பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் தொடர் மழையால், சோத்துப்பாறை அணை தனது முழுக்கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது. இதனால், வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் 126.28 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. இதில், தேக்கப்படும் தண்ணீர் மூலம், 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது. கோடை வெயிலால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது.
கடந்த 10 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு நீர்மட்டம் உயர்ந்து வந்தது.
இந்நிலையில், தொடர் மழையால், நேற்று இரவு 11 மணியளவில் அணை தனது முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. அணைக்கு நீர்வரத்து 49.63 கனஅடி. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வராகநதியில் வெளியேற்றப்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வராகநதி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறை மூலம் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு உள்ளதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கும். எனவே, வராகநதி கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.