Thursday, June 20, 2024
Home » இங்கு கிடைக்கும் அனைத்துமே சென்னைக்கு புதுசு!

இங்கு கிடைக்கும் அனைத்துமே சென்னைக்கு புதுசு!

by Lavanya

டெசர்ட்ஸூக்கு இது நல்ல ஸ்பாட்

உலக அளவில் அனைத்து வகையான உணவுகளுமே எல்லா நாடுகளிலும் கிடைக்கிறது. அந்த வகையில், அடிக்கடி ட்ரெண்டிங் வரிசையில் இடம்பிடிக்கும் பல வகையான டெசர்ட்ஸ்ஸும் இருக்கிறது. அப்படிப்பட்ட டெசர்ட்ஸை சென்னை மாதிரியான நகரங்களில் சாப்பிட வேண்டுமென்றால் கொஞ்சம் சிரமமான விசயம்தான். ஏனெனில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளில் கிடைக்கும் டெசர்ட்ஸ் சென்னையில் கிடைக்க வேண்டுமென்றால் அந்தந்த நாடுகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் இருந்து அதை தயாரிப்பதற்கான மிசினரி வரை அனைத்துமே கச்சிதமாக இருக்க வேண்டும். அப்போதுதான், வெளிநாடுகளில் கிடைக்கக்கூடிய டெசர்ட்ஸை அதே சுவையில் தயாரிக்க முடியும். அப்படிப்பட்ட டெசர்ட்ஸை அசலான சுவையில் ருசிக்க வேண்டுமென்றால் அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள ‘தி அவென்யூ கஃபே’ சிறந்த இடம்.“நல்ல உணவுகளைத் தயாரிப்பதும் விற்பனை செய்வதும் எளிதான விசயம் கிடையாது. அதற்கு கடுமையான உழைப்பும் நம்பிக்கை மிகுந்த மனதும் கட்டாயம் தேவை’’ என பேசத் தொடங்குகிறார் கஃபே உரிமையாளர் ஜெய்ஸ்ரீ.“இந்த கஃபேயை இப்போதுதான் நான் நடத்தி வருகிறேன். ஆனால், இதைத் தொடங்கியது எனது மகன் வினோத்.

அவன் கல்லூரி படிக்கும் போதில் இருந்தே டெசர்ட்ஸ் அன்ட் கேக்ஸ் தயாரிப்பதில் மிகுந்த ஆர்வம். இணையத்தில் பல வகையான வீடியோக்கள் பார்த்து அவனே வீட்டில் பிரவுனி கேக் தயாரிக்கத் தொடங்கினான். அவன் தயாரித்த கேக்குகளை அவனது நண்பர்களுக்கு கொடுத்து சாப்பிடச் சொல்வான். கேக்கை சாப்பிட்ட அவனது நண்பர்கள் அனைவருக்குமே அவன் செய்த கேக் பிடித்துப்போக அவனுக்கும் பிரவுனி கேக் தயாரிப்பது மிகவும் பிடித்துப்போனது. அவனோட சேர்ந்து நானும் கேக் தயாரிப்பு மற்றும் பிரவுனி தயாரிப்பில் உதவி செய்யவே, எனக்கும் அந்த மாதிரி கேக் தயாரித்து கொடுப்பது பிடிக்க ஆரம்பித்தது. கொரோனாவிற்கு முன்பு கிளவுட் கிட்சனில் இந்த மாதிரியான கேக் செய்து விற்கத் தொடங்கினோம். வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. தொடர்ந்து ஆர்டர்ஸ் வர ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் கொரோனா நேரத்தில் அந்த கிளவுட் கிட்சனை நடத்த முடியவில்லை. மீண்டும் அதே மாதிரியான டெசர்ட்ஸ் தயாரிப்பை தொடங்கி அசலான பிரவுனிகளை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என ஆசை. அதனால் மீண்டும் கேக் அன்ட் பிரவுனி தயாரிப்பில் இறங்கினோம். இந்த முறை கொஞ்சம் பெரிதாகவே தனியாக கஃபே வைக்கும் அளவிற்கு வாடிக்கையாளர்கள் கஃபேக்கு வந்து சாப்பிடும் அளவிற்கு எங்கள் கஃபேயை பெரிதாக உருவாக்கினோம்.இப்போது இந்த கஃபேயை முழுக்கவே நான்தான் பார்த்து வருகிறேன். நமது கஃபேயில் டெசர்ட் இன் ஜார், டெசர்ட் இன் பாக்ஸ் என இரண்டு விதத்தில் டெசர்ட்ஸ் கொடுத்து வருகிறோம்.

ஜாரில் இருக்கிற டெசர்ட் முழுக்கவே கிரீம் வைத்து தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு வகை டெசர்ட். அந்த டெசர்ட்டை ஒரு பாட்டிலில் கொடுத்து வருகிறோம். அதையும் இளநீர், ரோஸ் மில்க் போன்ற இந்தியாவில் கிடைக்கிற உணவுகளில் இருந்து தயாரித்துக் கொடுக்கிறோம். அதாவது, ஒரு அமெரிக்கன் கேக்கை இந்தியச் செய்முறையில் இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு பிடித்த வகையில் கொடுத்து வருகிறேன். அதிலே காஃபி பிளேவரில் கிரீம் கேக், சீஸ் கேக், டபுள் சாக்லேட் கிரீம் கேக் என அனைத்துமே கொடுத்து வருகிறேன். அதேபோல, ஸ்ட்ராபெரியில் தயாராகிற டெசர்ட், மில்க் சாக்லேட். நுட்டல்லா டெசர்ட், லோட்டஸ் பிஸ்கட் என அனைத்திலுமே டெசர்ட்ஸ் தயாரித்துக் கொடுக்கிறோம். அதேபோல, பிரவுனியில் ரெட் வெல்வட், பீனட் பட்டர், சாக்லேட், லோட்டஸ் பிஸ்காஃப், கிரீம் சீஸ் என அனைத்து வகையான பிரவுனியும் தயாரித்துக் கொடுக்கிறோம். எங்கள் கஃபேயில் கிடைக்கிற டெசர்டை மைதாவில் நாங்கள் தயாரிப்பது கிடையாது. முந்திரி மற்றும் பாதாம் போன்ற நட்ஸை தூளாக அரைத்து அதிலிருந்துதான் நாங்கள் இந்த டெசர்டை தயாரிக்கிறோம். அதனால் சாப்பிடுவதற்கு ஆரோக்கியமாகவும் அதிக சுவையாகவும் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த ஜார் அன்ட் பாக்ஸ் டெசர்ட் எங்கள் கஃபேயில் அதிகம் விற்பனையாகும் பொருளாகவும் இருக்கிறது. அதேபோல, எங்களது தோட்டத்தில் விளைகிற மாங்காய்களைக் கொண்டும் நாங்கள் இந்த டெசர்ட்ஸ் தயாரிக்கிறோம்.

கேக்ஸ், பிரவுனி, ஜார் டெசர்ட்ஸ்க்கு அடுத்தபடியாக எங்கள் உணவகத்தில் நாங்கள் கொடுத்துவருவது குரோசண்ட். குரோசண்ட் என்பது வெளிநாட்டு வகை கேக். அதாவது, குரோசண்ட் என்கிற கேக் கண்டுபிடிக்கப்பட்டது ஆஸ்திரியா நாட்டில்தான். மைதாவில் தயாரிக்கப்படுகிற இந்த கேக் அந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் சிங்கப்பூர், கோலாலாம்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமாகவும் வெரைட்டியாகவும் தயாரிக்கப்பட்டது. அப்படிப்பட்ட குரோசண்டை எங்கள் கஃபேயிலும் கொண்டுவந்திருக்கிறோம். இந்த குரோசண்டின் செய்முறை மற்றும் அதனை செய்வதற்கு தேவையான மினிசரிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள சிங்கப்பூர் சென்று பயிற்சி எடுத்து அதன்பின் எங்களது கஃபேயில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அந்தளவிற்கு குரோசண்டை தயாரிப்பது மிகவும் கடினமான ஒன்று. மைதா, முட்டை, பட்டர் இவை மூன்றுதான் இதன் அடித்தளம் என்றாலும் இதை எல்லோராலும் செய்ய முடியாது. ஏனெனில், ஒரு குரோசண்டை மிகச்சரியாக செய்து முடிக்க நமக்கு இரண்டு நாட்கள் வரை ஆகும். அந்தளவிற்கு அதன் செய்முறை மிகவும் கஷ்டமான ஒன்று. எங்கள் கஃபேயில் மட்டும் பதினான்கு வகையான குரோசண்ட் இருக்கிறது. ஒவ்வொன்றையுமே அசலாக செய்து முடிப்பதற்கு வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட மிசின், குரோசண்டை சரியாக செய்துமுடிக்க அனுபவம் வாய்ந்த செஃப் என ஒவ்வொன்றையுமே பார்த்து பார்த்து செய்து வருகிறோம். இதுபோக, எங்கள் கஃபேயில் பாஸ்தா, சான்ட்வெஜ், சாலட்ஸ் என எல்லாமும் இருக்கிறது. இங்கிலீஷ் ஸ்டைல் ப்ரேக் பாஸ்ட், வெளிநாட்டு ஸ்டைல் காஃபி என பலவும் இருக்கிறது. இங்கு கிடைக்கிற அனைத்தும் சென்னைக்கு ரொம்ப புதிது. அதனாலே, கஃபேக்கு வருபவர்கள் அனைவரும் இங்கு கிடைக்கும் உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள்’’ என மகிழ்ச்சியோடு பேசுகிறார் ஜெய்.

– ச.விவேக்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

 

You may also like

Leave a Comment

3 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi