கோவை: பாஜ மகளிர் அணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கடந்த ஒரு வாரமாக சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோராம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். கடந்த மாதம் 30ம் தேதி மிசோராமில் தேர்தல் பிரசாரத்தை முடித்த அவர், விமானம் மூலம் கோவை திரும்பினார். அப்போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. சாதாரண காய்ச்சல் என நினைத்து அதற்கான மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து, கொரோனா பரிசோதனை செய்தார். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் கோவை சூலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு, தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.