Wednesday, May 22, 2024
Home » சுக்கிரன் ராசியில், குரு சுகத்தைத் தருவாரா..?

சுக்கிரன் ராசியில், குரு சுகத்தைத் தருவாரா..?

by Nithya

நவக் கிரகங்களில் எவ்வித தோஷமும் இல்லாதவரும், தேவர்களுக்கு குருவும், மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களின் மீதும் ஆதிக்கம் கொண்டவரும், தனது சுபப் பார்வை ஒன்றினாலேயே மற்ற கிரகங்களினால் ஏற்படும் தோஷங்களைப் போக்கியருள்பவருமான குரு பகவான் சித்திரை 8,

(21-4-2023) வரையில், தனது ஆட்சி வீடான மீனத்திலிருந்து, செவ்வாயின் ராசியான மேஷத்திற்கு சித்திரை 9-ம்
(12-9-2023) தேதியன்று மாறிய குரு பகவான், ஆவணி 26-ம் தேதி
(12-9-2023) அன்று வக்கிரகதியில் செல்ல ஆரம்பித்து, மீண்டும் மார்கழி 4-ம்
(20-12-2023) அன்று வக்கிரகதி நீங்கி, நேர் வழியில் செல்ல ஆரம்பித்தார்.

சித்திரை 18-ம் (1-5-2024) தேதியன்று குரு, மேஷ ராசியை விட்டு, சுக்கிரனின் ராசியான ரிஷபத்தில் பிரவேசிக்கிறார். ரிஷப ராசிக்கு அதிபதியான சுக்கிரன், குரு பகவானின் பகைக் கிரகமாவார். அசுரர்களுக்கு ஆச்சார்யர் சுக்கிரன். தவ வலிமையில் குருவும், சுக்கிரனும் சமபலம் பெற்றவர்கள்.

தேவர்களுக்கு ஆச்சார்யன் குரு. பொன்னன், வியாழன், பிருகஸ்பதி, தேவகுரு என்ற பல பெயர்களால் பிரசித்திப்பெற்றவர் குரு பகவான்! தேவர்களுக்கும், இந்திரனுக்கும் ஆச்சார்யன் இவரே!!

அசுரர்களின் ஆச்சார்யரான சுக்கிரன், குரு பகவானுக்கு இணையான தவவலிமை பெற்றவர். அசுரர்கள் இவரை தெய்வமெனப் போற்றி வந்தனர். நீண்ட காலம் மிகக் கடினமான தவமிருந்து, ‘‘மிருத சஞ்ஜீவினி” என்ற மகா மந்திரத்தை கற்றுக் கொண்டார். இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சூட்சும சக்திவாய்ந்த மந்திரம் இது! ேதவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி ேபார்கள் நடந்து வந்தன. அத்தருணங்களில்ேபார்க்களத்தில் உயிர் நீத்த அசுரர்களை சக்தி வாய்ந்த இம்மகா மந்திரத்தினால் உயிர்ப்பித்து வந்தார், சுக்கிரன். இவ்விதம் உயிர்ப்பிழைத்த அசுரர்கள் மீண்டும், மீண்டும் தேவர்களுக்கு எதிராகப் போரிட முடிந்தது. ஆனால், தேவர்களிடம் இம்மந்திரம் இல்லை!! ஆதலால், ஒவ்வொரு போரிலும் தேவர்கள் தோற்றே வந்தனர்.

எவ்விதமாவது இம்மகா மந்திரத்தைத் தெரிந்துகொண்டுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில், குரு பகவானின் மைந்தனான கசனை, சுக்கிர பகவானிடம், கல்வி பயில அனுப்பிவைத்தனர். சுக்கிரனும், கசனை தனது மாணாக்கரில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டார். கசனின் நோக்கத்தையறிந்து கொண்ட அசுரர்கள், அவனைக் கொன்றுவிட பல சூழ்ச்சிகளைச் செய்தனர்.

குரு பகவானின் பெண், “தேவயானி”, கசன் மீது மையல் கொண்ட காரணத்தால், தேவயானியின் உதவியினால், சுக்கிராச்சாரியாரிடம் இருந்து,”மிருத சஞ்ஜீவினி” எனும் மகா மந்திரத்தைக் கற்றுக்கொண்டான், கசன். இம்மகா மந்திரம், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்தது! ஒவ்வொரு முறையும், தேவயானி, கசனைக் காப்பாற்றி வந்தாள். இதனை அறிந்த அசுரர்கள், கசனை ரகசியமாகக் கொன்று, எரித்து அந்தச் சாம்பலை சுக்கிராச்சாரியார் அறியாமல், சோமபானத்தில் கலந்து கொடுத்துவிட, அவரும் அருந்திவிட்டார். மீண்டும் தேவயானியின் முயற்சியினால் கசன் உயிருடன் சுக்கிராச்சாரியாரின் வயிற்றைப் பிளந்துவெளிவந்து, சுக்கிரனையும் உயிர்ப்பித்தான். பின்பு, தேவயானி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியும்கூட, “குருவின் மகள் எனது சகோதரிக்குச் சமம்” எனக் கூறி, மனவுறுதியுடன் மறுத்து, தேவ உலகிற்குச் சென்றுவிட்டான். இதனால் சீற்றமடைந்த தேவயானி, கசன் கற்றுக்கொண்ட மிருத சஞ்ஜீவினி மந்திரம் அவன் மனத்திலிருந்து மறந்துவிடும்படி சாபமிட்டாள். ரு பகவானின் தவ வலிமை பற்றி வேதங்களிலும், சில உபநிடதங்களிலும், இதிகாச புராணங்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, ஒரு ராசி மண்டலத்தைக் கடப்பதற்கு, குரு பகவானுக்கு 12 மாதங்களாகின்றன. சந்திரனின் ஆட்சிவீடான கடகம், குருவுக்கு உச்ச ராசியாகும். மகரம் நீச்ச ராசியாகும். னன கால ஜாதகத்தில் குரு சுப பலம் பெற்று, பாபக் கிரக சேர்க்கை இல்லாமலிருப்பின், அத்தகைய ஜாதகர்கள், ஒழுக்கம், தெய்வ பக்தி, தெளிந்த மனம், நேர்மை ஆகிய நற்குணங்களால் சிறந்து விளங்குவர்! நற்குணங்கள் அமைந்த குழந்தைகளை அடைவதற்கும், ஜாதகத்தில் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் குரு இருக்க வேண்டும். இல்லையெனில், அந்த இடத்திற்கு குருவின் பார்வையாவது இருக்க வேண்டும்.

கோள் சாரத்தின்போது, குருவிற்கு “வக்கிர கதி” அல்லது “அதிச்சார கதி” ஏற்படுமானால், அப்போது அவர் பூர்வ ராசி பலனைத்தான் தந்தருள்வார். தகத்தில் கெடுதலை உண்டுபண்ணும் கிரகங்கள், குரு பகவானுடன் சேர்ந்திருந்தாலோ அல்லது குரு பகவானால் பார்க்கப்பட்டாலோ அந்தத் தோஷம் அடியோடு நிவர்த்தியாகிவிடும் எனக் கூறுகின்றன புராதன ஜோதிடக் கிரந்தங்கள். முன்பே கூறியதுபோல், ஒரு ராசியை குரு பகவான் கடப்பதற்குச் சுமார் ஒரு வருடக் காலமாகும். “குரூர கிரகம்” எனப்படும் ராகு மற்றும் அக்னி மயமான செவ்வாய் ஆகியோர் குரு பகவானின் ஆட்சி வீடுகளான தனுசு, மீனம் ஆகிய ராசிகளைக் கடக்கும்போது, தங்கள் வீரியத்தை இழந்துவிடுவதாக, “பூர்வ பாராசர்யம்” எனும் பழமையான ஜோதிட நூல் கூறுகின்றது. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், குரு பகவானின் தெய்வீக சக்தியினை!

பெண்களைப் பெற்ற பெற்றோர், ஜோதிடரிடம் கேட்கும் கேள்வி, “என் பெண்ணிற்கு குரு பலம் வந்துவிட்டதா…?” -என்பதே!! அத்துனை நம்பிக்கை, அவர்களுக்கு குரு பகவானிடம்…!!அதுமட்டுமல்ல! “ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு; அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் (8-ம் இடத்தில்) சனி…!” என்ற மூதுரையும் உள்ளதே?! இவற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம், நமது வாழ்க்கையில், குரு பகவானின் முக்கியத்துவம் எத்தகையது என்று…!!!
“வேத காலம்” எனப்படும் பாரதப் புண்ணிய பூமியின் பொற்காலத்தில், “வாத்ஸ்யாயனர்” என்றொரு மகரிஷி இருந்தார். மகா தபஸ்வி! அவரது பிரசித்திப் பெற்ற “காம சாஸ்திரம்” என்னும் நூலில், “ஆண் குழந்தை வேண்டும் என ஆசைப்படும் தம்பதியினர், குரு பலம் நிரம்பப் பெற்றுள்ள தின, வேளையிலும், பெண் குழந்தை வேண்டும் என விருப்பப்படும் கணவன் – மனைவியர், சுக்கிரன் சுபபலம் பெற்றுத் திகழும் தின, நேரத்திலும் சேரவேண்டும்…!!” எனக் கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு, சென்ற காலத்தில், “ஜோதிடம்” எனும் மகத்தான வானியல் கலை நம் வாழ்வோடு, பின்னிப் பிணைந்திருந்தது.

இதேபோன்று, சரித்திரப் பிரசித்திப் பெற்ற விஜய நகர சாம்ராஜியத்தின் மாமன்னரான கிருஷ்ண தேவராயரை, அவதார புருஷரும், மத்வ சித்தாந்த மகானுமான வியாஸ தீர்த்தர், மன்னரின் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்து, மன்னருக்கு மரணயோகம் ஏற்படவுள்ளதை முன்னதாகவே அறிந்து, அந்தத் தோஷத்தைத் தானே ஏற்று, மன்னர் உயிரைக் காப்பாற்றியருளினார். அதனால் அம்மகானுக்கு வியாஸராஜ தீர்த்தர் என்ற விருது வழங்கபட்டது. அதுவே அவரின் பெயராகவும் நிலைத்துவிட்டது.

அத்தகைய ெபருமை பெற்ற விஜய நகர சாம்ராஜிய அரசவையில், ஜோதிட அமைச்சராகப் பதவி பெற்றவர், “அல்லசானி பெத்தண்ணா” என்ற ேஜாதிடப் பெரியவர். குறிப்பாக, அன்றைய ராணுவப் பணிக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள், அவரவர் ஜாதகக் குறிப்புடன்தான் விண்ணப்பிக்க வேண்டும். ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து, அந்த நபர் வீரமுள்ளவரா? தேச பக்தி நிறைந்தவரா? அல்லது நெருக்கடியான தருணத்தில், பணத்திற்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு நாட்டைக் காட்டிக்கொடுத்துவிடுபவரா? என்பது பற்றி அந்த அமைச்சரவைக்கு ஜோதிடக் குறிப்பு அனுப்பப்படும். அதன் அடிப்படையில்தான், அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு தீர்மானிக்கப்படும் என்ற முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்ததை ஆங்கிலேயே சரித்திர ஆராய்ச்சியாளர்கள் எழுதிவைத்துள்ளனர். அந்த அளவிற்குப் புகழ்வாய்ந்து விளங்கியது, ஜோதிடக் கலை, நம் நாட்டில்!

இத்தகைய தெய்வீகப் பெருமையும், சக்தியும் கொண்ட குரு பகவானுக்கு, தமிழகத்தில் பல திருக்கோயில்கள் உள்ளன. பல திருக் கோயில்களில், நவக்கிரக சந்நதிகளும், தனிச் சந்நதிகளிலும் குருபகவான் எழுந்தருளி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்துவருகிறார். அவற்றில், தனிச் சிறப்பு பெற்றது, ஆலங்குடி திருத்தலமாகும். இங்கு குரு பகவானுக்கு, தனிச் சந்நதி உள்ளது. பரமேஸ்வரனே இங்கு, குரு பகவானாக தரிசனம் அளிப்பதாகப் புராதன தல புராணம் கூறுகிறது.

ஒருவரது ஜனன கால ஜாதகத்தில், குரு நீச்சமடைந்தோ அல்லது, பாப கிரகங்களுடன் சேர்ந்தோ இருப்பின், அதற்குப் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது ஆலங்குடி! ஜாதகத்தின், லக்னத்தில் குரு அமர்ந்திருப்பின், நல்ல குடும்பத்தில் நற்குணங்களுடன் பிறக்கும் பேறு கிடைக்கும். குரு பகவான், ஜாதகத்தில், தான் இருக்கும் இடத்திலிருந்து, பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானம், களத்திர ஸ்தானம் ஆகிய 7-ம் இடம், பாக்கிய ஸ்தானமாகிய 9-ம் இடம் ஆகியவற்றைத் தனது சுபப் பார்வையினால், பலப்படுத்துகிறார்.

“குரு பார்க்கில், கோடி தோஷம் விலகும்” என்றொரு மூதுரை காலங்காலமாக உள்ளது. இதிலிருந்து, குரு பகவானின் பார்வை சக்தியின் உயர்வினைப் புரிந்துகொள்ளலாம். ஜனன கால ஜாதகத்தில், லக்னம், பூர்வ புண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானம், ஆயுள் ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், ஜீவன ஸ்தானம் ஆகிய இடங்களுக்கு, குரு பகவானின் சேர்க்கை அல்லது பார்வை பலம் இருப்பின், அத்தகைய பேறு பெற்றவர்கள், வாழ்க்கையில், அனைத்துப் பாக்கியங்களையும் நேர் வழியில் பெற்று, பெருமையுடன் வாழ்வார்கள் என குருவின் தெய்வீகப் பெருமையை விளக்கியுள்ளன, மிகப் பழமையான ஜோதிட நூல்கள்.

எவரது ஜாதகத்திலாவது, குரு பகவான், மகர ராசியில் நீச்சமாகவோ (பலம் குறைவது) அல்லது பாப கிரகங்களுடன் சேர்க்கைப் பெற்றோ இருப்பின், அவற்றிற்காக மிக எளிய பரிகாரங்களை வேத கால மகரிஷிகள் நமது நன்மைக்காக வழங்கியுள்ளனர். உயர் குணங்கள் அமையப்பெற்ற, உத்தமியான மனைவி, நற்குணங்களைக் கொண்ட குழந்தைகள், பணியாற்றும் இடத்தில், அன்பு செலுத்தும் முதலாளி, ஒழுக்கமான நண்பர்கள், தெய்வ பக்தி, தேச பக்தி, சத்தியம், ஒழுக்கம் ஆகிய நற்பண்புகள், அன்பும், பாசமும் காட்டும் தாய் – தந்தையர் ஆகிய பேறுகள் கிடைப்பதற்கு ஜனன கால ஜாதகத்தில், குரு பகவான், பாப கிரகங்களின் சேர்க்கையில்லாமல், சுப பலம் பெற்றிருக்க வேண்டும்.இனி, இந்த குரு பெயர்ச்சி, ஒவ்வொரு ராசியினருக்கும் எத்தகைய பலன்களை அளிக்கவுள்ளது என்பதைச் சற்று ஆராய்ந்து பார்ப்போமா?!

You may also like

Leave a Comment

16 − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi