நன்றி குங்குமம் டாக்டர்
உலகளவில் சர்க்கரைநோயில் இந்தியாதான் முதன்மை வகிக்கிறது. இதற்கு முக்கியக் காரணமே நம்முடைய மாறிவிட்ட வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இன்மை போன்றவைதான். இவற்றை முறைப்படுத்தினாலே சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அவற்றுக்கு உதவும் சில வகை இலைகளை பார்ப்போம்.
ஸ்பின்னாச் கீரை
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய மிக முக்கியமான இலைகளில் ஒன்று ஸ்பின்னாச் என்னும் கீரை. இவற்றில் அதிகப்படியான அளவு இரும்புச்சத்து இருப்பதோடு நார்ச்சத்துக்களும் போதுமான அளவில் இருப்பதால் இவற்றின் கிளைசெமிக் குறியீடு மிகக்குறைவு. இது ரத்தத்தின் சர்க்கரையின் அளவை வேகமாக உயர்த்தாது.
துளசி
சுவாச மண்டலம் தொடர்பான பிரச்னைகளுக்கு துளசி சிறந்த தீர்வைத் தரும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் துளசி மிகச்சிறப்பாக வேலை செய்யும். இவற்றில் நிறைய ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் என்சைம்களும் இருக்கின்றன. இவை ரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவி செய்யும். அதிலும் காலை வெறும் வயிற்றில் 10-15 துளசி இலைகளை எடுத்துக் கொள்வது மிக நல்லது.
புதினா
புதினாவில் வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, ஃபோலேட், மாங்கனீசு ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. இவை அனைத்துமே ரத்தத்தை சுத்திகரிப்பது தொடங்கி, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு சீராக இருப்பது வரை உடலில் பல முக்கிய வேலைகளைச் செய்கிறது.
வேப்பிலை
வேப்பிலை அதிக கசப்புத்தன்மை கொண்டது. இது ரத்தத்தின் குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். காலை எழுந்ததும் பத்து வேப்பிலைகளை அப்படியே வாயில் போட்டு மென்றோ அல்லது சாறாக எடுத்தோ சாப்பிட்டு வரலாம். இது சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி வயிற்றுப் புழுக்களையும் வெளியேற்றும். சருமத்துக்கும் நல்லது.
கறிவேப்பிலை
கறிவேப்பிலை ரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பது மட்டுமின்றி, ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலின் அளவையும் கட்டுப்படுத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு வரும் இதய பாதிப்பைக் குறைக்கிறது.
வெந்தயக் கீரை
வெந்தயக் கீரை ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டு வர மிகச்சிறப்பாக வேலை செய்யும். இரும்புச்சத்தும் அதிகம். அதனால் வாரத்தில் 2-3 நாட்களாவது வெந்தயக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
அஸ்வகந்தா
ஆயுர்வேத மூலிகைகளில் முதன்மையானதாக சொல்லப்படுவது அஸ்வகந்தா. இதை இந்தியன் ஜின்செங்க் என்றும் அழைப்பார்கள். அஸ்வகந்தா ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவி செய்யும். குறிப்பாக டைப் 2 நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க உதவி செய்கிறது.
தொகுப்பு: ரிஷி