Wednesday, June 19, 2024
Home » அபாண்டமாக பேசும் ஒருவர் 10 ஆண்டு கால பிரதமராக பதவி வகித்தது இந்தியாவுக்கே அவமானமாகும் : செல்வப்பெருந்தகை விமர்சனம்

அபாண்டமாக பேசும் ஒருவர் 10 ஆண்டு கால பிரதமராக பதவி வகித்தது இந்தியாவுக்கே அவமானமாகும் : செல்வப்பெருந்தகை விமர்சனம்

by Porselvi
Published: Last Updated on

சென்னை : தோல்வி பயத்தால் நிதானமிழந்து ஆத்திரம் பொங்க கடும் வார்த்தைகளால் பிரதமர் மோடி பரப்புரை செய்வதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்தியில்,”நாடாளுமன்றத் தேர்தலுக்கான நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டிருக்கிற நிலையில் நிதானமிழந்து ஆத்திரம் பொங்க கடுமையான வார்த்தைகளால் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். தொடக்கத்தில் காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பேசி வந்தவர், பின்பு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து இட்டுகட்டி அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டார்.

‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி கோயிலை புல்டோசரால் இடித்து விடுவார்கள்” என்று அபாண்டமாக காழ்ப்புணர்ச்சியின் உச்சத்தில் வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார். இத்தகைய பேச்சுகளை பேசுகிற ஒருவர், 10 ஆண்டு காலம் பிரதமராக பதவி வகித்தது இந்தியாவிற்கே அவமானமாகும். இப்படி நச்சுக் கருத்தை கூறுகிற ஒரு பிரதமரை பெற்றதற்காக ஒவ்வொரு இந்தியரும் வெட்கி தலைகுனிய வேண்டும்.

எதையாவது பேசி, எந்த உத்தியையாவது கையாண்டு மூன்றாம் முறை ஆட்சியை கைப்பற்ற துடிக்கிற பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் வாய்க்கு வந்தபடி நச்சுக் கருத்துகளை கூறிக் கொண்டிருக்கிறார்.

வடஇந்தியாவில் சமீபகாலமாக உத்தரபிரதேச யோகி ஆதித்யநாத்தால் அறிமுகம் செய்யப்பட்ட புல்டோசர் அரசியல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. பா.ஜ.க. ஆட்சியை எதிர்க்கிறவர்களது வீடுகளையும், கடைகளையும் புல்டோசர் மூலமாக இடித்து தரைமட்டமாக்குவது யோகி பாபாவின் அரசியலாக இருக்கிறது.

இதற்கு எதிராக உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனங்களைக் கூறி புல்டோசர் நடவடிக்கைகளுக்கு எதிராக தடை விதித்திருக்கிறது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி ‘புல்டோசரை எங்கே பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் சென்று இவர்கள் கற்றுக் கொள்ள வேண்டுமென்று” கூறுவதை விட கீழ்த்தரமான அரசியல் வேறு எதுவும் இருக்க முடியாது.

பா.ஜ.க. தலைவராக மோடி எது வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், 140 கோடி இந்தியர்களுக்கு பிரதமராக இருக்கிற ஒருவர் இப்படி தரம் தாழ்ந்து, சட்டத்திற்கு விரோதமாக நான்காம் தர அரசியல்வாதியாக பேசுவதன் மூலம் தாம் வகிக்கிற பதவியை நாளுக்கு நாள் சிறுமைப்படுத்தி, கொச்சைப்படுத்தி வருகிறார். இத்தகைய பேச்சுகளை மதநல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள எவருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

2014 மக்களவைத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் புல்வாமா, பாலகோட் ராணுவ தாக்குதலை திசைதிருப்பி அரசியல் ஆதாயம் தேடி, 2019 தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல 2024 தேர்தலில் ராமர் கோயிலை பயன்படுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று பிரதமர் மோடி பகல் கனவு காண்கிறார்.

அந்த கனவு நிறைவேறுவதற்கு வாய்ப்பில்லை என்ற நிலையில் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி வன்முறை அரசியலுக்கு தூபம் போடுகிற வகையில் புல்டோசர் தாக்குதல் குறித்து பேசுகிறார். வினாச காலத்திலே விபரீத புத்தி ஏற்படும் என்பார்கள். மோடிக்கு வினாச காலம் வந்து விட்டது. அதனால் விபரீதமான கருத்துகளை கூறி வருகிறார்.

விரக்தியின் உச்சத்தில் உள்ள மோடி, மூன்றாவது முறை ஆட்சிக்கு வர முடியாது என்பதை தமது உளவுத்துறையின் மூலம் முற்றிலும் அறிந்து விட்ட நிலையில் நாட்டு மக்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிற வகையில் பாசிச, வெறித்தனமான கருத்துகளை கூறி வருகிறார். இந்த கருத்துகளை நாட்டு மக்கள் நிராகரித்த நிலையில் உரிய பாடத்தை வருகிற5, 6, 7 கட்ட தேர்தல்களில் புகட்டுவதற்கு மக்கள் தயாராகி விட்டார்கள்.

தொடக்கத்தில்370, 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பேசிய பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இப்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் என்று தோல்வி பயத்தில் அடிக்கடி பேச ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் எதிர்பார்த்த கணிப்புகளுக்கு மாறாக மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு படுதோல்வி ஏற்படுவது உறுதியாகியிருக்கிறது.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதை போல மற்ற மாநிலங்களில் வெற்றி பெற முடியாது என்று நடுநிலை அரசியல் கணிப்பாளர்களும், சமூக ஊடகவியலாளர்களும் பகிரங்கமாக கருத்துகளை கூறி வருகிறார்கள். கடந்த காலத்தில் தேர்தல் பரப்புரைகளில் தொலைக்காட்சிகளின் பங்கு அதிகரித்து வந்ததால் அதனுடைய உரிமையாளர்களை மிரட்டி பா.ஜ.க.வுக்கு ஆதரவாக திருப்பி விடப்பட்டது.

ஆனால், அதற்கு எதிராக சமூக ஊடகங்களின் ஆதிக்கத்தினால் உலகம் முழுவதும் மோடியின் பாசிச ஆட்சிக்கு எதிராக செய்திகள் வெள்ளம் போல் குவிந்து வருகின்றன. இந்த எதிர்ப்பு வெள்ளத்தில் பா.ஜ.க. அடித்து செல்லப்படுவதோடு, மோடியின் ஆட்சியும் தூக்கி எறியப்படும் என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

இதைத் தான் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பா.ஜ.க. மீண்டும் நிச்சயம் ஆட்சிக்கு வர முடியாது என்று உறுதிபட கூறி வருகிறார். மக்களின் நாடித்துடிப்பை அறிந்த தலைவர் ராகுல்காந்தியின் கடும் உழைப்பிற்கு தேர்தல் களத்தில் உரிய வெற்றி கிடைக்கப் போகிறது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது மக்களின் விருப்பமாக அமைந்து விட்டது. எனவே, மோடியின் கோயபல்ஸ் பிரச்சாரத்தினால் இந்தியா கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது,”இவ்வாறு தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

5 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi