Thursday, May 16, 2024
Home » 8 நடைப்பயிற்சியின் நன்மைகள்!

8 நடைப்பயிற்சியின் நன்மைகள்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

உடல் ஆரோக்கியத்துக்கு ஊட்டச் சத்தான உணவு, உடல் உழைப்பு உடற்பயிற்சிகள் மிகவும் அவசியம். அந்தவகையில், நடைப்பயிற்சியை உடற்பயிற்சிகளின் அரசன் என்றும் கூறுவார்கள். உடற்பயிற்சிகளில் சிறந்தது நடைப்பயிற்சி என்றாலும், அந்த நடைப்பயிற்சியிலும் மிகவும் சிறந்தது எட்டு வடிவ நடைப்பயிற்சி என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எப்போது எட்டு நடைப்பயிற்சி செய்ய வேண்டும்

காலை 5 மணி முதல் 6 மணி வரையும். மாலையில் 5 முதல் 6 மணி வரையும் எட்டு நடைப்பயிற்சி செய்வதற்கு சிறந்த நேரமாகும். இந்த பயிற்சியை பதினெட்டு வயது தாண்டிய ஆண், பெண் அனைவரும் செய்யலாம். பயிற்சியின்போது வயிறு காலியாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். சாப்பிட்ட பின்பு 3 லிருந்து 4 மணி நேரம் கழித்துத்தான் இப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்நடைப்பயிற்சியில் காலணிகள் அணியாமல் வெறுங் கால்களில்தான் நடக்க வேண்டும். அப்போதுதான் அதன் முழுப்பயனையும் பெறமுடியும். கால்களில் காயம் மற்றும் வேறு பிரச்னைகள் இருந்தால் மட்டுமே காலணிகள் அணிய வேண்டும்.

எங்கே பயிற்சி செய்ய வேண்டும்

காற்றோட்டமான, சுகாதாரமான இடத்தில்தான் இப்பயிற்சியை செய்ய வேண்டும். மண்தரை, சிமென்ட் தரை, தார் ரோடு, சிமென்ட் ரோடு போன்ற இடங்கள் மிகவும் சிறந்தது. பூங்காக்களிலும் எட்டு வடிவம் அமைத்து நடக்கலாம். வயதானவர்கள், மூட்டு வலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் வீடு பெரியதாகவும், பெரிய ஹாலாகவும் இருந்தால் அங்கேயே எட்டு வடிவம் அமைத்து இப்பயிற்சியை மேற்கொள்ளலாம். வீட்டின் பால்கனி, மொட்டை மாடிகளும் ஏற்றது. வசதி வாய்ப்புகள் இல்லையென்றால் வீட்டிலேயே அகலமான இடத்தில் மூன்று அடி இடைவெளியில் இரண்டு நாற்காலிகளை வைத்து எட்டு வடிவமாக அமைத்து நடக்கலாம். வயதானவர்களுக்கும்.

நோயாளிகளுக்கும், வெளியில் சென்று நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கும் இந்த எட்டு நடைப்பயிற்சி எளிதானது. ஆறு அடி விட்டத்தில் இரண்டு வட்டங்களை வரைந்து எட்டு வடிவமாக ஒன்றிணைக்க வேண்டும். இந்த எட்டு வடிவம் வடக்கு தெற்கு திசையில் இருக்கும்படி அமைக்க வேண்டும்.

எப்படி நடக்க வேண்டும்

எட்டு வடிவ மையத்தின் மேற்குத் திசையில் ஆரம்பித்து வடக்குத் திசையில் முதலில் கிளாக் வைஸ் டைரக்சன் இல் நடக்க வேண்டும். இதேபோன்று தெற்கு, வடக்குத் திசையில் நடக்க வேண்டும். ஆக மொத்தம் அரைமணி நேரம் நடந்தால் போதும்.மனிதனின் கை, கால், பாதம் ஆகியவற்றின் வழியாக உடல் உறுப்புகளுக்கு நல்ல சக்தி உள்ளே சென்று உடலில் இருக்கும் தீய சக்தி வெளியே செல்லும், பொதுவாக நடைப்பயிற்சியின் போது ஆக்சிஜன் என்னும் பிராணவாயு மட்டும் உடலில் செல்லும், அப்போது தீயசக்திகள் கால்பாதத்தின் வழியே வெளியே சென்றுவிடும். எட்டு வடிவ நடைப்பயிற்சியில் காலணி அணியக் கூடாது.

அப்போதுதான் புவிஈர்ப்பு சக்தியின் மூலமாக உடலில் உள்ள தீய சக்திகள் வெளியேறும். தெற்கில் இருந்து வடக்குத் திசை நோக்கி நடப்பதால் பூமியின் காந்தசக்திக்கு நேராகவும், எதிராகவும் நடப்பதால் உடலில் புத்துணர்ச்சி ஏற்பட்டு உடலின் உள்ளுறுப்புகளான இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம், சிறுகுடல், பெருங்குடல்கள் நன்றாக செயல்படத் தூண்டிவிடுகின்றன.

தரையில் எட்டு நடைப்பயிற்சி செய்வதால் உடலில் உள்ள நோய்களை இயற்கையாகவே குணப்படுத்தலாம். இரவு உணவுக்குப் பிறகு முக்கால் மணி நேரம் கழித்து எட்டு வடிவ நடைப்பயிற்சியை அரைமணி நேரம் செய்யலாம். முதலில் வடக்கில் இருந்து தெற்காக 15 நிமிடமும், பின்பு தெற்கில் இருந்து வடக்காக 15 நிமிடமும் நடந்தால் நன்றாக ஜீரணமாகி அனைத்து உறுப்புகளுக்கும் சக்தி கிடைக்கும். இரவில் எவ்வித இடையூறுமின்றி ஆழ்ந்த தூக்கமும் வரும். நன்றாக நிம்மதியாக தூக்கம் வந்தாலே மன அமைதி ஏற்பட்டு மன அழுத்தம் குறைந்து, மலச்சிக்கலும் ஏற்படாமல் இருக்கும்.

எட்டு வடிவ நடைப்பயிற்சியில், யோகாஎட்டு போடுகிறவனுக்கு நோய் எட்டிப் போகும் என்பது பழமொழி. காலையில் கல்லில் நட மாலையில் புல்லில் நட என்று நமது முன்னோர்கள் கூறினார்கள். எட்டு வடிவ நடைப்பயிற்சி தொடங்கிய சில நாட்களிலேயே மார்புச்சளி கரைந்து வெளியேறுவதைக் காணலாம். ஹெர்னியா எனப்படும் குடல் இறக்க நோயைத் தடுக்கும். சுவாசம் சீராகும் என்பதால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த பயிற்சி இது. சுவாசம் சீரடைவதால் உள்ளுறுப்புகள் பலம் பெறும். எட்டு வடிவம் நடைப்பயிற்சி நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி சமநிலைப்படுத்துகிறது. இதை உடற்பயிற்சியாக சொல்லித் தந்த நமது சித்தர்கள், இதையே வாசியோகத்தில் உள்ளுக்குள்ளே சுவாசத்தை விரட்டி எட்டு போடுவார்கள் என்று கூறினார்கள். நடைப்பயிற்சியை விட எட்டு வடிவ நடைப்பயிற்சி நான்கு மடங்கு சிறந்தது.

மருத்துவரின் ஆலோசனை அவசியம்

அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் ஆறு மாதங்கள் வரை இப்பயிற்சியை செய்யக்கூடாது. ஆறு மாதத்திற்குப் பிறகு மருத்துவரின் ஆலோசனை பெற்று எட்டு நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். கர்ப்பிணிப் பெண்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பயிற்சியை மேற்கொள்ளக்கூடாது. உயர் ரத்த அழுத்தம், இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், நரம்புத் தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், அதிகளவு கொலஸ்ட்ராலுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்பே எட்டு நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

நடைப்பயிற்சியை விட எட்டு வடிவில் நடைப்பயிற்சி சிறந்தது ஏன்எட்டில் நடைப்பயிற்சி செய்வதால் ஒருவருடைய மனநிலை ஒருமைப்பாடு அதிகமாகும். மூளையில் புத்துணர்ச்சி ஏற்படுத்துவதால் நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைக்க உதவும். நடைப்பயிற்சியின் போது காலணி அணிய வேண்டியது அவசியம். அதுவும் சர்க்கரை நோயாளிகள் எம்.சி.ஆர் காலணியோ அல்லது மைக்ரோ செல்லுலர் பாலிமர் ஷூக்களையோ அணிய வேண்டியது அவசியம். ஆனால் எட்டு வடிவில் நடக்கும்போது காலணிகளை கட்டாயம் அணியக் கூடாது என்பதால் அக்குப்பிரஷர் முறையில் பாதங்களில் உள்ள அப்புள்ளிகளைத் தூண்டிவிட்டு உடலுக்கு புத்துணர்ச்சியை உண்டாக்கும்.

நடைப்பயிற்சியே சிறந்தது என்று உரிய மருத்துவர்கள் தற்போதைய மருத்துவ ஆராய்ச்சிகளின்படி இடுப்பு, மார்பு, முதுகு, கழுத்து மற்றும் மூட்டுகளுக்கும் பயிற்சி கொடுப்பதற்காக நடைப்பயிற்சியுடன் உடற்பயிற்சிகளும் செய்ய வேண்டியது அவசியம் எனக் கூறுகின்றனர். ஆனால் எட்டு நடைப்பயிற்சியில் உடல் முழுவதும் நன்றாக வளைந்து திரும்புவதால் உடல் உள்ளுறுப்புகள் பயன் பெறுகிறது. எட்டு நடைப்பயிற்சி கைகள் மற்றும் கண்களை ஒருங்கிணைக்க உதவுகிறது. எட்டு நடைப்பயிற்சி உடலை சமநிலையில் வைத்துள்ளதால் முழங்கால் மூட்டுவலி, ரூமடாய்டு ஆர்த்ரைடிஸ் போன்றவை குணமாகின்றது. தினந்தோறும் இப்பயிற்சியை மேற்கொள்வதால் தலைவலி அஜீரணக் கோளாறுகள், தைராய்டு குறைபாடுகள், உடல்பருமன் நோய் போன்றவை சரி செய்யப்படுகின்றன. ரத்த அழுத்தம் சீராக வைக்க உதவுகிறது. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது.

எட்டு நடைப்பயிற்சியின் நன்மைகள்

கண்பார்வைத் திறன் அதிகமாகும். நடக்கும்போது எட்டு வடிவக் கோடுகளை கூர்ந்து கவனித்து நடப்பதால், கருவிழி அங்கும் இங்கும் அசைந்து, கண்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து கண் பார்வை மங்குதல், கிளாக்கோமா எனப்படும் கண்களில் நீர் அழுத்தம் போன்றவை குணமாகும். காது கேட்கும் திறன் அதிகமாகும்.

ரத்த அழுத்தம் சீராகும். இளமைத் தோற்றம் கொடுக்கும். பாதவெடிப்பு குணமாகும். உடல் வலி, தசைவலி, முழங்கால் வலி, ரூமடாய்டு ஆர்த்தரைடிஸ் எனப்படும் மூட்டு வலிகள் சரியாகும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகவும் குறையும். சர்க்கரை நோயாளிகள் இப்பயிற்சியை மேற்கொண்டால் ஒரே வருடத்தில் சர்க்கரையின் அளவைக் குறைத்துவிட முடியும். அஜீரணக் கோளாறுகள், தைராய்டு குறைபாடுகள், உடல் பருமன் நோய் மற்றும் மலச்சிக்கல் சரியாகும்.

கழுத்துவலி, தோள்பட்டை வலி, முதுகு வலி, இடுப்பு வலி, குதிகால் வலிகள் சரியாகும். கருப்பை குறைபாடுகள் நீங்கும். மன அழுத்தம், மன இறுக்கம், முதுகெலும்பில் டிஸ்க் பிராப்ளம்ஸ், எபிலெப்சி எனப்படும் நரம்புக் கோளாறுகள், ஆஸ்துமா, சைனஸ் குறைபாடுகள், பைல்ஸ் எனப்படும் மூலநோய், தூக்கமின்மை, சிறுநீரகக் கோளாறுகள் இப்பயிற்சியால் குணமாகும். இரவில் நல்ல ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் வரும். மனம் ஒருநிலைப்படும். மூச்சுத் திணறல், மூக்கடைப்பு சரியாகும். மார்புச்சளி குறையும். கெட்ட கொழுப்பு எனப்படும் எல்.டி.எல் கொலஸ்டிரால் குறையும். உடல் பருமன் நோயைத் தடுக்கும். கெட்ட வாயு வெளியேறும். தலைவலி பின்பக்கத் தலைவலி சரியாகும்.

உடற்பயிற்சி செய்ய முடியாதவர்களும், ஆரோக்கியமாக வாழ்வை அடைய சிறந்தது இப்பயிற்சி. நடைப்பயிற்சிக்கு வெளியில் செல்வதற்குப் பதிலாக வீட்டிலேயே எட்டு வடிவ நடைப்பயிற்சியை செய்வது மிகவும் எளிதானது. தினந்தோறும் முக்கால் மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் நடக்க வேண்டும். ஆனால் இப்பயிற்சியில் அரைமணி நேரம் நடந்தாலே போதுமானது. எட்டு வடிவ நடைப்பயிற்சியில் நன்மைகள் அதிகமாக இருப்பதால் இன்றே எட்டு வடிவ நடைப்பயிற்சியை தொடங்குவோம். உடல்நிலையை ஆரோக்கியமாகவும். வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாகவும் வாழ்வோம்.

You may also like

Leave a Comment

14 + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi