Wednesday, May 15, 2024
Home » ஏழுலோகநாயகி

ஏழுலோகநாயகி

by Nithya

மணலூர், கும்பகோணம்

நீக்கமற நிறைந்திருக்கிறாள் பராசக்தி. மானிடர்கள் தன்னை அறியும் பொருட்டு பூமியில் கருணை வடிவாக தன்னைப் பல்வேறு தலங்களில் நிறுத்திக்கொள்கிறாள். ‘நான் இங்கிருக்கிறேன்’ என பக்தர்களோடு கனவில் பேசுகிறாள். சில அம்பாள் உபாசகர்களிடம் ‘‘இத்தலத்தில் நான் அமரவிரும்புகிறேன் எனக்காக கோயில் கட்டு’’ என்று அருளாணையும் இடுகிறாள். சில தலங்களில் எதிர்பாராத விதமாக பூமியிலிருந்து புற்று வடிவில் பொங்குவாள். சிலை உருவில் பூமிக்குள் புதையுண்டு தோண்டும்போது குருதியோடு வெளிப்படுவாள். எப்படியானாலும் தான் நினைத்த இடத்தில் அருட்கோலம் பூண்டு விடுகிறாள். அருகே அழைத்து அருளையும், பொருளையும் வாரித் தருவாள். அப்படியொரு மகாசக்தி இந்த புவியில் நிலைகொள்ள விரும்பினாள். ஏழுலோகநாயகி என்று அவளை அழைத்தார்கள்.

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள மணலூர் எனும் கிராமத்திற்குள் அந்த மகாசக்தி லீலை புரிய அருவ நடந்தாள். அந்த அழகான குளத்திற்குள் இறங்கினாள். எல்லோரையும் ஈர்த்தாள். மணலூரிலுள்ள அந்த தாமரைக்
குளம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. தாமரை இலையின் நீர் பற்றற்ற தன்மையை எல்லோருக்கும் உணர்த்தியது. கரையருகே அமர்ந்து இரண்டு சொட்டு நீரை இலையில் தெளிக்க, அது பாதரசக் கோளம் போல இலையை தொடாது ஓடுவது பலருக்கு விளையாட்டாக இருந்தது. தாமரைத் தடாகத்தின் அழகைத் தாண்டிய ஒரு ஈர்ப்பு அந்த குளத்திற்கருகே எல்லோரையும் வரவழைத்தது. நிலாவினை விழுங்கிவிட்டது போன்ற ஒரு வெளிச்சம் எப்போதும் அங்கு நிலவியது. கரையில் அமர்ந்து ஏதேதோ குடும்பக் கவலையில் மூழ்கியவர்களுக்குச் சட்டென்று தீர்வு கிடைத்தது.

தியானத்திற்காக போராடும் ஒரு சில சந்நியாசிகள் தன்னை மறந்து அங்கேயே கிடந்தனர். குடும்பிகள் யாரிடமோ எல்லாவற்றையும் சொல்லிவிட்டதுபோல மனச்சுமை குறைந்து வீட்டிற்கு நடந்தார்கள். இரவு நேரங்களிலும், மனித நடமாட்டம் இல்லாத காலங்களிலும் சிறிய பெண்ணொருத்தி காலில் கொலுசு கட்டிக்கொண்டு ஓடுவதுபோன்று ஓசை நீரில் கேட்டபடி இருந்தது.

முதலில் நம்முடைய பிரமைதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று எல்லோரும் சாதாரணமாக விட்டனர். ஆனால், தொடர்ந்து அந்த ஓசை எல்லோருக்கும் தெளிவாகக் கேட்டவுடன், ஆஹா… உள்ளுக்குள் சக்தி வீற்றிருக்கிறாள். அவள் வெளிப்பட விரும்புகிறாள் என்று விஷயம் தெரிந்தவர்கள் சற்று உரத்துச் சொன்னார்கள். ஊரார் திகைத்தனர். ‘சரி, தேடிப் பார்ப்போம்’ என்று குளத்திற்குள் இறங்கினர். ஓசை எங்கு வருகிறது என காதைக் கூர்மையாக்கி நீருக்குள் அலைந்தனர். நீருக்குள்ளேயே மெல்லிய வெளிச்சம் பூசியதுபோன்ற ஒரு இடத்தில் அகிலமனைத்தும் காக்கும் அம்பிகை சிலை வடிவில் மெல்லிய புன்முறுவல் பூத்த முகத்தோடு காட்சி தந்தாள். தலையில் மெல்லிய ரத்தக் கசிவை பார்த்த பக்தர்கள் மிரண்டனர். நீரைக் குடைந்து நீந்தியவர்கள் அள்ளி எடுத்து சிலையை கரை சேர்த்தனர். எங்கிருந்தோ ஒரு குரல் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. நீர் சொட்டச்சொட்ட கரையில் நின்ற பக்தர்கள் நாம் எங்கிருக்கிறோம் என்று ஒரு கணம் தங்களை மறந்தனர். அது அசரீரி என்று சில விநாடிகளில் புரிந்து வானம் நோக்கி கைகூப்பி, தாயே சொன்னதை செய்கிறோம் என உறுதி சொன்னார்கள்.

‘‘என்னை ஊரின் வடக்கு நோக்கி எடுத்துச் செல்லுங்கள். உரல் உலக்கை சத்தம் இல்லாத இடத்தில் என்னை அமர்த்துங்கள். நான் எப்போதும் உங்களைக் காப்பேன்’’ என்று மட்டும் ஆணையிட்டாள்.ஊர்மக்களுக்கு அதென்ன உரல், உலக்கை சத்தம் கேட்காத இடம் என்று புரியவில்லை. அந்த குளத்தில் பூத்த நாயகியை ஏந்திக் கொண்டு கூட்டமாக சென்றனர். கிராமத்தை தாண்டினர். அப்போதும் எங்கேயோ ஓரிடத்தில் உரலின், உலக்கையின் சப்தங்கள் கேட்டுக் கொண்டுதான் இருந்தன. கிராமத்தின் எல்லையை தாண்டும்போது காடு போன்ற ஓரிடத்தில் உரல், உலக்கை என மனிதர்களின் உபயோகமில்லாத இடத்தில் சிலையை இறக்கினர். மின்னல் போன்ற ஒளி அம்மையின் முகத்தில் தோன்றி மறைந்தது. மக்கள் மனம் நிறைந்தனர். அங்கேயே சிறு கோயிலாகக் கட்டினர். இன்றும் சூரியனார் கோயிலுக்கும், திருமாந்துறை எனும் பாடல் பெற்ற தலத்திற்கும் வடக்குப் பகுதியில் காவல் தெய்வமாக ஏழுலோகநாயகி விளங்குகிறாள். வாருங்கள் கோயிலை வலம் வருவோம்.

ஏழுலோக நாயகி எனும் திருப்பெயர் இவளுக்கு ஏன் ஏற்பட்டது. இந்த அன்னையின் திருவுருவம் மிகவும் ஆச்சரியமானது. பிராம்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, மாஹேந்திரி, சாமுண்டா என்று அழைக்கப்படும் சப்தமாதர்களின் ஒன்று சேர்ந்த உருவமே ஏழுலோகநாயகி ஆகும். ‘பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம் காத்தவளே’ என்ற அபிராமி அந்தாதியின் சொல்லுக்கேற்ப ஈரேழு உலகங்களையும் ரட்சிப்பதால் இவளை ஏழுலோகநாயகி என்றழைக்கின்றனர். இந்த அன்னையின் அமைப்புள்ள சிலை அபூர்வமானது என்கின்றனர். சிலையை நன்கு கூர்ந்து நோக்கியவர்கள் இது சோழர்காலத்திய வேலைப்பாடுகள் நிறைந்தது என்று கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லது எப்போதுமே சோழர்களாகட்டும், பல்லவர்களாகட்டும் சிவாலயங்கள் கட்டுவதற்கு முன்பு குறிப்பிட்ட எல்லையில் காளிக்கு கோயில் எழுப்பி, அதற்குரிய தேவி மகாத்மியம் போன்ற அம்பாளின் வீரத்தைப் பேசும் புராணங்களை பாராயணம் செய்து அங்கு காளியன்னையின் சாந்நித்தியத்தை நிறுத்துவார்கள். பலியிடுதலும் இருக்கும். அதுபோல திருமாந்துறை கோயில் கட்டும்போது ஊரின் எல்லையை காக்க நிறுவப்பட்டதே இந்த ஆலயம் என்றும், காலப்போக்கில் மறைந்து மீண்டும் வெளிப்பட்டிருப்பதாகவும் சிலர் கருதுகின்றனர்.

பார்ப்பதற்கு இந்தக் கோயில் சிறியதுதான். ஆனால், அருள் செய்வதிலும், கீர்த்தியிலும் மிகப் பெரிதானது. ஆரம்பத்தில் இந்த ஆலயத்திற்கு மக்கள் சென்று வரவே அஞ்சிய காலங்கள் உண்டு. ஆனால், இப்போது அன்னை சாந்தமூர்த்தியாக எல்லோரையும் அழைத்து அருள்பாலிக்கிறாள். இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதியில் தனி ராஜ்ஜியம் நடத்துகிறாள். சாதாரணமாக சப்த மாதாக்களுக்கு இருபுறமும் விநாயகரும், வீரபத்திரரும் இருப்பர். இந்த ஆலயத்திலும் விநாயகர், வீரபத்திரர்களுடன் அம்பிகை வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். நல்ல உயரமான சிலையில் கம்பீரக்கோலத்தில் வீற்றிருக்கிறாள். எட்டுத் திருக்கரங்களிலும் சூலம், வேதாளம், கத்தி, உடுக்கை, கபாலம், மணி, உலக்கை முதலிய ஆயுதங்களை ஏந்தி பரந்திருக்கிறாள். வலது காலை மடித்தும், இடது காலை தொங்கவிட்டும் அமர்ந்திருக்கும் கோலம் சிலிர்பூட்டுகிறது. கேசத்தில் நெருப்பு ஜ்வாலை பறப்பது போன்ற அமைப்பும், சற்று தலையை சாய்த்து பார்க்கும் கருணைக் கோலமும் உயிரை உருக்குகிறது.

விழுப்புரத்திற்கு அருகேயுள்ள திருவக்கரையில் வக்ரகாளி இருக்கிறாளோ அதுபோல இங்கு ஏழுலோகநாயகி வீற்றிருக்கிறாள். சோழ ராஜ்ஜியத்தை காக்கும் பொருட்டு சோழ மன்னர்கள் பெரிதும் நம்பியது காளியன்னையைத்தான். இன்றும் நிறைய பழமையான காளிகோயில்களை தஞ்சை மாவட்டம் முழுதும் தரிசிக்கலாம். அன்னையை உற்றுப் பார்க்கும்போது மெல்லிய புன்னகையும் உதட்டில் தெரிகிறது. அதேசமயம் ஒரு அரைக்கண் மூடிய நிலையில் ஆனந்த நிலையில் திளைப்பது போலுள்ளது. இந்த சந்நதியின் முன்பு நின்றாலே நம்முடைய வேண்டுதல்களை கேட்காமலேயே நிறைவேற்றித் தருவாள். மஞ்சள் குங்குமத்தின் வாசமும், சந்தனமும் பூக்களும் கலந்த மணமும் எப்போதும் அங்கு சுழன்றபடி இருக்கும். சில சக்தி உபாசகர்கள் இவள் தனித்து வனத்தில் அமர்ந்திருப்பதால் இவள் வனதுர்க்கையும் கூட என்று அபிப்ராயப்படுகிறார்கள். சில ஆயிரம் குடும்பங்களுக்கு இன்று வரை இவள்தான் குலதெய்வமாக காத்து வருகிறாள். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து ஜொலிக்கும் இந்த ஆலயத்தில் ஆடி மாதமானால் கூட்டம் அலைமோதும். அபிஷேகத்தின்போது அந்த நெடிய சிலையின் மீது வழியும் பாலபிஷேகம் காண கண்கோடி வேண்டும். சக்தியின் லீலைகளை காண விரும்புபவர்களும், சக்தி வழிபாட்டை மேற்கொள்ளும் உபாசகர்களுக்கும் இக்கோயில் ஒரு தவக்குகை எனில் மிகையில்லை. கும்பகோணம் & மயிலாடுதுறை பாதையில் ஆடுதுறையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சூரியனார் கோயிலுக்கு சென்று வருபவர்கள் அருகிலுள்ள இக்கோயிலையும் தரிசிக்கலாம்.

You may also like

Leave a Comment

fifteen + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi