Thursday, May 16, 2024
Home » சின்னம்மையும் ஆயுர்வேத தீர்வும்!

சின்னம்மையும் ஆயுர்வேத தீர்வும்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

பொதுவாக வெயில் காலங்களில்தான் மனித உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி சிறப்பாக செயல்பட தொடங்கும். ஆனால், கோடைக் காலத்திற்கென சில தொற்று நோய்களும் பரவும், அப்படி வெயில் காலங்களில் பரவக்கூடிய நோய்களில் ஒன்றுதான் அம்மை நோய். இது எவ்வாறு மனித உடலை பாதிக்கிறது. இதை குணப்படுத்த ஆயுர்வேதம் கூறும் வழிமுறைகள் யாவை என பார்ப்போம்.

ஆங்கிலத்தில் பெரிய அம்மையை ஸ்மால் பாக்ஸ் என்றும் சின்னம்மையை சிக்கன்பாக்ஸ் என்றும் அழைப்பர். நாம் இங்கு சின்னம்மைக்கான ஆயுர்வேத தீர்வு குறித்து பார்ப்போம். வேரிசெல்லா ஜாஸ்டர் எனும் வைரஸ் கிருமி மூலமாகத்தான் சின்னம்மை நோய் ஏற்படுகிறது. இது பொதுவாக நோயாளியின் மூக்கு, தொண்டை, மூச்சுக்குழல், அம்மைக்கொப்புளங்கள் ஆகிய
இடங்களில் வசிக்கும்.

இந்த கொப்புளங்களிலிருந்து வரும் நீர்க்கசிவு மற்றவர்கள் மேல் நேரடியாக படுவதினாலும், மேலும் நோயுற்ற ஒருவர் தும்மும்போதும் இருமும்போதும் மற்றவர்களுக்குச் சுலபமாக பரவுகிறது. அதிலும் நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பவர்களிடம் எளிதாக பற்றிக் கொள்கிறது. சின்னம்மையின் ஆரம்பகால அறிகுறிகளாக தலைவலி, காய்ச்சல், பசியின்மை, உடல் சோர்வு, பலவீனம், வீக்கம், அரிப்பு, உடல் வலி மற்றும் தோலின் நிறம் மாற்றம், வயிற்று வலி போன்றவை காணப்படும்.

தோல் தடிப்புகளின் தோற்றமானது மூன்று கட்டங்களாக மாறும், ஆரம்பத்தில் ஆங்காங்கே இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் சிறு கொப்புளங்களாக தோற்றமளித்து, பின்னர் சிறிய திரவம் நிரப்பப்பட்ட கொப்புளங்களாக மாறி, அந்த கொப்புளங்கள் வெடித்து அதிலிருந்து வெளிவரும் நீர் மற்ற இடங்களில் பட்டு புதிய கொப்புளங்களாக உருவெடுக்கும். இறுதியாக சிரங்குகளாக மாறி ஆறி தழும்பாக மாறும்.

பொதுவாக, சின்னம்மையானது ஒரு லேசான தீவிரமற்ற மற்றும் சுய – கட்டுப்படுத்தும் தொற்றாகவே வருகிறது. ஆனால் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இது தீவிரமாக மாறக்கூடும். மேலும் சின்னம்மை காலங்களில் ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கு நிமோனியா, மூளையில் வீக்கங்கள், ரேயிஸ் அறிகுறிகள் மற்றும் நீர்ப்போக்குகள் போன்ற தீவிரமான சிக்கல்களை ஏற்படுத்தும். சில சமயங்களில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தால், அது மரணத்திற்கும் கூட வழிவகுக்கும் இது 5 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது என்றாலும், வயதானவர்களுக்கு வரும்போது நீண்டநாள் தாக்கி பல உபாதைகளை ஏற்படுத்தும்.

இது பொதுவாக மார்பு, முதுகு மற்றும் முகத்தில் முதலில் தோன்ற ஆரம்பித்து பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவும். இதில் வாய், கண் இமைகள் அல்லது பிறப்புறுப்பு பகுதிகள் கூட பாதிப்படையும். ஒரு மனிதனுக்கு சராசரியாக 250 முதல் 500 கொப்புளங்கள் கூட வரும். பொதுவாக அனைத்து கொப்புளங்களும் ஒரு வாரத்தில் சிரங்குகளாக மாறி ஆற ஆரம்பித்துவிடும். ஆயுர்வேத கண்ணோட்டம் ஆயுவேதத்தில் லகு மசூரிகா அல்லது மசூரிகா என்று சின்னம்மை குறிப்பிடப்படுகிறது மசூரிகா என்ற சொல்லில் மசூரி என்ற வார்த்தை மைசூர்பருப்பை குறிப்பதாக உள்ளது. ஏனெனில் இவ்வியாதியில் மைசூர் பருப்பை ஒத்த சிவப்பு நிறக் கொப்புளங்கள் உடல் முழுவதும் வருவதாலேயே இவ்வாறு அழைக்கப்படுகிறது.

அதிக உப்பு, காரம் அல்லது புளிப்பு சார்ந்த உணவுகளை உண்ணுவதாலும், பொருந்தாத உணவுகள் (எடுத்துக்காட்டாக மீன், பாலுடன்) சேர்ந்து உண்ணுவதாலும், அசுத்தமான பட்டாணி அல்லது பச்சைக் காய்கறிகள் மற்றும் அதிகப்படியான உணவு உண்ணும் பழக்கம் ஆகியவைகளால் உடல் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து சின்னம்மை உருவாகுவதாக ஆயுர்வேதம் எடுத்துரைக்கின்றது. சின்னம்மை ஏற்கெனவே வந்திருந்தால் அவர்களுக்கு ஷிங்கிலிஸ் என்னும் அக்கி வர வாய்ப்பு அதிகமாக உண்டு.

இது பெரும்பாலும் ஒரு நரம்பையோ அல்லது அந்த நரம்பு மேல் உள்ள தோலையோ பாதிப்புக்குள்ளாக்கி கொப்புளம், அரிப்பு, சீழ் மற்றும் அதிகப்படியான வலி மற்றும் எரிச்சலை உருவாக்கும். இது ஒருவரை ஒரு மாத்திற்கு மேல் கஷ்டப்படுத்தலாம். சின்னம்மை 5 பேரில் ஒருத்தரை அவரின் வாழ்நாளில் ஏதோ ஒரு பகுதியில் பாதிக்கிறது. இது எந்த வயதிலும் ஏற்படலாம்.

சின்னம்மையால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளவர்கள் யார்கர்ப்பத்தின் எட்டு மற்றும் 20 வாரங்களுக்கு இடையில் அல்லது கர்ப்பத்தின் இறுதி இரண்டு வாரங்களில் உள்ள பெண்களுக்கு இது ஏற்பட்டால், வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ச்சி, சிறிய தலை அளவு, அறிவுசார் குறைபாடுகள் மற்றும் கண் பிரச்னைகள் உள்ளிட்ட பிறப்புக் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கலாம். 7 சதவீத குழந்தைகள் இறந்தே பிறக்கலாம் அல்லது பிறந்தவுடன் இறக்கலாம்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் வசிக்கும் வயதானவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.ஒரு நபருக்கு ஏதேனும் நோய் அல்லது மருந்து காரணமாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துவிடும் நிலையில் கவனம் தேவை.சின்னம்மை குழந்தைகளுக்கு ஏழு முதல் பத்து நாள்கள் நீடிக்கும். பெரியவர்களுக்கு நீண்டகாலம் நீடிக்கும். பெரியவர்களுக்கு மிகவும் ஆபத்தானது – கவனம் தேவை. நோய் உள்ளவர்கள் பாதுகாப்பிற்காக என்னென்ன செய்ய வேண்டும்.

அம்மை காரணமாக உடலில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் புண்கள் ஆறி உதிரும் வரை குளிர்ச்சியான அறையில் இருப்பது சிறந்தது.அம்மை நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்துவது நல்லது. இந்த நோயாளிகள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.நமது முன்னோர்கள் வேப்பிலையை பரப்பி அதன்மேல் அம்மையால் பாதிக்கப்பட்டவர்களை படுக்க வைப்பார்கள். ஏனென்றால். வேப்பிலை ஒரு கிருமி நாசினி என்பதால் அம்மைப் புண்களுக்கு மிகவும் நல்லதானாலும் இதில் கவனிகக் வேண்டிய விஷயம் என்னவென்றால் சுத்தமாக இல்லாத வேப்பிலையின் மேல் படுக்கும்போது அம்மைப் புண்களில் மேலும் கிருமித்தொற்று ஏற்பட்டு மேலும் பல சிரமங்களுக்கு வழிவகுக்கும்.

வீட்டு வைத்தியம்

சந்தனத்தை பன்னீரில் குழைத்து உடைந்த கொப்புளங்கள் இருக்கும் இடங்களில் தடவி விடுவது சருமத்தை குளிர்விக்கச் செய்யும். வேப்ப இலைகளை எடுத்து நன்றாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி விடலாம். கிருமி நாசினி என்னும் பண்பை கொண்டுள்ளதால், இது பல தோல் நிலைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். மஞ்சளை வாய்வழியாக கொடுக்கும்போது உடலில் ஏற்படும் அரிப்புகளை குறைக்கிறது.

அம்மைநோயை தடுப்பது எப்படி?

கோடைக்காலங்களில் ஒரு நாளைக்கு இருமுறை குளிப்பதும், வாரத்தில் இருநாட்கள் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதும் அதிக சூடு இல்லாத இளஞ்சூட்டில் குளிப்பதும் நல்ல சுகாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் தரும். சுயசுத்தம் பேணுவதும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதும் சின்னம்மையைத் தடுக்க உதவும் சிறந்த வழிகள். உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய நீர்ச்சத்துள்ள காய்கறிகளான பூசணிக்காய், புடலங்காய், செளசெள, நூக்கல், வெண்டைக்காய், வெள்ளரி போன்றவையும் தர்பூசணி, நுங்கு, கிர்ணி, இளநீர் போன்றவையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆயுர்வேத சிகிச்சை

சின்னம்மை வெயில் காலங்களில் வரும் ஒரு பொதுவான நோயாக இருந்தாலும் அதற்கு தக்க சிகிச்சை எடுத்துக் கொள்வது நோயை சுலபமாக குணப்படுத்தும், மேலும் அக்கி போன்ற உபத்திரவங்கள் வராமல் தடுக்கும். எனவே, தக்க ஆயுர்வேத மருத்துவரை அணுகுவது நல்லதாகும்.கசாய மருந்துகளாக அம்ருதா சடங்கம் கசாயம், நிம்பாதி, சின்னருங்வாதி கசாயம், குலூச்யாதி குவாதம், அமிர் தோத்தரம் கஷாயம், படோல கதுரோஹிண்யாதி கஷாயம் ஆகியவை மாத்திரைகளான பஞ்ச நிம்பதி குளிகா, வில்வாதி குளிகா, சஞ்சீவனிவடி, சுதர்சன வடி ஆகியவையுடன் சேர்த்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் சூரண (பொடி) மருந்துகளான சுதர்சன சூரணம், அவிபதி சூரணம் மற்றும் இதர மருந்துகளான அம்ருதாரிஷ்டம், ராசசிந்தூரம், அப்ரசு பஸ்மம் பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும். மேல்பூச்சு மருந்துகளாக கரஞ்சபீஜாதி லேபம், கார்விராதி லேபம், ஏலாதி லேபம், மனஷிலாதி லேபம் ஆகியவை நல்ல பலன் தரும்.பத்திய உணவுகளாக பாசிப்பயறு, மாதுளை, திராட்சை, கஞ்சி வகைகள், கசப்புச்சுவை காய்கறிகள் ஆகியவை நோயின் தாக்கத்தை குறைக்க உதவும். அபத்தியமாக உடற்பயிற்சி, கடுமையான வேலை, பகல் உறக்கம், எண்ணெய் வகைகள், கடினமான உணவுகள், பொரித்த மற்றும் தாளித்த உணவு வகைகள், புளிப்புப் பழ வகைகள் ஆகியவை தவிர்ப்பது நல்லது.

தொகுப்பு: உஷா நாராயணன்

You may also like

Leave a Comment

16 − thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi