண்ணைத் திறந்து, தான் யார் எனக் காட்டினார் சிவன்.நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என சிவபெருமானிடமே வாதிட்டார் நக்கீரர். சிவபெருமான் கடும் சீற்றத்தோடு அனல்விழி விழித்தார்.நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய வெப்பம் தாங்காமல், நக்கீரர் பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்தார் என்றும், அதன்பின் சிவபெருமான் மன்னித்து அவரை மீண்டும் எழுப்பினார் என்றும் சிவபுராணம் சொல்கிறது. பொற்றாமரைக் குளத்திற்கும் தமிழுக்கும் நெடுநாள் சம்பந்தம் உண்டு. இந்தக் குளத்தில் சங்கப் பலகை ஒன்று இருந்ததாம். புதிதாய் எழுதப்பட்ட தமிழ் நூல்களை அந்தச் சங்கப் பலகையில் வைத்துப் பரிசோதிப்பார்களாம். தகுதியுள்ள நூல் என்றால் சங்கப் பலகை, தன்னில் அந்த நூலுக்கு இடமளித்துத் தாங்குமாம். அல்லாத நூல்களை அது தண்ணீரில் உடனே தள்ளி விட்டுவிடுமாம்.திருவள்ளுவர் எழுதிய திருக்குறளின் சிறப்பை, மற்ற புலவர்கள் அங்கீகரிக்க மறுத்தார்கள். அப்போது, அவ்வையார் குறளெழுதிய ஏட்டுச் சுவடியை பொற்றாமரைக் குளத்தில் போட, சங்கப் பலகை நீரில் தோன்றியது. மிதந்து வந்து திருக்குறள் ஏட்டைத் தன்னில் தாங்கி சங்கப் பலகை குறளை அங்கீகரித்துப் பெருமைப் படுத்தியதாம். இப்படி ஒரு பழங்கதை சொல்கிறது.(குறள் உரைக்கும்)தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

You may also like

Leave a Comment

14 + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi