Sunday, October 6, 2024
Home » பனையோலை கிரீடம்… நுங்கு வண்டி… பரவசப்படுத்திய பனைத்திருவிழா

பனையோலை கிரீடம்… நுங்கு வண்டி… பரவசப்படுத்திய பனைத்திருவிழா

by Porselvi

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள நரசிங்கனூர் கிராமத்தில் கடந்த வாரம் நடைபெற்ற பனைத் திருவிழா தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அங்குள்ள பனங்காடு என்ற இடத்தில் 2 நாட்கள் நடந்த இந்தத் திருவிழாவில் பனையோலையில் செய்த கைவினைப்பொருட்கள் கண்காட்சி, பனை உணவுப்பொருட்கள் கண்காட்சி, பனை ஏறும் போட்டி, பனை விருது, கார்த்தி சுற்றும் போட்டி என பனை தொடர்பான பல்வேறு போட்டிகளை நடத்தி தமிழர்களின் பாரம்பரிய மரத்திற்கு பெருமை ேசர்த்திருக்கிறார்கள். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள், பனைப்பொருட்கள் உற்பத்தியாளர்கள் என பலதரப்பினர் குடும்பம் சகிதமாக கலந்துகொண்டு 2 நாட்கள் முழுக்க பனை சார்ந்த வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள்.

மானாவாரி பூமி. மழை பெய்தால்தான் விவசாயம். நிலக்கடலை, உளுந்து, எள், பச்சைப்பயறு போன்றவைதான் நரசிங்கனூர் நிலங்களின் பிரதான பயிர். ஆனால் இங்குள்ள அனைத்து வயல்களிலும் வேலியோர மரங்களாக பனைமரங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இந்த பனைமரங்கள்தான் இப்பகுதி மக்களின் பெரும் வாழ்வாதாரமாக மாறி இருக்கிறது. அருகில் உள்ள பனைய புரம் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள்தான் நரசிங்கனூரில் நிலைகொண்டிருக்கிறார்கள். பனையபுரம் கிராமம், அங்கிருந்து அவர்கள் இடம்பெயர்ந்த கதை, இப்போது பனைமீது அவர்கள் கொண்டிருக்கும் பாசம் என பல விஷயங்கள் நெகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன.

“பனங்காடுகள் நிறைந்த ஊர்தான் பனையபுரம். அங்கிருக்கும் பனங்காட்டு ஈஸ்வரர் கோயில் மன்னன் ராஜேந்திரசோழன் கட்டியது. அங்கு கோயில் கட்டுவதற்காக பனைமரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து நரசிங்கனூர், பூரி குடிசை போன்ற கிராமங்களில் குடியேறினர். சிலர் தங்களின் பூர்வீக தொழிலான பனையேறும் தொழிலை இன்னும் செய்து வருகிறார்கள். சிலர் அதை கைவிட்டு விட்டு வேறு வேலைகளுக்கு போய்விட்டார்கள். ஆப்பிள் இன்றைக்கு ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்கிறது. அதைவிட பலமடங்கு சத்துகள் மிகுந்த நுங்கு மரத்தில் இருந்து பறிக்கப்படாமலே பழமாகி கீழே உதிர்கிறது. பனையின் மகத்துவம் அனைவருக்கும் தெரியவேண்டும். குறிப்பாக பனைமரங்களை வைத்திருப்பவர்கள், பனை மூலம் எப்படி பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ளலாம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதற்காகவே நாங்கள் இந்த பனைத்திருவிழாவை நடத்துகிறோம்’’ என அதிரடி என்ட்ரி கொடுத்து பேச ஆரம்பித்தார் பனைத்திருவிழாவின் ஒருங்கிணைப்பாளரான பாண்டியன் பனையேறி.

பாண்டியன் பனையேறி லேப் டெக்னாலஜி படித்தவர். தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்துவிட்டு, வேலை பிடிக்காமல் விவசாயம் பக்கம் திரும்பியவர். பனையேறும் தொழிலில் தனது 8 தலைமுறை ஈடுபட்டபோதும், அந்த தொழிலில் இருந்து விலகியே இருந்தவர். நம்மாழ்வாரிடம் பயிற்சி பெற்று இயற்கை விவசாயம் செய்ய வந்திருக்கிறார். பின்னர் பனையின் மகத்துவத்தை அறிந்து பனையில் இருந்து கைவினைப்பொருள் தயாரிப்பு, பதநீர், கருப்பட்டி தயாரிப்பு, பனை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என இயங்கி வருகிறார்.“பனையேறிகளுக்கு ஏற்படும் சில பிரச்னைகள், வருமானமின்மை போன்ற காரணங்களால் அந்த தொழிலில் இருந்து விலகிவருகிறார்கள். அப்படியே தொழிலை செய்தாலும் சீசன் காலங்களில் மட்டும் செய்வார்கள். மற்ற காலங்களில் வேறு கூலி வேலை தேடி அலைவார்கள். இந்த நிலை இனி தொடர வேண்டாம். பனையில் இருந்து 360 நாட்களும் வருமானம் பார்க்கலாம். பனை என்பது நுங்கு, பதநீர், கருப்பட்டி மட்டுமல்ல. இது ஒரு ஒருங்கிணைந்த தொழில். கைவினை, உணவு, மருந்து என பலவற்றுக்கு பனையைப் பயன்படுத்தலாம்.

அதை மக்களுக்கு நேரடியாக காட்சிப்படுத்தவே கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பனைத்திருவிழா நடத்தினோம். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. அந்த உற்சாகத்தில் இப்போதும் நடத்தியிருக்கிறோம். கடலூர், சேலம், ஈரோடு, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி என தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள இயற்கை ஆர்வலர்கள் இதில் பங்கெடுத்தனர்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் பெரும்பாலும் நகரத்தில், ஏசி அறைகளில்தான் நடக்கும். இங்கு நடந்தது பனையோலைகளின் தாலாட்டின் இடையே இயற்கையான சூழலில். பனையேறிகளை வைத்து பனைமரத்திற்கு படையலிட்டு நிகழ்ச்சியைத் துவக்கினோம். சிறுவர்களுக்கென நுங்கு பந்தல் அமைத்து நுங்கு வழங்கினோம். நுங்கு வண்டி ஓட்டுவதற்கு போட்டி வைத்தோம். பெரியவர்களுக்கு பனையேறும் போட்டி. நுங்கை கத்தி வைத்து வெட்டாமல், வாயால் கடித்து சாப்பிடும் போட்டியும் நடத்தினோம். நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறுவர்கள் பனையோலை மூலம் செய்த கிரீடம் அணிந்தும், காற்றாடி விட்டும் மகிழ்ந்தனர். அகிலா குணாளன், நவிதா ஆகியோர் பனையில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட 100க்கும் மேற்பட்ட உணவுப்பொருட்களை காட்சிப்படுத்தி அசத்தினர். கார்த்திகேயன் என்ற ஆசிரியர் 10 வகையான பனைப்பொருட்களை காட்சிப்படுத்தினார். டயானா என்பவர் பனையில் இருந்து செய்யப்பட்ட கைவினைப்பொருட்களை காட்சிப்படுத்தினார்.

இரவில் கார்த்தி என்னும் மாவளி சுத்தும் நிகழ்ச்சி வைத்தோம். இதில் அனைவரும் பனம்பூவில் இருந்து செய்யப்பட்ட கார்த்திகளை சுற்றி மகிழ்ந்தார்கள். இப்போது கார்த்திகை தீப விழாவுக்கு கூட பட்டாசு வெடிக்கிறார்கள். கோயிலில் இந்த தவறையே செய்கிறார்கள். ஐப்பசி மாத அடைமழை முடிந்து கார்த்திகையில் குளிரான சூழல் நிலவும். அப்போது குளிரில் இருந்து தப்பிக்க வீட்டில் வெப்பத்தன்மையைக் கொண்டுவரவே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பனம்பூவில் கார்த்தி செய்து மாவளி சுற்றுவதும் அதற்குத்தான். தங்களைச்சுற்றி ஒரு அரண் போல வெப்பத்தை உருவாக்கி, உடலைக் குளிரில் இருந்து விடுவிக்கவே மாவளி சுற்றினார்கள். அதை முற்றிலும் இயற்கை சார்ந்து செய்தார்கள் நம் முன்னோர். ஆனால் இப்போது பட்டாசு வெடித்து இயற்கைக்கு வேட்டு வைக்கிறார்கள்.

இங்கு நடத்தப்பட்ட அனைத்து போட்டி களுக்கும் பனைமரத்தால் செய்யப்பட்ட ஷீல்டுகள் வழங்கப்பட்டன. வந்திருந்த அனைவரும் பனங்காட்டிலேயே இரவில் தங்கி இயற்கையான சூழலை அனுபவித்தனர். பனைமரங்களுக்கு இடையில் பரண் அமைத்திருந்தோம். ஏணி மூலம் அதில் அவர்கள் ஏறி அமர்ந்து பார்த்தனர். அங்கிருந்து பார்க்கும்போது பனங்காட்டின் கம்பீரம் மேலும் அதிகரித்தது.கம்போடியா, தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகளில் பனைத்தொழில் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. நம் நாட்டில் இந்த நிலை இல்லை. பனையை தேசிய மரமாகக் கொண்ட நம்ம ஊரிலும் மக்களிடம் பனை குறித்த விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை. பனை இங்கு மதிக்கப்படுவதே இல்லை. கண்ட பழங்கள் எல்லாம் ஷாப்பிங் சென்டர்களில் விற்கப்படுகின்றன. அங்கு பல சத்துகள், மருத்துவக் குணங்கள் நிரம்பிய நுங்குக்கு இடமில்லை. இது நம் மண்ணில் விளையும் பொருள். மண்ணுக்கேற்ற உணவே சிறந்த உணவு என்பதை அனைவரும் புரிந்துகொண்டாலே போதும்’’ என்கிறார் இந்த பனையின் மைந்தர்.

 

You may also like

Leave a Comment

18 − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi