நெல்லை: நெல்லையில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் வெட்டிக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெல்லை பேட்டை அருகேயுள்ள திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது 2வது மகள் சந்தியா (18), நெல்லை டவுன் அம்மன் சன்னதியிலுள்ள பேன்சி குடோனில் வேலை பார்த்து வந்தார். இவரது குடோன் அருகிலுள்ள பேன்சி ஸ்டோர் கடையில் மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (23) என்பவரும் வேலை பார்த்து வந்தார்.
இவரது பேன்சி கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கும், அதற்குரிய பணத்தை கொடுக்கவும் அடிக்கடி செல்லும்போது ராஜேஷ்கண்ணன், சந்தியாவிடம் பேசி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. சந்தியாவை அவரது வீட்டில் கண்டித்துள்ளனர். இதையடுத்து சந்தியா, ராஜேஷ்கண்ணனிடம் பேசுவதையும், பழகுவதையும் குறைத்துக் கொண்டார். இதனால் வேதனையடைந்த ராஜேஷ்கண்ணன், 2 மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்று விட்டார். இந்நிலையில் கடந்த வாரம் சந்தியாவை செல்போனில் ராஜேஷ்கண்ணன் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது பேசிய சந்தியா, இனிமேல் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம், பார்க்கவும் வரக்கூடாது என கண்டிப்புடன் கூறி விட்டு செல்போனில் அவரது நம்பரை பிளாக் செய்தாராம்.இந்நிலையில் நேற்று மதியம் சந்தியா வேலை பார்க்கும் குடோனுக்கு ராஜேஷ்கண்ணன் சென்றார். அங்கு அவரிடம் ‘என்னை காதலிக்க வேண்டும். மீண்டும் பேசி பழக வேண்டும்’ என கூறினார். அதற்கு அவர் மறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜேஷ்கண்ணன் தான் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியால் திடீரென சந்தியாவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சந்தியா சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து வந்த போலீசார், சந்தியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனிப்படை அமைத்து ராஜேஷ்கண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.