Tuesday, May 14, 2024
Home » பள்ளி மாணவர்கள் ஒலிம்பியாட் மாநாட்டில் பங்கேற்பதற்கான தேர்வு

பள்ளி மாணவர்கள் ஒலிம்பியாட் மாநாட்டில் பங்கேற்பதற்கான தேர்வு

by Porselvi

இயற்பியல், வேதியியல், உயிரியல், விண்வெளி இயல் மற்றும் இளம் அறிவியல் துறைகளுக்கு பன்னாட்டு ஒலிம்பியாட் மாநாட்டில் பங்கேற்பதற்கான மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான தேசிய ஒலிம்பியாட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். உலகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் துறையில் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் “பன்னாட்டு ஒலிம்பியாட்” (International Olympiad) போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் உயர்ந்த நிலைத் தேர்வாகக் கருதப்படும் இத்தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் பல நாடுகளிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்கின்றனர். பன்னாட்டு ஒலிம்பியாட் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விண்வெளி இயல் மற்றும் இளம் அறிவியல் ஆகிய தலைப்புகளில் நடத்தப்பட்டு வருகின்றன.

பன்னாட்டு ஒலிம்பியாட் தேர்வினை இந்திய இயற்பியல் ஆசிரியர் கழகம் (Indian Association of Physics Teachers – IAPT) மற்றும் பாபா அறிவியல் கல்வி மையம் (Homi Bhabha Center for Science Education, TIFR (HBCSE)) ஆகியவை நடத்துகின்றன. தேர்வின் ஐந்து நிலைகள்: இந்திய அரசு, பன்னாட்டு ஒலிம்பியாட் மாநாட்டில் பங்கேற்பதற்கான மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக ”இந்திய தேசிய ஒலிம்பியாட் திட்டம்” (Indian National Olympiad) எனும் பெயரிலான திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மேற்காணும் அறிவியல் துறைகளில் பன்னாட்டு ஒலிம்பியாட் மாநாட்டில் பங்கேற்க தகுதியானவர்கள் ஐந்து நிலைகளில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
முதல் நிலைத் தேர்வாக தேசிய தரத் தேர்வு (National Standard Examination) இருக்கிறது. இத்தேர்வு பாடங்கள் வழியாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. முதல்நிலைத் தேர்வில் மாநிலங்கள் வாரியாக, ஒவ்வொரு பாடத்திலும் உயர் மதிப்பெண் பெற்றவர்களில் மொத்தம் 300 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பாடவாரியாக இந்திய தேசிய ஒலிம்பியாட் தேர்வு நடத்தப்பெறும். மாநிலம் மற்றும் ஒன்றியப் பகுதிகள் (State and UT) ஒவ்வொன்றிற்கும் குறைந்தது ஒரு மாணவராவது இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்நிலையில் தேர்வு பெற்றவர்களுக்கு, இந்திய தேசிய ஒலிம்பியாட் (Indian National Olympiad) எனப்படும் தேர்வு நடத்தப்பட்டு, அதிலிருந்து தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இரண்டாம் நிலையில் தேர்வு பெற்றவர்களுக்கு அறிவியல் திசையமைவு மற்றும் தேர்வு முகாம் (Orientation – cum – Selection Camp) எனப்படும் தேர்வு Homi Bhabha Center for Science Education, TIFR (HBCSE) மையத்தில் கருத்தியல் மற்றும் சோதனை வழி அமர்வுகள் (Theoretical & Experimental Sessions) மூலம் நடத்தப்படும்.இத்தேர்வுக்குப் பின்னர், வானியல் (Astronomy), இயற்பியல் (Physics) பிரிவுகளில் தலா 5 மாணவர்களும், வேதியியல் (Chemistry), உயிரியல் (Biology) பிரிவுகளில் தலா 4 மாணவர்களும், இளம் அறிவியல் (Junior Science) பிரிவில் 6 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். மூன்றாம் நிலையில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு புறப்பாட்டுக்கு முந்தைய முகாம் (Pre – Departure Camp) எனப்படும் பயிற்சி மற்றும் தேர்வு பாபா அறிவியல் கல்வி மையத்தில் (Homi Bhabha Center for Science Education, TIFR (HBCSE)) கருத்தியல் மற்றும் சோதனை வழி அமர்வுகள் (Theoretical & Experimental Sessions) வழியில் நடத்தப்படும் நான்காம் நிலையில் தேர்வு பெற்ற மாணவர்கள் ஐந்தாம் நிலையான பன்னாட்டு ஒலிம்பியாட் மாநாட்டிற்கு (International Olympiad) பாடங்கள் வாரியாக அனுப்பி வைக்கப்படுவார்கள். அங்கு இவர்களுக்கு கருத்தியல் மற்றும் சோதனை வழிப் போட்டிகள் (Theory & Experiment Competition) நடத்தப்பெறும்.

தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியல், விண்வெளி இயல் ஆகிய துறைகளிலான ஒலிம்பியாட் தேர்வுக்கு பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்குக் கீழுள்ள வகுப்புகளில் படித்து வரும் இந்திய மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ள முடியும். இளம் அறிவியல் ஒலிம்பியாட் தேர்வுக்கு பத்தாம் வகுப்பு அல்லது அதற்குக் கீழுள்ள வகுப்புகளில் படித்து வரும் இந்திய மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ள முடியும்.விருப்பமுள்ளவர்கள் வயதுவரம்பு, விண்ணப்பக் கட்டணம், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களை http://www.iapt.org.in அல்லது http://olympiads.hbcse.tifr.res.in எனும் இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
– எம். சுப்பிரமணி

You may also like

Leave a Comment

seven − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi