தூத்துக்குடி: தூத்துக்குடி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.3.37 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி டபுள்யூ.ஜி.சி ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று மாலை தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்த உதவியாளர் ஒருவரிடம் ரூ.3 லட்சத்து 37 ஆயிரம் கணக்கில் வராத பணம் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார், அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த சோதனை காரணமாக அலுவலகத்தில் இருந்து யாரையும் வெளியில் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இந்த சோதனை இரவு வரை நீடித்தது.