திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நூதன முறையில் அப்பாவி பெண்களை ஏமாற்றி பல கோடி மோசடி செய்து தப்பிய பெண்ணுக்கு போலீசார் வலைவீசியுள்ளனர். அசேஷம் எஸ்பிஐ காலனியில் லாரி ஓட்டுனர் அசோகன், மனைவி ராஜலட்சுமி சில ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர். எஸ்பிஐ காலனி பெண்களிடம் தனக்கு பண்ணை இருப்பதாவும், ஆனால் தற்போது கஷ்டமான சூழ்நிலையில் உள்ளதாக கூறியுள்ளார். பணம் தேவைப்படுவதால் மகளிர் சுயஉதவிக்குழுவில் தங்கள் பெயரில் கடன் பெற்று தந்தால் கட்டிவிடுவதாகக் ராஜலட்சுமி கூறியுள்ளார்.
ராஜலட்சுமி கண்ணீர்விட்டு கதறியதால் அப்பகுதி பெண்கள் ரூ.3 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை கடன் வாங்கி கொடுத்துள்ளனர். 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஒருவருக்கு தெரியாமல் ஒருவரிடம் கடன் பெற்று பல கோடி சுருட்டிக்கொண்டு ராஜலட்சுமி தப்பினார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு ராஜலட்சுமி குடும்பத்துடன் தலைமறைவானார். மோசடி செய்து தலைமறைவான ராஜலட்சுமியை கைது செய்து பணத்தை மீட்டுத்தர பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.