Sunday, April 14, 2024
Home » அரிதான இறைச்சி உணவுகள்!

அரிதான இறைச்சி உணவுகள்!

by Lavanya

சீனா உள்பட பல நாடுகளில் பல உயிரினங்களை இறைச்சியாக உண்ணுகிறார்கள். அங்கு பாம்பு, பல்லி, ஓணான் கூட சுவையான இறைச்சியாக மாறிவிடுகின்றன. சீனாவில் உள்ள ஓர் இறைச்சிக் கூடத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் உற்பத்தியாகி உலகுக்கு பரவியது என கூறுவது உண்டு. சரி… சீனாவின் கதையை விடுவோம். நம் இந்தியக் கதைக்கு வருவோம். இந்தியாவில் இப்போது பல புதிய வகையான இறைச்சி உணவுகள் வந்துவிட்டன. ஆடு, கோழி, கடல் உணவுகள் என வழக்கமான உணவுகளாக இருந்தாலும், அதை வித்தியாசமான செய்முறையில் நாம் சாப்பிடத் துவங்கி இருக்கிறோம். அதேசமயம் இந்தியாவில் இதற்கு முன்பு சில இறைச்சி வகைகள் உண்ணப்பட்டு, இப்போது அந்த இறைச்சிகளை உண்ணும் வழக்கம் அரிதாகி வருகிறது. அவ்வாறு அரிதான இறைச்சி உணவுகளை இங்கு காண்போம்!

வயல் நண்டு

நாட்டுப்புற மக்கள் பிற இறைச்சி வகைகளை உண்பதைப் போன்றே நண்டுக்கறியையும் உண்ணுகின்றனர். வயல்வெளியில் கிடைக்கும் நண்டை கிராமப்புற மக்கள் உண்ணுகின்றனர். கடல் நண்டைப் பிறர் உண்ணுகின்றனர். நெல் வயலின் வரப்புகளில் வளை தோண்டி வாழும் நண்டுகளை வளைக்குள் கைவிட்டு இலாவகமாகப் பிடிக்கக் கற்று வைத்துள்ளனர் பெண்கள். நண்டை வெளியில் வரவழைத்துப் பிடிக்கும் உத்தியையும் பயன்படுத்துகின்றனர்.சிறு குச்சியில் உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகளைக் கட்டி ‘கலகல’வென ஒலி எழும்பும்படி அமைத்துக் கொள்கின்றனர். இக்கருவியை வளைக்கு அருகில் கொண்டுசென்று ஒலி எழுப்புவர். வளைக்குள்ளிருக்கும் நண்டு தண்ணீர் வருவதாகக் கருதி மேலே வரும். அப்போது நண்டைப் பிடித்துக்கொள்வர். இவ்வாறு பிடிக்கப்பட்ட நண்டுகளைச் சொம்பில் சேகரித்துச் சென்று குழம்பு வைத்து உண்ணுகின்றனர். ஒரு சிலர் இடித்து ரசம் வைத்து உண்பதும் உண்டு. இது ஜன்னியைக் குணப்படுத்தும். மேலும் நண்டு இறைச்சி சளியைக் குணப்படுத்தும் என்பதால் நண்டு பிடித்துவர செய்து உண்ணுகின்றனர். ஒரு சிலர் தெருவில் வந்து விற்கப்படும் கடல் நண்டை வாங்கிச் சமைத்து உண்ணுகின்றனர். கடல் நண்டு உண்பவர்கள் வயல் நண்டு உண்பதை இழிவாகக் கருதுகின்றனர். ஆனால் கடல் நண்டைவிட வயல் நண்டே உடலுக்கு நன்மை பயப்பதாகப் பதார்த்த குணபாடம் கூறுகிறது. கடல் நண்டுக் கறியால் வயிற்றுநோய், வாதநோய், கடுவன், சொறி, இரத்த கிராணி ஆகியவை உண்டாகும். வயல் நண்டால் வாதக்கடுப்பு, தூங்க ஒட்டாத கப நோய், குடல் இரைச்சல் ஆகியவை போகும். உடல் நல அடிப்படையில் கடல் நண்டையும் வயல் நண்டையும் ஒப்பிடும்போது வயல் நண்டே உயர்வானதாகக் கருத வேண்டியுள்ளது.

அணில்

அணில் இறைச்சி உண்ணும் வழக்கம் சில குறிப்பிட்ட தரப்பினரிடம் காணப்படுகிறது. அவர்கள் தினமும் ஏதாவது ஒரு இறைச்சி வகையை உண்ண வேண்டும் என்று கருதுகிறார்கள். வலை விரித்தோ, ஈட்டியால் குத்தியோ அணில்களைச் சேகரிக்கிறார்கள். சிறுவர்கள் சுண்டு வில்லால் அடித்துப் பிடிக்கும் ஒன்றிரண்டு அணில்களை அந்த இடத்திலேயே தீயிலிட்டுச் சுட்டு உண்பர். பெரியவர்கள் பிடிக்கும் அணில்களைக் குழம்பு வைத்தோ, வறுத்தோ உண்ணுகின்றனர். இறைச்சி உணவு உண்பவர்கள் கூட அணிலை உண்பது பாவம் எனக் கருதுகின்றனர். ராமர் இலங்கைக்குச் சென்றபோது கடலில் அணை கட்டுவதற்கு அணிலும் மண்ணெடுத்துச் சென்றதாம். அதனைப் பரிவோடு ராமர் எடுத்து அதன் முதுகில் வருடிவிட்டார். அதனால்தான் அணில் முதுகில் மூன்று கோடுகள் உள்ளன. அப்படிப்பட்ட அணிலை உண்பது பாவம் என்ற மனப்போக்கு மக்களிடம் காணப்படுகிறது. அதனால் அணில் உண்ணுபவர்கள் பாவிகள் என்று சிலர் கருதுகிறார்கள்.

ஆமை

ஆமை இறைச்சியையும் உண்ணும் வழக்கம் சில தரப்பினரிடம் காணப்படுகிறது. ஆமை இறைச்சியை சங்ககாலத் தமிழர்கள் உண்டனர் என்பதற்கான சான்றுகள் உள்ளன. மீன் பிடித்தல், உப்பை விளைவித்தல், மீனையும், உப்பையும் விற்றல் ஆகியவற்றைத் தொழிலாகக் கொண்ட நெய்தல் நில மக்களான பரதவர்கள் ஆமை இறைச்சியை உண்டனர் என்பதைப் பட்டினப்பாலை கூறுகிறது.“வயல் ஆமைப் புழுக்கு உண்டும்….” (பட்டினப்பாலை 63, 64) என்ற அடியால் நெய்தல் நில மக்கள் ஆமையை உண்டனர் என்பதை அறிய முடிகிறது. இன்றும் சிலர் ஆமை இறைச்சியை உண்டு வருகிறார்கள். சங்க காலத்தில் உப்பு வணிகம் செய்து வாழ்ந்த பரதவர் வழித்தோன்றல்களா இந்தத் தரப்பினர்? என்பது ஆய்வுக்கு உரியது.பொதுவாக ஆமை என்பது மக்களால் வெறுக்கப்படும் ஓர் உயிரினம். ஆமை வீட்டுக்குள் நுழையக்கூடாது என்பது மக்களின் நம்பிக்கை. ஒரு வீட்டில் ஆமை புகுந்தால் அந்த வீடு உருப்படாது என்பர். `ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது’ என்பது பழமொழி. அதனால் ஆமையைப் பலர் உண்பதில்லை. ஆனால் சில தரப்பினர் மட்டும் உண்ணுகிறார்கள். ஆமையை உண்டால் உடம்புக்குக் குளிர்ச்சி. அதனால்தான் உண்ணுகிறோம். வெயிலில் அலைவதால் உடலில் ஏற்படும் உஷ்ணத்தைத்தணிக்கவே இதுபோன்ற கறிகளை உண்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆமைக்கறி பசியின்மை, பித்தம், உள்மூலம், உட்சூடு, மலபேதி ஆகியவைகளை நீக்கும் என்று பதார்த்த குணபாடத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதை இங்கே கவனத்தில் கொள்ளலாம்.

எலிக்கறி

காவிரியில் தண்ணீர் திறந்துவிடப் படாமையால் காவிரி டெல்டாப் பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக அப்பகுதி விவசாயிகள் எலிக்கறி உண்டனர் என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தோம். கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எலிக்கறி உண்ணும் வழக்கம் இயல்பாகவே காணப்படுகிறது. நெல் வயல்களில் பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் எலிகளைக் கிட்டி வைத்துப் பிடிப்பது வழக்கம். ஒரு சிலர் மின்வேலி அமைத்துப் பிடிப்பர். அதிகாலை சென்று வயலில் கிட்டிகளிலும், மின் வேலியிலும் மாட்டி இறந்து கிடக்கும் எலிகளைச் சேகரித்துச் சென்று வறுத்து உண்பர். எலி இறைச்சியிலும் ஒருசில மருத்துவக் குணங்கள் உண்டு. செரிப்பின்மை, வயிற்றுநோய், பீலிக நோய், மார்பு வலி, பிளவை, தினவு ஆகியவை நீங்கும். உடல் வனப்பும், வீரிய விருத்தியும் உண்டாகும் என எலி இறைச்சியின் மருத்துவ குணங்கள் குறித்து கூறப்படுகிறது.

கீரிப்பிள்ளை

கீரிப்பிள்ளைகள் நடமாடும் இடங்களைப் பகலில் கண்காணித்து இரவில் கண்ணி வைத்து அதிகாலையிலேயே சென்று கண்ணியில் சிக்கிய கீரிப்பிள்ளைகளைப் பிடித்து வந்து சமைத்து உண்பதும் உப்புக் குறவர்களின் வழக்கம். பாம்பிடமிருந்து குழந்தையைக் காப்பாற்றிய கீரிப்பிள்ளையின் கதை அனைவருக்கும் தெரிந்ததே. ‘கீரிப்பிள்ளை’ என்னும் பெயரே அதனைப் பிள்ளைபோல் கருதவேண்டும் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது. அதனையும் உண்பது பாவம் என்றே அதனை உண்ணாதவர்கள் கருதுகின்றனர். ஆட்டு இறைச்சியோ, மாட்டு இறைச்சியோ வாங்கி உண்ணுமளவுக்கு பொருளாதார வசதியின்மையால்தான் காட்டிலும் மேட்டிலும் கிடைப்பதைப் பிடித்து உண்பதாகக் குறவர்கள் கூறுகின்றனர். கீரிப்பிள்ளை இறைச்சியை உண்டால் உடம்புக்குப் பலம் கிடைக்கும் எனக் குறவர்கள் நம்புகின்றனர். கீரியிறைச்சியை உண்டால் தைரியமும், சுக்கில விருத்தியும் உண்டாகும். அர்ப்ப விடம், நமைச்சல், பல்லரணை ஆகியவை போகும் என்று கீரியிறைச்சியின் தன்மை குறிப்பிடப்படுகிறது.

இரத்தின புகழேந்தி.

You may also like

Leave a Comment

1 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi