சென்னை: சென்னை வானகரத்தில் அமமுக பொதுக்குழு கூட்டம் இன்று கூடியது. அமமுக தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவதற்கு பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் டிடிவி தினகரன் மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வாகிறார். சென்னை வானகரத்தில் நடைபெறும் அமமுக பொதுக்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்ட விதி எண்கள்: 24(பிரிவு 2), 25(பிரிவு 1) மற்றும் 26(பிரிவு 1)இல் குறிப்பிட்டுள்ளபடி கழக பொதுச்செயலாளர், கழக தலைவர் மற்றும் கழக துணைத்தலைவர் ஆகியோரை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதிமுறைகளுக்கேற்பு இன்று 06.08.2023, கூட்டப்பட்டுள்ள இப்பொதுக்குழுவில் தேர்தல் அதிகாரிகளாகிய கழக பொதுச்செயலாளர், கழக தலைவர் மற்றும் கழக துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கு, இங்கு கூடியுள்ள அனைத்துப் பொதுக்குழு உறுப்பினர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி கழக பொதுச்செயலாளராக டிடிவி தினகரனனும், கழக தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபால், கழக துணைத்தலைவராக முன்னாள் நாடாளுமன்ற அன்பழகன் அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட பதவிகளுக்கு இன்று தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிக்காலம் கழகத்தின் சட்டதிட்ட விதிமுறைகளின்படி நான்கு ஆண்டுகள் ஆகும் என்று அறிவித்துள்ளனர்.
நமது இயக்கத்தில் இருக்கிற நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் ஆற்றல் இருக்கிறது, பொதுமக்களிடத்தில் நல்ல பெயர் இருக்கிறது.தமிழக மக்கள் நமது இயக்கத்தை நிச்சயம் ஆட்சி பொறுப்பில் அமர வைப்பார்கள். அம்மா அவர்களுக்கு பிறகு அம்மாவின் லட்சியங்களையும், கொள்கைகளையும் காப்பாற்றும் இயக்கமாக அம்மா மக்கள் முனேற்றக்கழகம் செயல்பட்டு வருகிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.