Thursday, May 16, 2024
Home » வெண்பன்றி வளர்ப்பால் வெள்ளாமை சிறக்குது : ஒருங்கிணைந்த பண்ணையத்தில் சாதிக்கும் புதுக்கோட்டை விவசாயி

வெண்பன்றி வளர்ப்பால் வெள்ளாமை சிறக்குது : ஒருங்கிணைந்த பண்ணையத்தில் சாதிக்கும் புதுக்கோட்டை விவசாயி

by Porselvi

விவசாயத்தில் எந்த லாபமும் இல்லை, விவசாயம் செய்வதை விட சும்மா இருப்பதே மேல் என்று சிலர் கூறுவதுண்டு. அதன்படியே சிலர் தங்கள் நிலத்தை என்ன செய்வதென்றே தெரியாமல் தரிசாக போட்டு விடுவார்கள். ஆனால் சவால்கள் இருந்தபோதும், சாத்தியக்கூறுகள் கொஞ்சம் கிடைத்தாலும் விவசாயத்தில் சாதிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் புதுக்கோட்டை மாவட்டம், ராயப்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்.
வெண் பன்றி வளர்ப்பு, நெல் சாகுபடி, தென்னை வளர்ப்பு, காய்கறிகள் சாகுபடி என ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வருமானத்தை குவித்து வரும் இவர், தனது பண்ணையில் மேற்கொள்ளும் டெக்னிக்குகள் அடடே ரகம். தனது பண்ணையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராதாகிருஷ்ணனைச் சந்தித்தோம்.

‘‘எனது தந்தை சண்முக பழனியப்பா இயற்கை மீது அதீத ஈடுபாடு கொண்டவர். இயற்கை விவசாயம் தான் எப்போதும் நிரந்தரம் என்று உறுதியுடன் உள்ளவர். அவரைப் பார்த்து வளர்ந்த எனக்கு இயற்கை விவசாயத்தில் அதிக ஈடுபாடு. அதை ஒருங்கிணைந்த பண்ணையமாக மேற்கொள்வதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். எப்போதும் ஒரே பார்வையில் இல்லாமல் மாற்றி யோசிப்பதுதான் நல்லது என்று நினைத்த எனக்கு வெண்பன்றி வளர்க்க ஆர்வம் ஏற்பட்டது. இதை சரியாக செய்தால் நிச்சயம் அருமையான லாபம் பார்க்கலாம் என்பதை தெரிந்துகொண்டு வெண்பன்றி வளர்க்க முடிவெடுத்தேன். ஆரம்பத்துல எதிர்ப்புதான் அதிகம் இருந்துச்சு. ஆனால் எந்தத் தொழில் செய்தாலும்,அதில் நேர்மையும் கடுமையான உழைப்பும் இருந்தால் நிச்சயம் வெற்றி என்பதை மனதில் வைத்துக்கொண்டு வெண்பன்றி வளர்ப்பு குறித்துயார் எது கூறினாலும், மனதில் ஏற்றுக் கொள்ளாமல்
இத்தொழிலில் இறங்கினேன்.

உணவகமும் வைத்திருப்பதால் அங்குள்ள உணவுமிச்சங்களை வெண்பன்றிகளுக்கு உணவாக்கினேன். எனது ஊரான ராயப்பட்டியில் 15 ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தேன். வெண்பன்றி வளர்ப்பு, நெல் சாகுபடி, தென்னை, தக்காளி, மிளகாய், காய்கறிகள் சாகுபடி போன்றவற்றை மேற்கொண்டு வருகிறேன். ராயப்பட்டி கிராமம், பாறைகள் நிறைந்த பகுதியாகும். இந்த நிலத்தை சீரமைத்து முதலில் பன்றி வளர்ப்பிற்கு கொட்டகை அமைத்தேன். வெண்பன்றிகளை குழந்தை போல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவற்றிற்கு அதிக வெயில் ஆகாது. அதனால் ஒவ்வொரு பன்றிகளுக்கும் தனித்தனியாக அறைகள் போல் அமைத்து அவை தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

நம் வீட்டில் எப்படி கழிவறை தனியாகவும், உணவருந்தும் இடம் தனியாகவும் இருக்கிறதோ, அதுபோலவே வெண் பன்றிகளுக்கும் அமைக்கப்பட்டுள்ளது. வெண்பன்றிகளின் சாணத்தை இயற்கை உரமாக மாற்றி அவற்றை மற்ற சாகுபடிக்கு தெளித்து நிலத்தின் தரத்தை உயர்த்தினேன். பின்னர் அதில் எங்கள் உணவகத்திற்குத் தேவையான நெல்லை சாகுபடி செய்து வருகிறேன். வெளியில் அரிசி வாங்குவதே இல்லை. இத்துடன் மா மரம், மகோகனி, பலா, எலுமிச்சை போன்றவற்றை வளர்த்து வருகிறேன். எங்கள் பண்ணையில் 30 தாய்ப்பன்றிகள் உள்ளன. ஆண் பன்றிகள் 6 உள்ளன. இவற்றிற்கு காலையில் உணவகத்தில் மீதமாகும் உணவுப்பொருட்கள் மற்றும் கழிவுகளைக் கொண்டு வந்து உணவாக தருகிறோம். அதேபோல் மதியம் மற்றும் இரவு வேளைகளில் மீதமாகும் உணவுக்கழிவுகளைக் கொண்டு வந்து தருகிறோம்.

இங்குள்ள பன்றிகள் வருடத்திற்கு 300 குட்டிகள் வரை போடும். அதில் இருந்து 20 குட்டிகளை எடுத்து வளர்ப்பதற்காக வைத்துக்கொள்வேன். வெண்பன்றிகள் இருக்கும் இடம் எப்போதும் மிகவும் தூய்மையாக இருக்கும். கரூர், கேரளா, கோயம்புத்தூர், பழநி உட்பட பல பகுதிகளில் இருந்து வெண்பன்றிகளை வந்து வாங்கி செல்கின்றனர். ஒருமுறை தாய்ப்பன்றிகள் கர்ப்பமடைந்தால் சராசரியாக 14 குட்டிகள் வரை போடும். இந்த குட்டிகளை சரியான முறையில் பராமரித்து உரிய காலத்தில் விற்பனை செய்வதால் ஆண்டுக்கு அபரிமிதமான வருமானம் கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். இதன்மூலம் கிடைக்கும் காய்கறி சாகுபடி, அரிசி, தென்னை என அனைத்தும் வருமானமே. என்னிடம் 10 பேர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்த ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கிடைக்கும் தொகையில் அவர்களுக்கும் பங்கு அளிக்கிறேன். இதனால் அவர்கள் இன்னும் ஊக்கத்துடன் செயல்படுகின்றனர்.

உண்மையான உழைப்பை அளிக்கும் ஊழியர்களுக்கு நாம்தான் பக்கபலமாக இருக்க வேண்டும். ஆறு ஏக்கரில் நெல் சாகுபடி செய்து வருகிறேன். இயற்கை வழி விவசாயம் என்று சொல்வதே வேதனைதான். இயற்கையுடன் இணைந்தது தான் விவசாயம். இயற்கை நமக்கு அளித்த பெரும்கொடை தான் விவசாயம். ஆனால் நிலத்தை மலட்டுத்தன்மையாக்கும் வகையில் உரங்கள் தெளித்து பயிர் சாகுபடி மேற்கொள்வது மிகவும் வேதனை அளிக்கும் செயல். நெல் சாகுபடிக்கு பஞ்சகவ்யா, மீன் அமிலம் போன்றவற்றை தயாரித்து அதை தான் இயற்கை உரமாக பயன்படுத்துகிறேன். பன்றிக் கழிவுகளை சேமித்து உரமாக்கி நிலத்தில் தெளித்து சாகுபடி செய்கிறேன். இதனால் நெல் விளைச்சல் அதிகமாக கிடைக்கிறது. இதுவரை எனது நெல் சாகுபடிக்காக நான் உரமே வாங்கியது கிடையாது. காய்கறிகளும் சாகுபடி செய்வதால் எனது உணவகத்திற்கு தேவையான காய்கறிகளும் இங்கிருந்தே செல்கிறது. எனது வாடிக்கையாளர்களுக்கும் ஆரோக்கியமான உணவை அளிக்கிறேன்.

இந்த பகுதி வானம் பார்த்த பூமி. ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். சம்பங்கி பூ சாகுபடி செய்வதால் தெளிப்பு நீர் பாசனம் மேற்கொள்கிறேன். எனது இந்த ஒருங்கிணைந்த சாகுபடிக்காக பம்ப் செட் அமைத்திருக்கிறேன். இதில் சோலார் மூலமும் தண்ணீர் பாய்ச்சி வருகிறேன். இயற்கை நமக்கு கிடைத்த மிகப்பெரும் வரம். அதை முழுமையாக பாதுகாக்க வேண்டும். நான் பசுமைக்குழு உறுப்பினராக இருப்பதால் மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறேன். கடந்த 4 ஆண்டுகளாக மரக்கன்றுகள் அளித்து அதை பராமரித்து வளர்க்க செய்து வருகிறோம். மேலும் எங்காவது மரங்கள் வெட்டப்படுகிறது என்று அறிந்தால் அதை தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறோம். இந்த செயலை இச்சமுதாயத்திற்கும், பூமிக்கும் நாம் செய்யும் கடமையாகவே பார்க்கிறேன். இன்றைய காலக்கட்டத்தில் புவி வெப்பமயமாதலால் மிகப்பெரிய பிரச்னை வளர்ந்துகொண்டிருக்கிறது. இதைப் போக்கி மக்களையும், மண்ணையும் காக்கும் மரங்களை கண்ணும், கருத்துமாக பாதுகாப்பது நமது கடமை’’ என பொறுப்புடன் பேசி
அனுப்பினார்.
தொடர்புக்கு:
ராதாகிருஷ்ணன்
99429 33912.

You may also like

Leave a Comment

seven − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi